சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்ற தமிழர் திருவிழா.
சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஸ்ரீ கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு தோறும் தமிழர் திருநாளாம் தைத்திங்கள் விழா வெகு உற்சாகத்துடனும் கோலாகலமாகவும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு தைத்திங்கள் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் செயலாளர் விஜய் கணேஷ் பொருளாளர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் விமலாதித்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழர்களின் பாரம்பரியமிக்க இந்த விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்தும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் தமிழர்களின் பாரம்பரிய உணவு தானியங்களான வரகு சாமை உள்ளிட்ட தானியங்களை கொண்டு பொங்கல் வைத்து தமிழர் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக நீண்ட வரிசையில் மாணவ மாணவிகள் புது பானையில் பொங்கலிட்டு பொங்கி வரும் போது குலவையிட்டு இயற்கைக்கு வழிபாடு செய்தனர்.
இந்த விழாவில் மாணவ மாணவிகளுக்கு உரியடித்தல் கரும்பு உடைத்தல் கயிறு இழுத்தல் கபடி போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவிகளுக்கு கோலம் மெஹந்தி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. பின்னர் மாணவ மாணவிகள் திரைப்பட பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.



0 coment rios: