சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் திருமணிமுத்தாற்றின் புனிதத்தை மீட்டெடுக்க, சேலம் மாவட்ட அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் சிறப்பு வழிபாடு.
சேலம் மாநகரின் ஊடாகப் பாய்ந்து, நாமக்கல் மாவட்டம் நஞ்சை எடையார் கிராமத்தில் காவிரியில் கலக்கும் ஒரு முக்கிய துணை நதியே திருமணிமுத்தாறு ஆகும். சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைத்தொடர் ( ஏற்காடு மலை ) பகுதியில் திருமணிமுத்தாறு உருவாகிறது.
சேலம் மாநகர் மற்றும் பல ஊர்கள் வழயாகப் பாய்ந்து, சுமார் 120 கிலோமீட்டர் தூரப் பயணத்திற்குப் பிறகு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே நஞ்சை எடையார் என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க திருமணிமுத்தாற்றின் கரையில் புகழ்பெற்ற, கோட்டை அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன், உத்தமசோழபுரம் கரபுரநாதசுவாமி கோயில் போன்ற பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் அமைந்துள்ளன.
இப்பகுதியில் உள்ள சாய ஆலை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆற்றில் கலப்பதால், மழைக்காலங்களிலும் சரி, மற்ற காலங்களிலும் ஆற்று நீர் மாசடைந்து வெள்ளை நிற நுரை பொங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மாசடைவதுடன், பொதுமக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படுவதாகக் கிராம மக்கள் தொடர் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கைகளும் மனுக்களும் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருமணிமுத்தாற்றின் பெருமைகளை மீட்டெடுக்கவும், ஆட்டின் புனித தன்மையை காக்கவும் மற்றும் இனி வரும் காலங்களில் குப்பையில் மற்றும் கழிவுகளை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும் சேலம் மாவட்ட திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சங்கத்தின் மாநில இணை செயலாளர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சத்ய சுதன், கோக் ரவி, மாவட்டத் துணைச் செயலாளர் நேதாஜி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் சர்மிளா சரவணன், கவிதா பேபி ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணிமுத்தாற்றின் கரையில் ஆகம விதிமுறைப்படி அகழ்விளக்குகளை இயக்கியும் கைகளில் அகல் விளக்குகளை ஏற்றியும் புனித வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு குறித்து அனைத்து திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தின் மாநில இணை செயலாளர் சண்முகவேல் நமது கூறுகையில்,
பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது இந்த மணிமுத்தாறு என்றும் இந்த புனித ஆற்றில் முத்து குளித்து எடுக்கப்பட்ட முத்து இன்றும் சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள ஸ்வர்ணாம்பிகை அம்மனின் மூக்கில் இருப்பதாகவும் இப்படி பெருமைமிகு முத்தாறு இன்று இந்த பகுதியில் உள்ள மார்க்கெட்டில் மிகுதியாகும் கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டியாகவும் சாயக்கழிவு நீர் கலந்து மாசடைந்து துர்நாற்றம் வீசும் பகுதியாக மாறியுள்ளது வேதனைக்குரியதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த புனித ஆரை பாதுகாக்க இனிவரும் காலங்களில் மணிமுத்தாறு செல்லும் பகுதியில் உள்ள மார்க்கெட் வர்த்தக வணிக நிறுவனங்களில் இருந்து கொட்டப்படும் கழிவுகளை தடுக்க அமைப்பின் சார்பில் முயற்சி மேற்கொள்ள உள்ளதோடு இது சம்பந்தமாக கூடிய விரைவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க உள்ளதாகவும் சண்முகவேல் தெரிவித்தார்.



0 coment rios: