சேலம்,
S. K.சுரேஷ்பாபு.
சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் (IIHT) சார்பில் 12வது தேசிய கைத்தறி தின விழா சிறப்பாக நடைபெற்றது.
சேலம், இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் (IIHT) சார்பில் 12வது தேசிய கைத்தறி தின விழா, இன்று (07.08.2026) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி காலை 8.00 மணிக்கு, முனைவர் டாக்டர் பி. தென்னரசு அவர்கள் கைத்தறி தின விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி சேலம் நகர சாலைகளில் நடைபெற்றது. இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உற்சாகமாக பங்கேற்று, கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கைத்தறி ஆடைகளின் முக்கியத்துவத்தையும், கைத்தறிப் பொருட்களை பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய கைத்தறி விருது பெற்ற திரு. வி. மோகனசுந்தரம் (கோபிச்செட்டிபாளையம், ஈரோடு) மற்றும் மாநில கைத்தறி விருது பெற்ற திரு. கே. அப்புசாமி (சென்னிமலை, ஈரோடு) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விருந்தினர்கள் மாணவர்கள் தயாரித்திருந்த சுவரொட்டி, கலை மற்றும் கைவினைப் பொருட்கள், துணி ஓவியம் ஆகிய கண்காட்சிகளை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர். இதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றுதல், மாணவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சி, பேச்சுப்போட்டி மற்றும் பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன.
பின்னர் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் டாக்டர் ஜெ. பாலாஜி வரவேற்புரை வழங்கினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முனைவர் டாக்டர் பி. தென்னரசு அவர்கள் தேசிய கைத்தறி தினத்தின் முக்கியத்துவம், கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பு மற்றும் கைத்தறி தொழிலின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் தங்களது அனுபவங்களையும், கைத்தறி தொழிலின் எதிர்கால வளர்ச்சி குறித்த கருத்துகளையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இறுதியாக, இளநிலை விரிவுரையாளர் (ஜவுளித்துறை) திரு. பர்மார் தர்மேந்திர குமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் 12வது தேசிய கைத்தறி தின விழா இனிதே நிறைவுற்றது.



0 coment rios: