வியாழன், 1 ஆகஸ்ட், 2024

ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்காணல்

ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்காணல்

ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மேலாளர் கவின் கூறியிருப்பதாவது:- 

108 ஆம்புலன்ஸ் சேவை ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கான நேர்முக தேர்வு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நாளை மறுநாள் (ஆக.3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

ஓட்டுநர் பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஆண், பெண் இரு பலரும் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்

இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேஜ் வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரி பார்ப்பதற்காக கொண்டு வர வேண்டும். இப்பணிக்கு, மாத ஊதியம் ரூ.15,820 மொத்த ஊதியமாக வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் வழங்கப்படும்.

மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கான அடிப்படைத் தகுதிகள், பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (12 ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ், பிஎஸ்சி, ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோடெக்னாலஜி இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு தேர்வன்று 19க்கு குறையாமலும் 30க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இப்பணிக்கு மாத ஊதியம் 16,020 மொத்த ஊதியமாக வழங்கப்படும். மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான, மற்றும் மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். முகாமில் தேர்வு தேர்வு செய்யப்படுபவர்கள் 50 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

மேலும், விவரங்கள் அறிய 044-28888060 எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


கொடிவேரி அணை மூன்று நாட்களுக்கு மூடல்

கொடிவேரி அணை மூன்று நாட்களுக்கு மூடல்

இதுதொடர்பாக இன்று (1ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் அதிகப்படியான மழைபெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பவானிசாகர் அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து வர வாய்ப்புள்ளது.

மேலும், பாசனத்திற்கு பவானிசாகர் அணையிலிருந்து, பவானி ஆற்றில் 1155 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆடிப்பெருக்கு முன்னிட்டு நாளை மறுதினம் (3ம் தேதி) மற்றும் 4ம் தேதி ஆகிய நாட்களில் கொடிவேரி அணைக்கட்டிற்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகைப் புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், எந்நேரமும் பவானி ஆற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நாளை (2ம் தேதி) வெள்ளிக்கிழமை முதல் ஆகஸ்ட் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று தினங்களுக்கு மட்டும் கொடிவேரி அணைக்கட்டு தற்காலிகமாக மூடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!


தமிழக முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது 
அருந்ததியர்களுக்கு 3 % உள் இடஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியான நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அருந்ததியர்களுக்கான உள் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்ததது. தீர்ப்பை வரவேற்கும் வகையில் பெருந்துறை விஜயமங்கலம், கள்ளியம்புதூர் அருந்ததியர் காலனியில்  பெருந்துறை தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி தலைமையில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நல மாவட்ட துணை அமைப்பாளர் லாரன்ஸ், மாவட்ட பிரதிநிதி தூயமணி, கிளைச் செயலாளர்கள் கே.ஆர்.பழனிசாமி, காலனி சந்திரன், ஆதிதிராவிடர் நல ஒன்றிய அமைப்பாளர் ரவி உள்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.