திங்கள், 19 ஆகஸ்ட், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (21ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (21ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கங்காபுரம், சென்னம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (21ம் தேதி) புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பேரோடு, குமிளம்பரப்பு, கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தயிர்பாளையம், ஆட்டையம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு, கங்காபுரம், மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம், கவுண்டன்பாளையம், ஆலுச்சாம்பாளையம் மற்றும் ஆலுச்சாம்பாளையம் புதூர்.

அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கண்ணாமூச்சி, கொமராயனூர், தொட்டிக்கிணறு, கிட்டம்பட்டி, முரளி புதூர், வெள்ளக்கரட்டூர், சனிசந்தை, விராலிகாட்டூர், ஆலமரத்தோட்டம், குருவரெட்டியூர், புரவிபாளையம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம் மற்றும் ஜி.ஜி.நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் டாக்டர் வீட்டு கொள்ளை: மேலும் ஒருவர் கைது; 66.5 பவுன் நகை மீட்பு

ஈரோட்டில் டாக்டர் வீட்டு கொள்ளை: மேலும் ஒருவர் கைது; 66.5 பவுன் நகை மீட்பு

ஈரோடு சம்பத் நகர் அருகே உள்ள சஞ்சய் நகர் ராணி வீதியை சேர்ந்தவர் பிரபாத். மனைவி ராணி சுப்ரியா (வயது 42). ஹோமியோபதி டாக்டர். கடந்த 30ம் தேதி இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 219 பவுன் நகை, ரூ.55 ஆயிரம் ரொக்கம் மற்றும் 25 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் தனிப்படை அமைத்து, கடந்த 12ம் தேதி சென்னை ஆவடி, சுரக்காபாளையம் பகுதி அகில் குமார் (எ) வெள்ளை (வயது 21), சென்னை திருமுல்லைவாயில், தென்றல் நகர் சஞ்சய் (எ) தனசேகர் (வயது 19) ஆகிய இருவரையும் கரூரில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 பவுன் நகை, ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இக்கொள்ளையில் தொடர்புடைய சென்னை அம்பத்தூர் பானுனா நகர் புதூரைச் சேர்ந்த நரி (எ) நரேந்திரன் (21) என்பவரை திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் போலீசார் நேற்று (19ம் தேதி) கைது செய்தனர். அவரிடம் இருந்து, 66.5 பவுன் நகை, 25 கிராம் வெள்ளி பொருட்களை மீட்டனர்.
சத்தியமங்கலம் அருகே போலி இரிடியம் கொடுத்து பணம் பறித்த 3 பேர் கைது

சத்தியமங்கலம் அருகே போலி இரிடியம் கொடுத்து பணம் பறித்த 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 43). கூலித்தொழிலாளி. இதேபோல், சத்தியமங்கலம் அருகே உள்ள தேள்கரடு அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 43).
இவரது நண்பர்களான கரட்டூரைச் சேர்ந்த ஜீனத்குமார் (வயது 27), கொமராபாளையத்தைச் சேர்ந்த பிரபு (வயது 36), அன்னூரைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் சுப்பிரமணியனுக்கு பழக்கமாகி உள்ளனர்.

இவர்கள் 4 பேரும் தங்களிடம் இரிடியம் சொம்பு உள்ளதாகவும், விற்று கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் சுப்பிரமணியனிடம் கூறியுள்ளனர். சொம்பை காட்டுமாறு சுப்பிரமணியம் கேட்டதற்கு, 4 பேரும் ரூ.10 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர்.

இதை நம்பி அவர்களிடம் ரூ.10 ஆயிரத்தை சுப்பிரமணியம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட 4 பேரும் கொமராபாளையத்தில் உள்ள தவளகிரி ஆண்டவர் மலைக்கோவில் அருகிலுக்கு வரவழைத்து சொம்பை காட்டியுள்ளனர்.

அது போலி என்பதை உணர்ந்த சுப்பிரமணியம் கொடுத்த ரூ.10 ஆயிரம் ரூபாயை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால், பணத்தை திரும்ப தர மறுத்த 4 பேரும் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பின்னர், இதுகுறித்து சுப்பிரமணியம் சத்தியமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில், பாண்டியன், ஜீனத்குமார், பிரபு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.


உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் சேலம் மாவட்ட தொல்லியல் துறைக்கு வன்மையான கண்டனம்... சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி ஆதங்கம்...

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் சேலம் மாவட்ட தொல்லியல் துறைக்கு வன்மையான கண்டனம்... சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி ஆதங்கம்...

சேலம். 
S.K.சுரேஷ் பாபு

சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தலை வெட்டி முனியப்பனாக கருதப்படும்,  புத்தருக்கு காவல்துறை பாதுகாப்புடன் பௌர்ணமி தியானத்தில் ஈடுபட்ட சேலம் புத்தா டிரஸ்ட்  அமைப்பினர். புத்தர் சிலை தான் என்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அலட்சியப்படுத்தும் தொல்லியல் துறைக்கு சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி கடும் கண்டனம்.

சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே தலைவெட்டி முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. 
இந்தக் கோவிலில் உள்ளது முனியப்பன் சிலையா அல்லது புத்தரின் சிலையா என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில்,  உயர்நீதிமன்றம் இந்தக் கோவிலில் உள்ளது  புத்தருடையது தான் என்று இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இதனை எடுத்து சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் பௌர்ணமி நாளன்று புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் புத்தருடைய சன்னிதானத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். 
அதன் அடிப்படையில், சேலம் புத்தா டிரஸ்ட் அமைப்பின் சார்பில் தலைவர் ராம்ஜி மற்றும் அவரது அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் பௌர்ணமி நாளான இன்று புத்தருக்கு மரியாதை செய்து தியானம் செய்ய தலைவெட்டி முனியப்பன் கோவிலுக்கு வந்தனர்.
இதனை அடுத்து  மூலஸ்தானத்திற்கு சென்ற ராம்ஜி உள்ளிட்ட த்த அமைப்பைச் சார்ந்தவர்கள் தலைவெட்டி முனியப்பனாக கருதப்படும் சிலையில் இருந்து அலங்காரத்தை முழுமையாக அழித்துவிட்டு அவர்கள் தியானத்தில் ஈடுபட்டனர்.  அதோடு மட்டுமல்லாமல் பௌத்த மதத்திற்கு ஆதரவாக பல்வேறு உறுதிமொழிகளையும் ஏற்றினர்.
சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி அவர்கள் தலைமையில் ஜெய்பீம் புத்த நாகா, மான் அம்பேத்கர், போதிதர்மன், கௌதம மர்கஸ், முருகன் மற்றும் சீவகன் உள்ளிட்டோர் அங்கிருந்த புத்தர் சிலைக்கு சிறப்பு தியானத்தில் ஈடுபட்டதோடு புத்தம் சரணம் கச்சாமி என்ற சரண கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். 
இதுகுறித்து சேலம் புத்தா டிரஸ் தலைவர் ராம்ஜி நம்மிடையே கூறுகையில், இந்தக் கோவிலில் உள்ளது தலை வெட்டி முனியப்பன்  அல்ல என்றும்  புத்தர் சிலை தான் என்று தீர்ப்பு வழங்கிய பிறகும் தற்பொழுது வரை இங்கு இந்து முறைப்படி தலை வெட்டி முனியப்பனாக இங்கு வழிபாடு நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த ராம்ஜி இந்த கோவில் முன்புறமாக அமைக்கப்பட்டுள்ளது தலை வெட்டி முனியப்பன் கோவில் என்று பெயர் பலகையை அகற்றிவிட்டு புத்த விகார் என்று பெயர் பலகையை வைக்க வேண்டும் என்றும் நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட ராம்ஜி சென்னை உயர் நீதிமன்றம் இந்த கோவிலில் உள்ள பிரச்சனை தொடர்பாக வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தொல்லியல் துறை செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது என்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சேலம் மாவட்ட தொல்லியல் துறை செயல்பட்டு வருவதாகவும் ஆதங்கப்பட்டார்.
துய்யம்பூந்துறை ஊராட்சி வார்டு உறுப்பினரிடம் சாதிய பாகுபாடு: ஈரோடு ஆட்சியரிடம் புகார்

துய்யம்பூந்துறை ஊராட்சி வார்டு உறுப்பினரிடம் சாதிய பாகுபாடு: ஈரோடு ஆட்சியரிடம் புகார்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்டது துய்யம்பூந்துறை கிராம ஊராட்சி. இது 9 வார்டுகளைக் கொண்டது. இதில் 8வது வார்டு உறுப்பினர் பி.கோபாலகிருஷ்ணன் ஆவார். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அப்பகுதி மக்களுடன் திரண்டு வந்து மனு கொடுத்தார்.

அதில், கடந்த சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அது முறையாக விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடத்தப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்திற்கு முறையாக தகவல் அளிக்கப்படவில்லை. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் நடத்தப்படும் கூட்டத்தில் 200 பேர் வரை பங்கேற்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை. 100 நாள் வேலையாட்கள் 100 பேரிடம் முதல்நாளே கையெழுத்து பெற்றுள்ளனர்.

சுழற்சி முறையில் கிராம சபைக் கூட்டம் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட வேண்டும். ஆனால் 20க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடந்திருந்தும் பட்டியலினத்தைச் சேர்ந்த எனது வார்டில் ஒருமுறை கூட நடத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள்ளே தன்னை அமரக்கூட அனுமதிப்பதில்லை. வெளியிலேயே நிறுத்தி பேசி அனுப்பி விடுகின்றனர்.

பலமுறை மனு அளித்தும் 8வது வார்டிற்கான அடிப்படை கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவரும், செயலரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக ஆதிக்க மனநிலையில் உள்ளனர். இவ்வாறு முறையாக நடத்தாத கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்து மறு கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம் வட்டத்தில் வரும் 21ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

சத்தியமங்கலம் வட்டத்தில் வரும் 21ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார்.

'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் 3வது புதன்கிழமை ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் வரும் 21ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிமுதல் மறுநாள் 22ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிவரை தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் (சேவைகள்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இந்த கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பார். மேலும், 21ம் தேதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது.

எனவே, அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 421 மனுக்கள்

ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 421 மனுக்கள்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (19ம் தேதி) திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்தக் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, சக்கர நாற்காலி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 421 மனுக்கள் ஏற்கப்பட்டன‌.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று உரியத்துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அந்தியூர் வட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளினால் உயிரிழந்த 5 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.