ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் இலவச பொது மருத்துவ முகாம்: 1000க்கும் மேற்பட்டோர் பயன்

ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் இலவச பொது மருத்துவ முகாம்: 1000க்கும் மேற்பட்டோர் பயன்

ஈரோடு யுனிக் அரிமா சங்கம், செல்வா சேரிடபிள் டிரஸ்ட் ஈரோடு, சுதா பலதுறை மற்றும் கேன்சர் சென்டர், ஆதித்யா பலதுறை மருத்துவமனை, ஆர்ஏஎன்எம் மருத்துவமனை, ஸ்ரீ தோல் மருத்துவமனை, அரசன் கண் மருத்துவமனை மற்றும் மெட்டி பல் மருத்துவமனைஇணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (25ம் தேதி) நடத்தியது.

இந்த முகாமிற்கு, ஈரோடு யுனிக் அரிமா சங்க தலைவர் செல்வன் தலைமை தாங்கினார். கேகேஎஸ்கே இண்டர் நேசன்ஸ் ரபீக் முன்னிலை வகித்தார். முகாமை, வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தொடக்கி வைத்தனர்.

இந்த முகாமில் பொது மருத்துவம், ரத்த பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, குழந்தை சார்ந்த மருத்துவங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஈரோடு ஆடிட்டர் வீட்டில் கொள்ளை: முக்கிய குற்றவாளி மீண்டும் சிறையில் அடைப்பு

ஈரோடு ஆடிட்டர் வீட்டில் கொள்ளை: முக்கிய குற்றவாளி மீண்டும் சிறையில் அடைப்பு

ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 68). ஆடிட்டர். இவர் தனது மனைவியுடன் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி வெளியூர் சென்று விட்டார். அப்போது இவருடைய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 235 பவுன் நகை, ரூ.48 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடிட்டர் சுப்பிரமணியனின் கார் டிரைவரான ஈரோடு திண்டல் காரப்பாறை பகுதியை சேர்ந்த சத்யன் (வயது 34) உள்பட 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நரசிம்ம ரெட்டி (வயது 40) பெங்களூருவில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவரை கடந்த 20ம் தேதி சூரம்பட்டி போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் கைது செய்து 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் நரசிம்மரெட்டி அளித்த தகவலின் பெயரில் 16 பவுன் நகை மற்றும் ரூ.22 லட்சம் ரொக்க பணத்தை போலீசார் மீட்டனர். போலீஸ் காவல் விசாரணை நிறைவடைந்ததால் சூரம்பட்டி போலீசார் நரசிம்ம ரெட்டியை ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் அவரை பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் கைதான 6 பேரிடம் இருந்து இதுவரை 148 பவுன் நகைகள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.