வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

சீமான் கட்சியை தடை செய்ய வேண்டும் - ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

சீமான் கட்சியை தடை செய்ய வேண்டும் - ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு

தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனை கொலை செய்ய வேண்டும் என்ற வாட்ஸ்அப் உரையாடல் கூட்டு சரியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கட்சி தலைவருக்கு 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் பரபரப்பு புகார் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்ட தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் அக்கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவனை கொலை செய்ய வேண்டும் என்று வாட்ஸ் அப் உரையாடல் வந்த நிலையில் இந்த கூட்டு சதியில் உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனு அளித்தனர்.

அந்த மனுவில் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் தமிழக மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக சமூக நீதி சார்ந்து தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் போராடி வருகிறார், இதில் அரசியல் ரீதியாக மதம் மற்றும் இனம் ரீதியாக எதிர்ப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

கட்சியின் தலைவரை கொல்ல சதி திட்டம் தீட்டியது வாட்ஸ் அப்பில் அம்பலம் ஆகி உள்ளது,இந்த வாட்ஸ் அப் உரையாடலில் அரசியல் கட்சியின் தலைவரின் பெயர் குறித்து சொல்லப்பட்டு,கொலை சதி திட்டம் தீட்டப்பட்டு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

எனவே தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனை கொலை செய்ய வேண்டும் என்ற ரகசிய வாட்ஸ் அப் உரையாடல் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,கட்சித் தலைவருக்கு 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் வேங்கை என பொன்னுச்சாமி வடக்கு, வெள்ளியங்கிரி கிழக்கு, பாலசுப்ரமணியம் மேற்கு ஆகியோர் மனு அளித்தனர். உடன், ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் இருந்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 120 கோரிக்கை மனுக்கள்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 120 கோரிக்கை மனுக்கள்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இன்று (30ம் தேதி) தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 733.44 மிமீ ஆகும். நடப்பு ஆண்டில் 30.08.2024 முடிய 385.33 மி.மீ பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 96.85 அடியாகவும், 26.33 டி.எம்.சி நீர் இருப்பும் உள்ளது.

நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 309 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 103 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 96 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 278 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இரசாயன உரங்களான யூரியா 6290 மெட்ரிக் டன்னும், டி.எ.பி 1342 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2511 மெட்ரிக் டன்னும் மற்றும் காம்ப்ளக்ஸ் 14511 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.

2024-25-ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது தேர்வு செய்யப்பட்ட 42 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்த ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை சாகுபடிக்கு கொண்டுவந்து உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வேளாண்மைத்துறையின் மூலம் தரிசு நிலத்தொகுப்புகள் கண்டறியப்பட்டு அவற்றில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பொருட்டு நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, நுண்ணீர் பாசன அமைப்பை நிறுவி பயிர்சாகுபடிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு நெல் சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டு தற்போது நடவு பணிகள் முடிவுற்று மற்றும் கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன விவசாயிகள் இவற்றைப் பெற்று பயன்பெறலாம்.

மேலும் விவசாயிகளுக்கு தேவையான பூச்சி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள் போதுமான அளவு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, விவசாயிகளிடம் எல்.பி.பி இணைப்பு வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மலைப்பகுதிகளில் சாலைகளை மேம்பாடு செய்தல், அனைத்து பகுதிகளிலும் பயிர் ஆய்வு செய்ய வேண்டும், அனைத்து உரங்களும் தட்டுப்பாடின்றி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 120 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை விவசாயிகள் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினர்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மா.சாந்தாமணி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) மனோகரன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) மரகதமணி, துணை இயக்குநர் (வேளாண்வணிகம்) வி.சி.மகாதேவன், செயலாளர் / துணை இயக்குநர் (ஈரோடு விற்பனைக்குழு) சாவித்திரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார், நீர்வள ஆதாரதுறை செயற்பொறியாளர்கள் ஈரோடு மற்றும் பவானிசாகர் அணை கோட்டம் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் உட்பட பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குச்சாவடிகளுக்கான வரைவுப் பட்டியல் வெளியீடு

ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குச்சாவடிகளுக்கான வரைவுப் பட்டியல் வெளியீடு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025ஐ முன்னிட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் 2025ஐ மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

பின்னர், அவர் தெரிவித்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 237, ஈரோடு மேற்கு தொகுதியில் 302, மொடக்குறிச்சி தொகுதியில் 277, பெருந்துறை தொகுதியில் 264, பவானி தொகுதியில் 289, அந்தியூர் தொகுதியில் 262, கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 296, பவானிசாகர் (தனி) தொகுதியில் 295 என மொத்தம் 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடிகள் உள்ளன. 8 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியலின் படி (27.03.2024) 19 லட்சத்து 66 ஆயிரத்து 496 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது, ஈரோடு மாவட்டத்தில் புதிய வாக்குச்சாவடி நிலையங்கள் உருவாக்குதல், வாக்குச்சாவடியை இடம் மாற்றம் செய்தல், வேறு கட்டடத்திற்கு மாற்றம் செய்தல், பெயர் திருத்தம் செய்தல், பகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணியின்போது, ஒரு வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1500-க்கு மிகையாக இருப்பின் அந்த வாக்குச்சாவடியை பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு 2 கி.மீக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் புதிய வாக்குச்சாவடி ஏற்படுத்துதல், பழுதடைந்த நிலையில் உள்ள வாக்குச்சாவடிகள் கண்டறிதல், வாக்குச்சாவடி அமைவிடம், கட்டட இடம் மாற்றம், பெயர் மாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, நகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள பகுதிகளில் தனியார் கட்டடங்களில் தகுதியின் அடிப்படையில் புதிதாக வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், வாக்குச்சாவடியை பிரிக்க வேண்டிய சூழ்நிலையில் அனைத்து வாக்காளர்களுக்கான புதிய வாக்குச்சாவடியாக அமைக்கப்படுமே தவிர துணை வாக்குச்சாவடியாக அமைக்கப்படாது. வாக்காளர்கள் தங்கள் பகுதி சார்ந்த வாக்குச்சாவடி விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலகத்திலும் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகத்திலும் பார்வையிடலாம்.

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மாநகராட்சி ஆணையாளர், ஈரோடு, வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர், ஈரோடு மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர், கோபிசெட்டிபாளையம் அலுவலகங்களில் வரும் 4ம் தேதி வரையில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட வேண்டும்.

கோரிக்கைகள், ஆட்சேபணைகள் ஏதேனும் வரப்பெறின் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியான இனங்களாக இருப்பின் அக்கோரிக்கைகள் ஏற்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) சிவசங்கர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


ஈரோடு மாவட்டத்தில் நாளை (31ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (31ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், என்.மேட்டுப்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (31ம் தேதி) சனிக்கிழமை நடக்கிறது. ஆகையால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அந்தியூர், தவிட்டுபாளையம், மைக்கேல்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், கொண்டையம்பாளையம், தோப்பூர், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டகுடியம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், பெருமாபாளையம், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம் மற்றும் பர்கூர் மலைப்பகுதி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

அதேபோல், கோபி அருகே உள்ள என்.மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட திருமநாதம்பாளையம், சூரியப்பம்பாளையம், ஆலாம்பாளையம், மாமரத்துபாளையம், கடசெல்லிபாளையம், குறிச்சி, தோட்டத்துபாளையம், கடுக்காமடை, காளியப்பம்பாளையம், என்.மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், சொக்குமாரிபாளையம் மற்றும் அரசன்குட்டைபுதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 28 ஆகஸ்ட், 2024

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை செய்தியாளர் பயணத்தின்போது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (28ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (28ம் தேதி) அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், தவிட்டுப்பாளையம் ஊராட்சியில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, கர்ப்பிணி தாய்மார்களின் பதிவேடுகள், மக்களைத் தேடி மருத்துவம் பதிவேடுகள் உட்பட சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், சின்னத்தம்பிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களின் வருகை குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, சின்னத்தம்பிபாளையம் நியாய விலைக் கடையில் நியாய விலைப் பொருட்களின் தரம், இருப்பு, பராமரிப்படும் பதிவேடு ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, அந்தியூர் வட்டாரம், அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார மையக் கட்டிடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அந்தியூர் ஜீவாசெட் பகுதியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் வீடு கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பழனியப்பா வீதி, தவிட்டுப்பாளையம், சந்தைப்பேட்டை ஆகிய பகுதிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.23.97 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், கருவல்வாடிபுதூர் பகுதியில் சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் முனியப்பம்பாளையம் -காட்டூர் சாலை வரை 90 மீ நீளத்திற்கு அணுகு சாலை அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுகளின்போது, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், உதவி பொறியாளர் (பேரூராட்சிகள்) கணேஷ்குமார், உதவி கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) ராஜேஷ்கண்ணா, அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள், அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், அந்தியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் 1,517 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி

ஈரோடு மாவட்டத்தில் 1,517 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 7ம் தேதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கி உள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 1,517 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் 1,517 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை ஏற்கனவே சிலைகள் வைக்கப்பட்ட இடங்கள் ஆகும். புதிதாக எந்த ஒரு இடத்திலும் சிலை வைக்க அனுமதி தரப்படவில்லை.

வரும் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். இதற்காக 48 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலை மற்றும் ஊர்வலம் பாதை பாதுகாப்பு பணியில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

சத்தியமங்கலம், புளியம்பட்டி, தாளவாடி பகுதிகள் ஊர்வலத்தின் போது பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஊர்வலத்தின் போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது என்றார்.
சத்தியமங்கலம் அருகே சந்தனக்கூடு உரூஸ் விழாவிற்காக 230 ஆண்டுகள் பழமை வாய்ந்த கெஜலட்டி தர்கா புதுப்பிக்கும் பணி தீவிரம்

சத்தியமங்கலம் அருகே சந்தனக்கூடு உரூஸ் விழாவிற்காக 230 ஆண்டுகள் பழமை வாய்ந்த கெஜலட்டி தர்கா புதுப்பிக்கும் பணி தீவிரம்

சத்தியமங்கலம் அருகே சந்தனக்கூடு உரூஸ் விழாவிற்காக 230 ஆண்டுகள் பழமை வாய்ந்த கெஜலட்டி தர்கா புதுப்பிக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 230 வருடம் பழமை வாய்ந்த கெஞ்ஜலே அர்ஷ் வலியுல்லா தர்கா அமைந்துள்ளது. 
இந்த தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கமிட்டி அமைப்பதற்காக வக்பு வாரியத்தால் சந்தனக்கூடு விழா நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து கலந்த மாதம் தமிழ்நாடு அரசின் வக்பு வாரியத்தால் 2024-ம் ஆண்டு புதிதாக உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாக கமிட்டியினரால் சிதலமடைந்த நிலையில் இருந்த தர்காவை புனரமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் சந்தனக்கூடு உரூஸ் விழா நடைபெறும் என நிர்வாக கமிட்டியினர் தெரிவித்தனர்.