செவ்வாய், 3 செப்டம்பர், 2024

அந்தியூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

அந்தியூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மகன் சுப்ரதீபன் (வயது 21). இவர் அந்தியூர் வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள காய்கறி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரை முன்விரோதம் காரணமாக பவானி அருகே உள்ள பெரியமோளபாளையத்தை சேர்ந்த 8 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், சுப்ரதீபன் அளித்த புகார் பொய்யானது எனக்கூறி அவரது வீட்டில் அந்தியூர் போலீசார் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி நோட்டீஸ் ஒட்டினர். இந்த நிலையில், சுப்ரதீபன் நேற்று (3ம் தேதி) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் விரைந்து சென்று சுப்ரதீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, நேற்று இரவு 7 மணி அளவில் சுப்ரதீபனின் உறவினர்கள், அவருடைய தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்ததும் பவானி காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். எனினும் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது.

இந்த சம்பவத்தால் அந்தியூர் - பர்கூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெருந்துறை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு

பெருந்துறை ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. 

அதன்படி, இன்று (3ம் தேதி) மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெருந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.46.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தின் கட்டுமானப்பணியினையும், பெருந்துறையில் செயல்பட்டு வரும் அறிவுசார் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு நூலகத்தில் பயில வரும், மாணவ, மாணவியர்களின் வருகை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பெருந்துறை பேரூராட்சி, ஜீவா நகர் பகுதியில் பாதாள சாக்கடையுடன் வீட்டு கழிவு நீர் குழாய்களை இணைக்கும் பணியினையும், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கட்டிடம் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பெருந்துறை, சிலேடர் நகர் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளின் வருகை, மருந்துகளின் இருப்பு, அளிக்கப்படும் சிகிச்சைகள் ஆகியவை குறித்து மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஆப்பக்கூடல், ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை பேரூராட்சிகளில்  11 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் முத்துசாமி

ஆப்பக்கூடல், ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை பேரூராட்சிகளில் 11 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல், ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை ஆகிய பேரூராட்சி பகுதிகளில் ரூ.8.16 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
அதன்படி, ஆப்பக்கூடல் பேரூராட்சி, ஆ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிமேம்பாட்டு மானியத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டும் பணியினையும், அயோத்தி தாஸ் பண்டிர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆப்பக்கூடல் வார்டு எண்11 அம்பேத்கார் வீதிக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் மற்றும் கவர் சிலேப் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாநில ஆணையம் நகர்ப்புற சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஆப்பக்கூடல் பேரூராட்சிக்குட்பட்ட சுக்காநாயக்கனூர் ரோடு, காந்திஜி வீதி, அந்தியூர் மெயின் ரோடு ராசாயால் குறுக்கு வீதி, அம்பேத்கார் வீதி முதல் கல்லங்காட்டு மேடு சந்திப்பு, அம்பேத்கார் வீதி குறுக்கு வீழுதிகள் மற்றும் அம்பேத்தகார் வீதி முதல் கவுந்தப்பாடி மெயின் ரோடு இணைப்பு வரை தார்சாலை அமைத்தல் பணியையும் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் ஆ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைத்து பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணியினையும், ஒலகடம் பேரூராட்சி பழைய பேரூராட்சி அலுவலகம் அருகில் (பெருமாள் கோவில் வீதி), கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் சந்தை மேம்பாடு செய்யும் பணியினையும், மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டும் பணியினையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து, நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் ஒலகடம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் முதல் குன்றியூர் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், வார்டு எண்.8 குந்துபாயூர், வார்டு எண்.3 மும்மிரெட்டிபாளையத்தில் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், நெரிஞ்சிபேட்டை பேரூராட்சி வார்டு எண் 7 கோரிவீதி மசூதி அருகில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் கருங்கரடு பாலமலை ரோடு மற்றும் முருகன் ரைஸ்மில் ரோடு பழுதடைந்த சாலையினை புதிய தார்சாலையாக மேம்பாடு செய்யும் பணியினையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண் 1 சின்னப்பள்ளம் மேல்தெரு 1, 2வது வீதி, சர்ஜ் வீதி, சின்னப்பள்ளம் கீழ் தெரு 1, 4வது வீதி, வார்டு எண் 3 சித்தையன் நகர் 1, 2, 3, 4வது வீதி வரை மற்றும் வார்டு 14 ஆரியாக்கவுண்டனூர் அரிஜன காலனி பழுதடைந்த சாலையினை புதியதார்சாலையாக மேம்பாடு செய்தல் பணியினையும் தொடங்கி வைத்தார்.

மேலும், அம்மாபேட்டை பேரூராட்சி பாரதியார் வீதியில் ரூ.47.99 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்.9 கடுமாங்கொட்டாய், வார்டு எண்.15 பாரதியார் வீதி குபேரன் நகர் மெயின் வீதி, 1, 2வது வீதிக்கு தார்சாலை அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.8.16 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்து, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

இந்நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம், பேரூராட்சி தலைவர்கள் கேன்.என்.வெங்கடாசலம் (அம்மாபேட்டை), எஸ்.செல்வி (ஆப்பக்கூடல்), கே.வேலுசாமி (ஒலகடம்), டி.ராஹினி (நெரிஞ்சிப்பேட்டை), பேரூராட்சி செயல் அலுவலர்கள் சதாசிவம் (அம்மாபேட்டை, ஆர்.அன்புசெல்வி (ஆப்பக்கூடல்), (ஒலகடம் (பொ), என்.சிவகாமி (நெரிஞ்சிப்பேட்டை) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் 22வது தடகள விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் 22வது தடகள விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மாநகராட்சி வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பில் நடத்தப்படும் 22வது தடகள விளையாட்டுப் போட்டியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்து தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்ட தடகள சங்கம் ஏறத்தாழ ஒரு 25 ஆண்டு காலமாக மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
தடகள சங்கத்தினர் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முன்னெடுத்து சிறப்பாக செய்து வருகின்றார்கள். ஏறத்தாழ 22 ஆண்டுகள் மாவட்டத்தில் போட்டியை நடத்தி இந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திருக்கிறார்கள்.‌ அதே போன்று 5 முறை மாநிலப் போட்டிகளும் நடத்தியிருக்கிறார்கள்.

ஆயிரம் பேருக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் உருவாக்கப்பட்டு அந்த போட்டியிலே அவர்கள் மிகப்பெரிய இடத்தை அடைகிற வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 100 வீரர், வீராங்கனைகளை தேசிய வீரர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். 20 வீரர், வீராங்கனைகளை சர்வதேச வீரர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் வித்யா ராமராஜன் அவர்கள் ஈரோடு மாவட்ட விடுதியில் தங்கி பயிற்சி பெற்றவர்கள் இன்றைக்கு பிரான்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் நம்முடைய ஈரோட்டிற்கும் பெருமை சேர்க்கிற அளவிற்கு சாதனையை செய்திருக்கிறார்கள்.

அதேபோல, பெங்களுரில் நடைபெற்ற போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாம்பியனாக வந்திருக்கிறார்கள். விளையாட்டு துறையில் மிகப்பெரிய அளவிலே நம்முடைய மாணவ, மாணவியர்கள் வரவேண்டும் என்பதற்காக அதற்கான வசதிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஸ்குமார், தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்க செயலாளர் கோவிந்தராஜ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு: ஆப்பக்கூடல் அருகே வீடு புகுந்து திருடிய இளைஞருக்கு 2 ஆண்டு சிறை

ஈரோடு: ஆப்பக்கூடல் அருகே வீடு புகுந்து திருடிய இளைஞருக்கு 2 ஆண்டு சிறை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சிந்தகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 32). இவருடைய வீடு புகுந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டன்குட்டைய சேர்ந்த சங்கர் (வயது 34) என்பவர் ஒரு பவுன் தங்க காசு, ரூ.2 ஆயிரத்தை கடந்த 2022ம் பிப்ரவரி மாதம் 24ம் தேதி திருடினார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். 

இதுதொடர்பான வழக்கு பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வீடு புகுந்து திருடிய சங்கருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால், மேலும் 3 மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து கோபியில் உள்ள மாவட்ட கிளை சிறையில் சங்கர் அடைக்கப்பட்டார்.

திங்கள், 2 செப்டம்பர், 2024

மொடக்குறிச்சி அருகே கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேர் கைது

மொடக்குறிச்சி அருகே கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேர் கைது

மொடக்குறிச்சி அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 பேர் கைது

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் மொடக்குறிச்சி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள், மொடக்குறிச்சி மஞ்சக்காட்டுவலசு, நேரு வீதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சிவக்குமார் (வயது 22), மஞ்சக்காட்டுவலசு ஒரத்திமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் மகன் பிரித்திவிராஜ் (வயது 19), மொடக்குறிச்சி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த குருநாதன் மகன் கமலக்கண்ணன் (வயது 20), மொடக்குறிச்சி எம்.வேலம்பாளையம் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த கணேஷ் மூர்த்தி மகன் ராகுல் (வயது 22) ஆகியோர் என்பதும், இதில் பிரித்விராஜ் என்பவர் கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், இவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் 10 போதை மாத்திரைகளை பறி முதல் செய்தனர்.
ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.11 லட்சத்தில் நலத்திட்ட உதவி

ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.11 லட்சத்தில் நலத்திட்ட உதவி

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (2ம் தேதி) திங்கட்கிழமை நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 410 மனுக்கள் பெறப்பட்டன.

தொடர்ந்து, தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் சார்பில் கட்டுமானப் பணியிடத்து விபத்து மரணமடைந்த கட்டுமாத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் 4 நபர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் வீதம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண நிதியுதவிகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் 10 நபர்களுக்கு நலவாரிய அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிகளையும் என மொத்தம் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.