புதன், 4 செப்டம்பர், 2024

ஈரோட்டில் நாளை (6ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோட்டில் நாளை (6ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியர் அலுவலக மின்பாதையில் நெடுஞ்சாலை துறை சார்பில் பராமரிப்பு பணி நாளை (6ம் தேதி) வெள்ளிக்கிழமை நடக்கிறது.
இதனால், கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம். தெரிவித்துள்ளார்.

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியர் அலுவலக மின்பாதை:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஈரோடு குமலன்குட்டை பேருந்து நிறுத்தம், பாலக்காடு, பெருந்துறை ரோடு, வி.ஐ.பி. காலனி, திரு.வி.க.வீதி, ராணாலட்சுமணன் நகர் மற்றும் ஆசிரியர் காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபியில் வீட்டுக்கு தீ வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற ஐபிஎஸ் அதிகாரி

கோபியில் வீட்டுக்கு தீ வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற ஐபிஎஸ் அதிகாரி

ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்தவர் அருண்ரங்கராஜன் (வயது 38). இவர் கடந்த 2012ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநிலம் கலாபுர்கி மாவட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி இலக்கியா. இவரும், கர்நாடக மாநில முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக பணியாற்றினார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், அருண்ரங்கராஜன் கர்நாடக மாநிலத்தில் பணியாற்றிய போது அதே பிரிவில், காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய சுஜாதா (வயது 38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுஜாதாவின் கணவர் கண்டப்பாவும் போலீசாக பணியாற்றி வந்த நிலையில், அருண்ரங்கராஜன், சுஜாதா இடையேயான பழக்கம் குறித்து கண்டப்பாவுக்கு தெரியவந்தது.

இதுபற்றி கண்டப்பா அருண்ரங்கராஜனின் மனைவி இலக்கியாவிடம் கூறி உள்ளார். இதன் காரணமாக அவருடைய மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்த சுஜாதாவும், அருண்ரங்கராஜுடன் தங்கி குடும்பம் நடத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அருண்ரங்கராஜன் மற்றும் சுஜாதா ஆகியோர் கோபிக்கு வந்தனர்.

அப்போது, ஏற்பட்ட தகராறில் அருண்ரங்கராஜ் சுஜாதாவை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்ரங்கராஜை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அருண்ரங்கராஜன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது தற்காலிக பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு, ஓரிரு நாளில் மீண்டும் பணியில் சேர இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், சுஜாதா மீண்டும் கோபி வந்து அருண்ரங்கராஜனுடன் தங்கி இருந்து வந்துள்ளார். நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டவே, சுஜாதாவை அருண்ரங்கராஜன் தாக்கியுள்ளார். இதனால் சுஜாதா வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். பின்னர், ஆத்திரத்தில் இருந்த அருண்ரங்கராஜன் தன்னுடைய வீட்டின் படுக்கை அறைக்கு தானே தீ வைத்துக் கொண்டு உள்ளேயே இருந்துள்ளார். தீ வீடு முழுவதும் பரவி புகை வெளியேறியது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இருந்தபோதிலும், வீட்டில் இருந்த கட்டில் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாகின.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கோபி காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று வீட்டுக்குள் இருந்த அருண்ரங்கராஜனை மீட்க முயன்றனர். அப்போது அருண்ரங்கராஜ் காவல் ஆய்வாளரை தாக்கியதாக தெரிகிறது. அதன் பின்னர் அருண்ரங்கராஜனை அங்கிருந்த மற்ற போலீசார் மீட்டு கோபி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடமும், சுஜாதாவிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம் அருகே நள்ளிரவில் 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

சத்தியமங்கலம் அருகே நள்ளிரவில் 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கல்கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது 31). இவரது மனைவி ரேவதி (வயது 23). கர்ப்பிணியான ரேவதிக்கு இன்று (4ம் தேதி) நள்ளிரவு 1.20 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. அதை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் ரேவதியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை நோக்கி புறப்பட்டு சென்றனர். ஆம்புலன்சை அரப்புளிசாமி என்பவர் ஓட்டினார்.

ஆம்புலன்ஸ் கே.என்.பாளையம் ஸ்டேட் பாங்க் அருகே சென்ற போது ரேவதிக்கு பிரசவ வலி அதிகமாகி குழந்தை பிறப்பதற்கான அறிகுறி இருந்ததால், வாகனத்தை சாலையோரம் நிறுத்தி, அவசர கால மருத்துவ நுட்புணர் விஜய் பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

பின்னர், தாய், சேயை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நள்ளிரவில் ஆள் அரவமற்ற பகுதியில் சமயோசிதமாக செயல்பட்டு, இரண்டு உயிர்களை காப்பாற்றி, பாதுகாத்த ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ நுட்புணர் விஜய், ஓட்டுநர் அரப்புளிசாமி ஆகியோரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
ஈரோடு சோலாரில் ஒன்றுகூடிய ரெட் டாக்ஸி ஓட்டுநர்களால் பரபரப்பு

ஈரோடு சோலாரில் ஒன்றுகூடிய ரெட் டாக்ஸி ஓட்டுநர்களால் பரபரப்பு

ஈரோட்டில் வாடகை வாகன ஓட்டுநர் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றதால் ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் சோலாரில் ஒன்றுகூடி காரை ஒரு சேர நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரெட் டாக்ஸி ஓட்டுநர் சுரேஷ். இவர் இன்று (4ம் தேதி) ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள வித்யா நகரில் பயணியை டாக்ஸியில் ஏற்றிக்கொண்டு பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், பெருந்துறையில் இருந்து பயணியை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த பொழுது பெருந்துறை காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள அப்பகுதியை சேர்ந்த தனியார் வாடகை ஓட்டுநர்கள் சுரேஷின் டாக்ஸியை வழிமறித்துள்ளனர்.

பின்பு, ஈரோடு கால் டாக்ஸிகளுக்கு, பெருந்துறை வாடகை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை எனக் கூறி சுரேஷ் மீது தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், சுரேஷின் காரில் இருந்த பயணியை காரில் இருந்து இறங்கச் சொல்லி, பெருந்துறை பகுதியை சேர்ந்த தனியார் வாடகை ஓட்டுநர் ஒருவர் அவரது காரில் ஏற்றி வித்யா நகரில் உள்ள அவரது வீட்டில் இறக்கி விட்டுள்ளார். 

இந்நிலையில், தங்களின் வாகனத்தில் இருந்த பயணிகளை வேறொரு வாகனத்தில் அத்துமீறி ஏற்றியதை கேள்விப்பட்ட ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அங்கு சென்று தனியார் வாடகை ஓட்டுநரிடம் நியாயத்தை கேட்டுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த பெருந்துறை தனியார் வாடகை கார் ஓட்டுநர் அவர் வைத்திருந்த கத்தியால் ரெட் டாக்ஸி ஓட்டுநர்களை குத்த வந்ததாக ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

இதனால் கோபமடைந்த ரெட் டாக்ஸ் ஓட்டுநர்கள் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு, ரெட் டாக்ஸி ஓட்டுநர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கார்களில் வந்து சோலார் பேருந்து நிலையத்தில் ஒன்று திரண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரெட் டாக்ஸி ஓட்டுநர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வாடகை கார் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

மேலும், அனுமதி இன்றி ஒன்று கூடி இருந்து வருவது சட்டத்திற்கு புறம்பானது. எனவே இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் இல்லை என்றால் அனைவர் மீது வழக்கு செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

இதனையடுத்து, தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும், ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் டாக்ஸி ஓட்டுநர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

200க்கும் மேற்பட்ட ரெட் டாக்ஸி ஒன்று கூடி புதிதாக கட்டி வரும் பேருந்து நிலையத்தில் நின்றதால் ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில் விடுமுறைக்காக பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 9ம் வகுப்பு மாணவர்கள்

ஈரோட்டில் விடுமுறைக்காக பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 9ம் வகுப்பு மாணவர்கள்

ஈரோடு அவல்பூந்துறை ரோடு செட்டிபாளையம் பகுதியில் ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (2ம் தேதி) காலை 10.30 மணிக்கு பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என பள்ளி இ-மெயிலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, பள்ளிக்கு விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிக்கூட கட்டிடங்கள், வகுப்பறைகள் என அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர்.

அன்று மாலை வரை முழுமையான சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் சந்தேகப்படும் படியாக எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதனால் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த இ-மெயில் எங்கிருந்து வந்தது என ஈரோடு தாலுகா போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த இ-மெயில் அதே பள்ளிக்கூடத்தில் 9ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அனுப்பி இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த 2 மாணவர்கள் மற்றும் அவருடைய பெற்றோர்களை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த 2 மாணவர்களும் வேறு ஒரு பள்ளியில் இருந்து ஜேசீஸ் பள்ளிக்கு இந்த ஆண்டு படிக்க சேர்ந்து உள்ளனர்.

ஆனால், மாணவர்கள் 2 பேருக்கும் இந்த பள்ளியில் தொடர்ந்து படிக்க விருப்பம் இல்லை. இதனால் மாணவர்கள் 2 பேரும் திட்டமிட்டு பள்ளிக்கூடத்துக்கு தங்களுடைய செல்போனில் இருந்து இ-மெயில் அனுப்பியது தெரியவந்தது.

பின்னர், 2 மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களிடம் போலீசார் கூறுகையில், இதேபோல் செயல்பட்டால் வழக்குப் பதியப்படும் என கடும் எச்சரிக்கை செய்தும், அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (5ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (5ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஈங்கூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (5ம் தேதி) வியாழக்கிழமை நடக்கிறது.

இதனால், கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈங்கூர் துணை மின் நிலையம்:-

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர், வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, தோப்பு பாளையம், பெருந்துறை ஆர்.எஸ். மற்றும் பெருந்துறை வீட்டுவசதி வாரியம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபி அருகே வாடகைக்கு வீடு கொடுத்தவரிடம் 5½ பவுன் தாலிக்கொடி பறித்த பெண் கைது

கோபி அருகே வாடகைக்கு வீடு கொடுத்தவரிடம் 5½ பவுன் தாலிக்கொடி பறித்த பெண் கைது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள 5 கார்னர் வாய்க்கால் ரோட்டை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 67). இவர் நேற்று (3ம் தேதி) மதியம் சுமார் 2 மணியளவில் வீட்டில் படுத்திருந்தார். அப்போது, வீட்டினுள் நுழைந்த பெண் ஒருவர் சின்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்க தாலிக்கொடியை பறித்துக்கொண்டு ஓடினார்.
இதனால், அதிர்ச்சியடைந்து சின்னம்மாள் சத்தமிடவே அக்கம் பக்கத்தினர் ஒடிச்சென்று அந்த பெண்ணை பிடித்து கோபி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய விசாரணையில், அந்த பெண் வாய்க்கால் ரோடு மங்கம்மாள் வீதியைச் சேர்ந்த சுமதி (வயது 35) என்பதும், அவர் சின்னம்மாள் வீட்டில் 3 மாதங்களாக வாடகைக்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, சுமதியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 5½ பவுன் தாலிக்கொடியை மீட்டனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.