வியாழன், 12 செப்டம்பர், 2024

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்புவாரிய சட்டத்தை எதிர்த்து பல்வேறு வழக்குகள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்புவாரிய சட்டத்தை எதிர்த்து பல்வேறு வழக்குகள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்புவாரிய சட்டத்தை எதிர்த்து மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடுத்துள்ளோம், பல்வேறு கட்ட தொடர் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்: முகமது ஆரிப்

வக்பு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்தும் வக்புவாரியத்தில் உள்ள சொத்துக்கள் குறித்தும் இஸ்லாமிய மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில தலைவர் முகமது ஆரிப் பேட்டியளித்தார்.

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறைக்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

 ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜுபைர் அகமது தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில தலைவர் முகமது ஆரிப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

அவர் பேசும் போது இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் கட்சி எந்தெந்த வகையில் பாதுகாப்பாக இருக்கிறது என்று விளக்கி கூறினார். 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முகமது ஆரிப், தொல் திருமாவளவன் நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது, அவர் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தவறு காண்பதில் எதுவுமில்லை என்றார்.

 காங்கிரஸ் கட்சி முழுமையாக மதுவிலக்கிற்கு ஆதரவளிக்கிறது. மதுவுக்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறோம் என்றும் வக்பு வாரியத்திற்கு புதிதாக விரைவில் தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் கூறினார். 

மேலும், மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். வக்பு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்தும் வக்புவாரியத்தில் உள்ள சொத்துக்கள் குறித்தும் இஸ்லாமிய மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் என்பதுடன், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்புவாரிய சட்டத்தை எதிர்த்து மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடுத்துள்ளோம், பல்வேறு கட்ட தொடர் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ராஜினாமா குறித்து கேட்டபோது, அது உட்கட்சி விவகாரம் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை எனவும் விரைவில் வக்பு வாரிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் கூறினார். 

இந்த கூட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் 5 புதிய பேருந்துகளின் இயக்கத்தை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் 5 புதிய பேருந்துகளின் இயக்கத்தை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மத்திய பேருந்து நிலைய வளாகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டலம் சார்பில் 5 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (12ம் தேதி) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் , அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:-

மாவட்டத்தில் கடந்த ஜூலை 17ம் தேதி 15 புதிய பேருந்துகளின் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று (12ம் தேதி) கோயம்புத்தூர் - மைசூர் (வழி:-சத்தி, திம்பம் சாம்ராஜ் நகர்) ஒரு பேருந்தும், ஈரோடு - கோயம்புத்தூர் பாயிண்டு -டு- பாயிண்ட் (ERO-100) 2 பேருந்துகள், கோயம்புத்தூர் - சேலம் பாயிண்டு -டு- பாயிண்ட 2 பேருந்துகள் என 5 பேருந்துகளின் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.


இதில், ஒரு பேருந்தின் விலை ரூ.44 லட்சம் என மொத்தம் ரூ.2.20 கோடி ஆகும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலத்திற்கு 2021-2024-ம் ஆண்டு வரை நகர்ப்புற பேருந்துகள் 9 பேருந்துகள், புறநகர் பேருந்துகள் 36ம் என மொத்தம் 45 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழிதடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று 5 புதிய புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 30 புறநகர் பேருந்துகளும், 2 நகர பேருந்துகளும் புனரமைக்கப்பட்டு புதிய தோற்றப் பொலிவுடன் வழித் தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசால் விடியல் பயணத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, ஈரோடு மண்டலத்தில் 304 நகர பேருந்துகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இதில், நாளொன்றிக்கு சுமார் 3 லட்சம் மகளிர் தினசரி கட்டணமின்றி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இத்திட்டம் துவங்கப்பட்டது முதல் தற்போது வரை 3,302 லட்சம் மகளிர் கட்டணம் இல்லா பயணம் மேற்கொண்டுள்ளனர். இத்திட்டம் கடந்த மார்ச் 14ம் தேதியன்று முதல் விரிவுபடுத்தப்பட்டு, தாளவாடி மலைப்பகுதியில் 35 கி.மீட்டருக்கு கீழ் இயக்கப்படும் 1 புறநகர் பேருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு, நாளொன்றிக்கு சுமார் 431 மகளிர் வீதம் தற்போது வரை 77,084 மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ். என், ஈரோடு மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் பி.கே.பழனிசாமி (1-ம் மண்டலம்), சுப்பிரமணியம் (2-ம் மண்டலம்), சசிகுமார் (3-ம் மண்டலம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், பொது மேலாளர் தா.மோகன்குமார் (ஈரோடு மண்டலம்) உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.