வியாழன், 26 செப்டம்பர், 2024

சேலத்தின் அடையாளமாக விளங்கும் பௌத்த மதத்தின் புத்தர் சிலையையும் அவரது கோவிலும் மீட்டெடுப்போம். சேலத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் வசந்த் உறுதி.

சேலத்தின் அடையாளமாக விளங்கும் பௌத்த மதத்தின் புத்தர் சிலையையும் அவரது கோவிலும் மீட்டெடுப்போம். சேலத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் வசந்த் உறுதி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தின் அடையாளமாக விளங்கும் பௌத்த மதத்தின் புத்தர் சிலையையும் அவரது கோவிலும் மீட்டெடுப்போம். சேலத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் வசந்த் உறுதி. 

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையர் ஜோ.அருண் அவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் செயலர் சம்பத்,  துணைத் தலைவர் குத்தூஸ், உறுப்பினர்கள் வசந்த், ஹாமில்டன், நெல்சன், ஸ்வர்ண ராஜ், ராஜேந்திர பிரசாத், பிரவீன் குமார், நஜிமுதீன், சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கௌதம் மற்றும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் தொடர்பான பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவர்களின் நலன் மற்றும் மேம்பாடுகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதே போல தமிழக அரசால் சிறுபான்மையினர் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி அலுவலகம் பின்புறமாக உள்ள தலை வெட்டி முனியப்பன் ஆக கருதப்படும் புத்தர் மற்றும் புத்தர் கோவில் குறித்து அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை முன் வைத்தார். இதில் சம்பந்தப்பட்ட கோவிலில் உள்ளது புத்தர் சிலை தான் என்றும் புத்தர் கோவிலுக்கு சொந்தமான நிலம் தான் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தால் வழக்கு தொடரப்பட்டு இறுதியில் பௌத்த மதத்தினருக்கு ஆதரவாக இந்த வழக்கின் தீர்ப்பு அமைந்திருந்தது. அதுமட்டுமில்லாமல் பௌத்த மதத்திற்கு ஏதுவாக வழிபாட்டு முறைகள் மேற்கொள்ள வழிவகைகளையும் அறிவித்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம். 
ஆனால் தற்பொழுது வரை தொல்லியல் துறை சார்பில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி குற்றச்சாட்டாகவே உள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து இதுவரை ஆறு மாவட்ட ஆட்சியர்கள் இடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோக 3 சிறுபான்மையினர் நல ஆணையர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் நடவடிக்கை இல்லாத   காரணத்தினால் சேலத்தில் உள்ள பௌத்த மதத்தினர் யாரை அணுகினால் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற கேள்வியையும் எழுப்பினார். இதற்கு சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் வசந்த் கூறுகையில், ஏற்கனவே பௌத்த மதத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் இது புத்தர் சிலை தான் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் ஆனால் இதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீடு வழக்கு தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சம்பந்தப்பட்ட கோவிலில் ஆய்வு மேற்கொள்ள முடியாத ஒரு சூழல் உள்ளதாகவும் தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டு அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டுவதுடன் சர்வே மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட துறைகளை ஒன்றிணைத்து அதில் எப்படி வெற்றி பெறுவது என்று ஆராய்ந்து பௌத்த மதத்திற்கு அடையாளமாக உள்ள புத்தர் மற்றும் அந்த கோயிலை மீட்டெடுப்போம் என்று உறுதியளித்தார்.
தாளவாடியில் பறிமுதல் செய்த பணத்தை பிரித்துக் கொண்ட 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

தாளவாடியில் பறிமுதல் செய்த பணத்தை பிரித்துக் கொண்ட 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக வெங்கடசாமி என்பவர் பணிபுரிந்து வந்தார். இதே, காவல் நிலையத்தில் சிறப்பு பிரிவு தலைமைக் காவலராக இளங்கோவன் என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், இருவரும் சமீபத்தில் தாளவாடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு ஒரு சீட்டாட்டக் கும்பலை சுற்றி வளைத்தனர். அந்த கும்பலில் சிலர் தப்பி ஓடிய நிலையில், அவர்களில் சிலரைப் பிடித்த போலீசார் சீட்டாட்டத்திற்காக வைத்திருந்த ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்து அவர்கள் மீது எந்த வழக்கையும் பதிவு செய்யாமல் தப்பிவிட்டனர்.

பின்னர், பறிமுதல் செய்த பணத்தை அவர்களே பங்கிட்டு கொண்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

முதற்கட்ட விசாரணையில் சீட்டாட்ட கும்பலிடம் இருந்து பணம் பறித்தது உண்மை என்பது தெரிய வந்ததையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெங்கடசாமி, சிறப்பு பிரிவு தலைமைக் காவலர் இளங்கோவன் ஆகிய 2 பேரையும் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டார்.


செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: அந்தியூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: அந்தியூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, சுப்ரீம் கோர்ட்டு இன்று (26ம் தேதி) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக அலுவலகங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கொண்டாட்டத்தில் சட்டமன்றத் உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 

உடன், அந்தியூர் பேரூர் திமுக செயலாளர் எஸ்.கே.காளிதாஸ், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிச்சாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் செபஸ்தியார், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், இலக்கிய அணி மாவட்ட துணை தலைவர் அங்கமுத்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன் (மைக்கேல்பாளையம்), குருசாமி (சங்கராபாளையம்), பாவாயி ராமசாமி (கூத்தம்பூண்டி), ஒன்றிய துணைச் செயலாளர் ராதாமணி தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.