புதன், 30 அக்டோபர், 2024

தீப ஒளி திருநாளை தூய்மை பணியாளர்களுடன் கொண்டாடி மகிழ்ந்து மாமன்ற உறுப்பினர்.

தீப ஒளி திருநாளை தூய்மை பணியாளர்களுடன் கொண்டாடி மகிழ்ந்து மாமன்ற உறுப்பினர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தீப ஒளி திருநாளை தூய்மை பணியாளர்களுடன் கொண்டாடி மகிழ்ந்து மாமன்ற உறுப்பினர். 

இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தீபாவளி திருநாள் உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களால் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக இன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து புனித நீராடி புத்தாடைகளை அணிந்து பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதன் ஒரு பகுதியாக இந்துக்களின் முக்கிய திருவிழாவான தீபாவளி திருநாளை சேலம் 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான டைவலிங்கம் தனது கோட்டத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார். 
அதுமட்டுமில்லாமல் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இன்று காலை அசைவ விருந்து வழங்கி மகிழ்ந்தார். 
இதே போல சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள காக்காயன் மின் மயானத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு புத்தாடைகளையும் இனிப்புகளையும் வழங்கி தனது தீபாவளி வாழ்த்துக்களை தனது மனைவியுடன் மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞர் மான  தெய்வலிங்கம் தெரிவித்து மகிழ்ந்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு

இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் மற்றும் பாதுகாப்பையும் பேணவும், மேலும் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கைகளாலும், சாத்தியமாக்கப்பட்ட ஒன்றினைந்த தேசத்தின் நல்லுணர்வினை ஏற்படுத்திடவும் மற்றும் நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய பங்களிப்பை வழங்கும் பொருட்டும், தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நாளை (அக்டோபர் 31) சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (அக்டோபர் 30) ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியான, இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒறுமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன்.

சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன் என உறுதிமொழியினை, மாவட்ட வருவாய் அலுவலர் வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர்.

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முஹம்மது குதுரத்துல்லா (பொது), தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், அலுவலக மேலாளர் (பொது) பாலசுப்பிரமணியம், வட்டாட்சியர் (தேர்தல்) சிவசங்கர் உட்பட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு

ஈரோடு அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதுவும் அருகில் இல்லை என்பதை உறுதி செய்து, திறந்தவெளியில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும்.

பட்டாசுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் கச்சிதமான பருத்தி ஆடைகள், காலணிகள் அணிய வேண்டும். பெரியவர்களின் பாதுகாப்பில் சிறுவர்-சிறுமிகள் பட்டாசு வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும். சுவாச பிரச்சினை இருப்பவர்கள் பட்டாசு வெடிக்கும் பகுதிகளுக்கு வராமல் பாதுகாப்பாக வீடுகளில் இருக்க வேண்டும்.

தீப்பெட்டிகள், லைட்டர்கள் வைத்து பட்டாசு வெடிக்கக்கூடாது. நீளமான பத்தி அல்லது எரி குச்சிகளை பயன்படுத்த வேண்டும். வாகனங்களில் பட்டாசுகளை வைத்து வெடிக்க கூடாது. சாலைகளில் செல்பவர்கள் மீது பட்டாசுகளை பற்றவைத்து வீசக்கூடாது.

பட்டாசு பற்ற வைப்பவர் சுமார் ஒரு மீட்டர் தூரத்தில் நின்று வெடிக்க வைக்க வேண்டும். தண்ணீர் வாளி, போர்வைகள் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். பாதி எரிந்த நிலையில் உள்ள பட்டாசுகளை தண்ணீரில் போட்டு அணைத்து அப்புறப்படுத்த வேண்டும். மிதிக்க கூடாது.

மெழுகுவர்த்தி, விளக்குகள் அருகே பட்டாசுகளை வைக்க வேண்டாம். மின்கம்பங்கள் அருகே பட்டாசு வெடிக்க வேண்டாம். பட்டாசு வெடித்த பின்னர் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடித்து எதிர்பாராத வகையில் காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் என மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சாலையோர கடைகளால் ஈரோடு கனி மார்க்கெட் வளாக வியாபாரிகளின் வர்த்தகம் பாதிப்பு

சாலையோர கடைகளால் ஈரோடு கனி மார்க்கெட் வளாக வியாபாரிகளின் வர்த்தகம் பாதிப்பு

ஈரோடு மணிக்கூண்டு சாலையில் 500க்கும் மேற்பட்ட தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கப்பட்டதால், கனி மார்க்கெட் வியாபாரிகள் வேதனையடைந்து காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் வணிக ஜவுளி வளாகம் அமைந்துள்ளது. அங்கு 500க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளன. இதனை சுற்றிய டிவிஎஸ் வீதி, மணிக்கூண்டு சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, காந்திஜி சாலை சென்ட்ரல் தியேட்டர் மார்க்கெட், பனியன் மார்க்கெட், ஆர்கேவி சாலை பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், குடோன்களின் மொத்த விற்பனை நடந்து வருகிறது.

இங்கு ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திருப்பூர் உட்பட பல்வேறு பகுதியினர் நிரந்தர, தற்காலிக கடைகள் அமைத்து ஜவுளி விற்பனை செய்கின்றனர். பன்னீர்செல்வம் பூங்காவை கடந்து, மணிக்கூண்டு சாலை வழியாக பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள், பிற வாகனங்களை கடந்த, 3 நாட்களாக தடை செய்து, ஜவுளி வியாபாரத்துக்கு போலீசார் ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர்.

பன்னீர்செல்வம் பூங்கா அருகே பேரிக்காட் போட்டு தடுத்ததால், மணிக்கூண்டு சாலை முழுமையையும் இருபுறம், நடுவிலும் கட்டில்கள், சாலை ஓரம், சாலையின் நடுவே தார் பாய், பிற பாய் போட்டும் 'டி' வடிவிலான பெரிய கம்புகளில் ரெடிமேட் ஆடைகளை வைத்து நின்று கொண்டும் ஜவுளி விற்பனை நடக்கிறது. இதில், 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதால், கிராமங்களில் இருந்து வருவோர், இவர்களிடம் ஜவுளிகளை வாங்கி கொண்டு, கனி மார்க்கெட் உட்பட நிரந்தர கடைகளுக்கு செல்லாமல் தவிர்ப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், இப்பிரச்சினை அதிகமானதால், கனி மார்க்கெட் மற்றும் பிற வீதிகளில் உள்ள ஜவுளி வியாபாரிகள், மணிக்கூண்டு சாலையில் உள்ள தற்காலிக கடைகளை முற்றுகையிட்டும், அங்கு கடை போடக்கூடாது என்றும் பிரச்சினையில் ஈடுபட்டனர். ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு தற்காலிக கடைகள், நடுசாலையில் போடப்பட்ட கடைகளை அகற்றினர்.

கனி மார்க்கெட் ஜவுளி கடை வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட் அளித்த பேட்டியில், மாநகராட்சிக்கு சொந்தமான கனி மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தி, பல ஆயிரம் ரூபாய் மாத வாடகை செலுத்தி கடை நடத்துகிறோம். சுற்றி உள்ள பகுதியிலும், பல ஆயிரம் ரூபாய் வாடகையில் நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் செயல்படுகிறது. அக்கடைகளுக்கு பொதுமக்கள், வியாபாரிகள் செல்ல விடாமல், சாலையை முழுவதும் ஆக்கிரமித்து தற்காலிக ஜவுளி கடைகளை போட்டால், எங்களது கடைகளுக்கு மக்கள் வராத நிலை ஏற்படுகிறது.

தீபாவளிக்கு முந்தைய நாள் விற்பனை முக்கியமானது. ஆண்டுக்கு ஒரு முறை நடப்பதை, மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு, எங்களது வியாபாரத்துக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதுபற்றி மாநகராட்சிக்கு தொடர்பு கொண்டு பேசினால், ஒரு அதிகாரியும் வர மறுக்கின்றனர். போலீசார் வந்து, தற்காலிக கடைகளை அகற்றினாலும், சிறிது நேரத்தில் மீண்டும் கடை போடுகின்றனர். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தினால் மட்டுமே, வரும் ஆண்டுகளில் நிரந்தர கடைகளில் விற்பனை நடக்கும் என கூறினார்.

செவ்வாய், 29 அக்டோபர், 2024

ஈரோடு மாவட்டத்தில் 19.64 லட்சம் வாக்காளர்கள்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஈரோடு மாவட்டத்தில் 19.64 லட்சம் வாக்காளர்கள்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஈரோடு மாவட்டத்தில் இன்று (29ம் தேதி) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி, மொத்தமுள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் 19 லட்சத்து 64 ஆயிரத்து 676 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2025ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் (31.12.2006 அன்று வரை பிறந்தவர்கள்) விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளவும் மற்றும் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தவும் ஏதுவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2025-க்கான கால அட்டவணையை அறிவித்துள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (அக்.29) வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில், 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 21,465 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டும், 19,645 வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, 19,64,676 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 3.22 சதவீதம் அதிகமாக உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகம், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகம் மற்றும் வாக்குசாவடி மையங்களின் அமைவிடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 305 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 142 பெண் வாக்காளர்களும், 33 மற்ற வாக்காளர்களும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 258 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 53 ஆயிரத்து 178 பெண் வாக்காளர்களும், 48 மற்ற வாக்காளர்களும், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 634 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 167 பெண் வாக்காளர்களும், 12 மற்ற வாக்காளர்களும் உள்ளனர்.

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 331 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 21 ஆயிரத்து 676 பெண் வாக்காளர்களும், 11 மற்ற வாக்காளர்களும், பவானி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 248 வாக்காளர்களும், 1 லட்சத்து 22 ஆயிரத்து‌ 737 பெண் வாக்காளர்களும், 18 மற்ற வாக்காளர்களும், அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 263 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 11 ஆயிரத்து 436 பெண் வாக்காளர்களும், 26 மற்ற வாக்காளர்களும், கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 853 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 33 ஆயிரத்து 443 பெண் வாக்காளர்களும், 12 மற்ற வாக்காளர்களும் உள்ளனர்.

பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 814 ஆண் வாக்காளர்களும். 1 லட்சத்து 35 ஆயிரத்து 010 பெண் வாக்காளர்களும், 21 மற்ற வாக்காளர்களும் என 9 லட்சத்து 50 ஆயிரத்து 706 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 13 ஆயிரத்து 789 பெண் வாக்காளர்களும், 181 மற்ற வாக்காளர்களும் என 19 லட்சத்து 64 ஆயிரத்து 676 மொத்த வாக்காளர்கள் உள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குசாவடி அமைவிடங்களிலும் அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப படிவங்களை இன்று (29ம் தேதி) முதல் அடுத்த மாதம் 28ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

மேலும், சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் ஒரு பகுதியாக சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குசாவடிகளிலும் வருகின்ற நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்த முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். 01.01.2025-ம் நாளன்று 18 வயது பூர்த்தியடைந்த (31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிறந்துள்ள) நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த சிறப்பு சுருக்கத்திருத்த காலத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

17 வயது முடிவடைந்த நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்னதாக விண்ணப்பிக்கலாம். ஏப்ரல்-1, ஜூலை-1 மற்றும் அக்டோபர்-1 ஆகிய காலாண்டுகளில் 18 வயது பூர்த்தியடையும் தகுதியுள்ள விண்ணப்பதார்களின் விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் அந்தந்த காலாண்டுகளில் முதல் மாதத்தில் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் இணைக்க பொதுமக்கள் இணைய வழி முகவரியான www.voters.eci.gov.in என்ற தளம் வாயிலாக மற்றும் Voters helpline App என்ற செயலி வாயிலாக விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 06.01.2025 அன்று வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பழுதடைந்த மற்றும் செயல்படாத கட்டிடங்களில் அமையப்பெற்ற வாக்குசாவடிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் (பாகம் எண்-292), பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் (பாகம் எண்-145) என தலா ஒரு வாக்குசாவடி அமைவிடமும் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 15 வாக்குசாவடி அமைவிடங்கள் (பாகம் எண்கள்- 95, 109, 110, 111, 117, 118, 236, 237, 238, 239, 242,243, 244, 247 மற்றும் 248) என ஆக மொத்தம் 17 வாக்குசாவடியின் அமைவிடங்கள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.

இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 959 வாக்குசாவடி அமைவிடங்களில் 2,222 வாக்குசாவடி நிலையங்கள் அமைந்து உள்ளன. வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகம், கோரிக்கைகள் தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடமோ, சம்மந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடமோ அல்லது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-(0424) மூலம் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 63.8 சதவீதம் வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார் உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள், தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

திங்கள், 28 அக்டோபர், 2024

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்கள்: ஈரோடு ஆட்சியர் தகவல்!

ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்கள்: ஈரோடு ஆட்சியர் தகவல்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (28ம் தேதி) திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவிமையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை பின்வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அலுவலக நாட்களில் அலுவலக பணிநேரத்தில் புகார்களை பதிவு செய்ய 18002021989 அல்லது 14566 என்ற உதவி எண்ணை அழைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் (அக்.28 முதல் நவ.3 வரை) கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (28ம் தேதி) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியான, நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கியத் தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன், விழிப்புணர்வு, நேர்மை, கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.

எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன்.

பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை அனைத்துத் துறை அலுவலர்களும் வாசித்து நேர்மை உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி உட்பட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.