சனி, 9 நவம்பர், 2024

102ல் சுகாதார ஆலோசகர் பணி: ஈரோட்டில் 11ம் தேதி நேர்முகத் தேர்வு

102ல் சுகாதார ஆலோசகர் பணி: ஈரோட்டில் 11ம் தேதி நேர்முகத் தேர்வு

கர்ப்பிணிகளுக்கான 102 மருத்துவ சேவையில் பணி புரிவதற்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 11ம் தேதி (திங்கட்கிழமை) மதியம் 2 மணி முதல் 4 மணி வரை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் பழைய கட்டடம் 2வது தளத்தில் நடைபெற உள்ளது.

102 மருத்துவ சேவை சுகாதார ஆலோசகர் பணிபுரிய அடிப்படை கல்வித் தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங், ஜி என் எம், ஏ என் எம் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 19 முதல் 30க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் மொத்த ஊதியமாக வழங்கப்படும்

மேலும் விவரங்கள் அறிய 73977 24813, 73388 94971 மற்றும் 89259 41108 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என 108 ஆம்புலன்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை, கோபியில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆய்வு

பெருந்துறை, கோபியில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆய்வு

பெருந்துறை மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவு, பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா இன்று (நவ.9) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவு, பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாநில ஆணையாளர் லால்வேனா இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பெருந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், மற்றும் மருந்து சாதனங்கள் (மருத்துவ கையுறைகள்) தொடர்பான தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம், கொளப்பலூரில் செயல்பட்டு வரும் மருந்து சாதனங்கள் (மருந்து ஊசிகள்) தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றில் ஆய்வு கொண்டார். இதனையடுத்து, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை, மற்றும் உதவி இயக்குநர் மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு, பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, இணை இயக்குநர் (மருந்து கட்டுப்பாடுத் துறை) கார்த்திகேயன், உதவி இயக்குநர் ராம்பிரபு, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.தங்க விக்னேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஈரோடு மாநகராட்சியில் ஆய்வக நுட்புநர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாநகராட்சியில் ஆய்வக நுட்புநர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வக நுட்புநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வக நுட்புநர் 4 காலிப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாதம் ரூ.13,500 சம்பளம் வழங்கப்படும்.

இந்த பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று Diploma in Lab Technician (2 Years Duration) or certificate in Medical Lab Technology Course (1 Years Duration) தமிழ்நாடு அரசால் அங்கரிக்கப்பட்ட பயிற்சி பள்ளியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.

ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். ஏக்காரணம் கொண்டும் பணிவரன்முறை, அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. கல்வி சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை வரும் நவம்பர் 25ம் தேதிக்குள் ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்பி பயன்பெறுமாறு ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ்.என் தெரிவித்துள்ளார்.