புதன், 27 நவம்பர், 2024

ஈரோடு: டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை எனக்கூறி ரூ.13.57 லட்சம் மோசடி; இருவர் கைது

ஈரோடு: டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை எனக்கூறி ரூ.13.57 லட்சம் மோசடி; இருவர் கைது

ஈரோட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் டெலிகிராம் என்ற செயலியில் ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பியுள்ளார். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைனில் வேலை எனக்கூறியவரின் வங்கி கணக்கிற்கு ரூ.13 லட்சத்து 57 ஆயிரத்து 946 செலுத்தி ஆன்லைனில் வேலை செய்தார்.

ஆனால் அவருக்கு எந்த வித வருமானமும் கிடைக்கவில்லை. இதனால் டெலிகிராம் செயலி மூலம் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், அந்த நபரோ டெலிகிராம் ஐடி கணக்கை முடக்கி இருந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் ஈரோடு மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில் ஈரோடு சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், டெலிகிராம் செயலி மூலம் மோசடி செய்த கொள்ளையர்கள் கோவை ரத்தினபுரி அண்ணாநகர் 2வது குறுக்கு தெரு, கண்ணுசாமி கவுண்டர் வீதியை சேர்ந்த அந்தோணி என்பவருடைய மகன் சஞ்சய் (வயது 23), கணபதிலட்சுமிபுரம், சத்தி ரோடு முன்னாள் ராணுவ வீரர் காலனி பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவருடைய மகன் ராம்குமார் (28) ஆகியோர் என்பது தெரிந்தது.
மேலும், இவர்கள் இருவர் மீது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் 126 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், சிம்கார்டு, 25 வங்கி கணக்கு புத்தகங்கள், 24 வங்கி காசோலை புத்தகங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைத்தனர்.


108 ஆம்புலன்ஸ் வேலை வாய்ப்பு: ஈரோட்டில் நவ.30ம் தேதி நேர்முகத் தேர்வு

108 ஆம்புலன்ஸ் வேலை வாய்ப்பு: ஈரோட்டில் நவ.30ம் தேதி நேர்முகத் தேர்வு

ஈரோடு 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-  

108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புணர் மற்றும் ஓட்டுநர் பணியிடத்துக்கு வரும் நவ.30ம் தேதி காலை 11:30 மணி முதல் 2 மணி வரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டிபி ஹாலில் நேர்முகத் தேர்வு நடக்கிறது.

அவசர கால மருத்துவ நுட்புணர் பணிக்கு அடிப்படைத் தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (12 ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ், பிஎஸ்சி, ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு தேர்வு அன்று 19க்கு குறையாமலும் 30க்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.16,020 மொத்த ஊதியமாக வழங்கப்படும்.
ஓட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும். ஆண், பெண் இரு பலரும் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேஜ் வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரி பார்ப்பதற்காக கொண்டு வர வேண்டும். *மாத ஊதியம் ரூ.15,820 மொத்த ஊதியமாக வழங்கப்படும்.

ஓட்டுநர் பணிக்கு எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு மனித வளத்துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும். அவசர கால மருத்துவ நுட்புணர் பணிக்கு எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான, மற்றும் மனித வளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். முகாமில், தேர்வு செய்யப்படுபவர்கள் 45 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.
மேலும், விவரங்கள் அறிய 044-28888060, 7397724813 , 73388 94971,89259 41108 எண்களை தொடர்பு கொள்ளலாம்.‌ இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


நவ.29ம் தேதி அனைத்து கடைகளும் இயங்கும்: ஈரோடு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு

நவ.29ம் தேதி அனைத்து கடைகளும் இயங்கும்: ஈரோடு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு

நவ.29ம் தேதி அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்கும் என்று ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கடையடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்று ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த பேரமைப்பு தலைவர் சண்முகவேல் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள (ஜிஎஸ்டி) சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் தற்போது வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்கிற புதிய சட்டத்தை நீக்கி கோரி, வரும் டிச.11ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டம் நடத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், அகில இந்திய வணிகர் சம்மேளனம் அடுத்த வாரம் டெல்லியில் கூடி அனைத்து தரப்பு வணிகர்களும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்கிற அளவில் இந்தியா முழுவதும் அனைத்து மாநில வணிகர் சங்கங்களும் ஒன்றிணைந்து காலவரையற்ற கடையடைப்பு செய்வது என்றும் கலந்தாலோசித்து வருகின்றனர்.
ஆகையால், ஒரு மாவட்டத்தில் ஒரு ஊரில் மட்டும் கடையடைப்பு என்பது அங்குள்ள மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மட்டுமே சிரமத்தை உருவாக்கும் என்பதை கருத்தில் கொண்டு வரும் நவ.29ம் தேதி ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக துணை முதல்வரின் 48வது பிறந்தநாள் விழா. சேலம் அண்ணா நகரில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏழை எளியவர்களுக்கு பிரியாணி வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

தமிழக துணை முதல்வரின் 48வது பிறந்தநாள் விழா. சேலம் அண்ணா நகரில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏழை எளியவர்களுக்கு பிரியாணி வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

தமிழக துணை முதல்வரின் 48வது பிறந்தநாள் விழா. சேலம் அண்ணா நகரில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏழை எளியவர்களுக்கு பிரியாணி வழங்கி உற்சாக கொண்டாட்டம்.

திமுக இளைஞரணி தலைவரும் தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் தமிழக முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை அண்ணா நகர் பகுதியில் உள்ள உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பில் ஏழை எளியவர்களுக்கு பிரியாணி வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கொண்டாடி மகிழ்ந்தனர். 

 மன்றத்தின் தலைவர் ஷேக் மதாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சோசியல் வெல்ஃபேர் சபி பாய், மன்றத்தின் செயலாளர் அஜீம் பாஷா மற்றும் பொருளாளர் ஆரிப் உள்ளிட்ட ஒரு முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உதயநிதி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் இனிப்புகளை வழங்கி துணை முதல்வரின் பிறந்த நாளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறனர். சுமார் 500க்கும் மேற்பட்டவருக்கு மத பாகுபாடு இல்லாமல் உணவை உணவை வழங்கி மகிழ்ந்தனர். முன்னதாக சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சிக்கு வருகை தந்த போது மன்ற நிர்வாகிகள் அனைவரும் ஏராளமான பட்டாசுகளை வெடித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 
இந்த நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் லோகநாதன் சிக்கந்தர் பாஷா தர்மராஜ் மற்றும் நடராஜ் உட்பட மன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.