சனி, 1 மார்ச், 2025

ஈரோட்டில் தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு பெற்று கொடுக்க நடவடிக்கை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி

ஈரோட்டில் தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு பெற்று கொடுக்க நடவடிக்கை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி

ஈரோட்டில் தெரு நாய்களுக்கு ஆடுகளை பறிகொடுத்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறி, உரிய இழப்பீடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி.

ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். 

முன்னதாக சென்னிமலை ராமலிங்கபுரத்தை சேர்ந்த வசந்தா மணி, 55 மற்றும் பால சுப்பிரமணியம், 34 ஆகிய விவசாயிகள் மிகுந்த மனவேதனைவுடன் அண்ணாமலையை நேரில் சந்தித்து, தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளான ஆடுகளை, தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டு பறி கொடுத்தது குறித்து விளக்கமாக கோரிக்கை விடுத்தனர்,

விவசாயி வசந்தா மணி கூறுகையில், 15 ஆடுகளை பட்டியில் வைத்து வளர்த்தேன். வெறி நாய்கள் கடித்ததில் 12 ஆடுகள் பலியாகின, மூன்று ஆடுகள் நிலைமை மோசமாக உள்ளது என்றார். 

இதனைத் தொடர்ந்து மற்றொரு விவசாயியான பால சுப்பிரமணியம் கூறுகையில், தங்களது பட்டியில் இருந்த 20 ஆடுகளை, தெருநாய்கள் கடித்து குதறிவிட்டன, எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். 

ஆனால் இழப்பீடு கிடைக்குமா? என தெரியவில்லை என்பதுடன் எங்களின் கால்நடைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கடுமையான மன வேதனையுடன் பாஜக மாநில தலைவரிடம் தெரிவித்துள்ளோம்.

இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது, பெருமளவில் பண இழப்பும் ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஆடுகளை வாங்க வசதி இல்லை, வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறோம் என்றனர்.

விவசாயிகளுக்கு அண்ணாமலை ஆறுதல் கூறி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் வழங்க பாஜக மாவட்டத் தலைவர் எஸ்.எம் செந்தில் உள்ளிட்ட  நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.  பின்னர் உரிய இழப்பீடு கிடைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைப்பதாகவும் விவசாயிகளுக்கு உறுதி அளித்ததுடன், நேரில் வந்து சம்பவ இடத்தையும் பார்வையிடுவதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது

கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது

கர்நாடகாவில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஆசனூரில் போலீஸ் நிலையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், பெரியசாமி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அந்த வழியாக காய்கறி ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வந்தது. அந்த மினிலாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மினிலாரியில் முட்டைகோஸ் மூட்டைகளுக்குள் வேறு சில மூட்டைகளும் இருந்தன.

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பாக்கெட்டுகள் இருந்தது. மொத்தம் 70 மூட்டைகளில் 1.5 டன் புகையிலை பொருட்கள் இருந்தன.
இதையடுத்து, மினிலாரியை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 29), என்பதும், கர்நாடக மாநிலம் சிக்கொலா பகுதியில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு புகையிலை பொருட் களை விற்பதற்காக கடத்தி வந்ததும் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார் மினிலாரியுடன் 1.5 டன் புகையிலை பொருட்களையும் பறி முதல் செய்து, பாலசுப்பிரமணியத்தையும் கைது செய்தனர்.
ஈரோடு திண்டலில் முதல்வர் மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

ஈரோடு திண்டலில் முதல்வர் மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

ஈரோடு திண்டலில் செயல்பட்டு வரும் முதல்வர் மருத்துவத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத் துறையின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக கடந்த 24ம் தேதி திறந்து வைத்தார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 36 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட திண்டல்மலை நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் செயல்படும் முதல்வர் மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 1ம் தேதி) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.