சனி, 12 ஏப்ரல், 2025

சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை மறுபூஜை!

சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை மறுபூஜை!

சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாளை (ஏப்ரல் 14) மறுபூஜை திருவிழா நடக்கிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அரசு விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமை, வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை மற்றும் அமாவாசை, பவுர்ணமி, பண்டிகை நாட்களிலும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

இந்த கோவிலில் குண்டம் திருவிழா கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் சப்பரம் வீதி உலா, கம்பம் சாட்டு விழா நடந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 8ம் தேதி முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையடுத்து, நாளை (திங்கட்கிழமை) மறுபூஜை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவார்கள்.

இதற்காக கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை மாலையில் நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா முடிவடைகிறது.
ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் சிக்கி ரூ.3 லட்சம் லஞ்ச பணம்: 2 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு!

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் சிக்கி ரூ.3 லட்சம் லஞ்ச பணம்: 2 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு!

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் ரூ.3 லட்சம் லஞ்ச பணம் சிக்கியது தொடர்பாக, 2 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அலுவலகத்தில் செயற்பொறியாளர் சேகர் (வயது 52), களப்பணி மேற்பார்வையாளர் சுரேஷ் மணி (வயது 48) ஆகியோரிடம் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சம் பணம் சிக்கியது. அரசின் திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்ததாரரிடம் இருந்து லஞ்சம் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, சேகர், சுரேஷ் மணி ஆகிய 2 பேர் மீது ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களிடம் லஞ்சம் கொடுத்த ஒப்பந்ததாரர் யார்? லஞ்சம் வாங்குவதற்கு வேறு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்கள் கைது!

ஈரோட்டில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்கள் கைது!

ஈரோடு பெரியசேமூர் ஈ.பி.பி.நகரை சேர்ந்தவர் மினிராஜ். இவருடைய மனைவி ரதிகலா (வயது 46). இவர் கடந்த 9ம் தேதி ஈரோடு சூளை சி.கே.நகர் பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது, அவருக்கு வந்த செல்போன் அழைப்பை எடுத்து பேசினார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 சிறுவர்கள் ரதிகலாவின் செல்போனை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து, ரதிகலா கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்போனை பறித்தவர்கள், ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர் அருகே நாட்டு துப்பாக்கியால் சிறுவன் சுட்டதில் தொழிலாளி படுகாயம்!

அந்தியூர் அருகே நாட்டு துப்பாக்கியால் சிறுவன் சுட்டதில் தொழிலாளி படுகாயம்!


அந்தியூர் அருகே விளையாடி கொண்டிருந்தபோது சிறுவன் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஜி.எஸ்.காலனியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் சொந்தமாக 'ஏர்கன்' நாட்டு துப்பாக்கி வைத்துள்ளார். குண்டு நிரப்பப்பட்ட அந்த துப்பாக்கியை அவர் வீட்டின் ஓரிடத்தில் தொங்க விட்டிருந்தார்.

இந்த நிலையில், வெளியூரை சேர்ந்த உறவினர்கள் அவர்களுடைய குழந்தைகளுடன் நேற்று வெங்கடாசலத்தின் வீட்டுக்கு வந்திருந்தனர். பின்னர் சிறுவர்கள் அனைவரும் உற்சாகமாக விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது, தொங்க விடப்பட்டு இருந்த துப்பாக்கி சிறுவன் ஒருவனின் கண்ணில் பட்டது.

அதைத்தொடர்ந்து அவனுக்கு அதை எடுத்து விளையாட வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டது. இதனால் அவன் தொங்கிக்கொண்டு இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து விளையாட ஆரம்பித்தான். அப்போது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் எதிர்பாராதவிதமாக வெங்கடாசலத்தின் உடலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் அலறி துடித்தபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் வெங்கடாசலம் கீழே விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் படுகாயம் அடைந்த வெங்கடாசலத்தை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரது உடலில் பாய்ந்திருந்த குண்டை டாக்டர்கள் அகற்றினர். தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு எம்.பி. பிரகாஷ் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்

ஈரோடு எம்.பி. பிரகாஷ் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, குழு தலைவரும், ஈரோடு எம்.பி.யுமான கே.இ.பிரகாஷ் தலைமை தாங்கினார். இக்குழுவின் நோக்கம், அரசின் திட்டங்கள், நிதிகள் மக்களை சென்றடைவதை உறுதி செய்தல், வளர்ச்சி திட்ட பணிகளை விரைவுபடுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் எடுத்து கொள்ளப்பட்ட திட்டங்களின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் வட்டார வாரியாக பதிவு செய்தோர். பணி வழங்கப்பட்ட நாட்கள், மாநகராட்சியில் நடந்து வரும் பணிகள், அம்ரூத் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு நடந்தது. மாவட்டத்தில் அரசு திட்டங்கள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் கிடைக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவாக முடித்து பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, திருப்பூர் எம்.பி. சுப்பராயன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), மாநகராட்சி மேயர் நாகரத்தினம், காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, வணிகவரி ஈரோடு கோட்ட இணை ஆணையர் (மாவ) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், துணை இயக்குநர் (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்) குலால் யோகேஷ் விலாஸ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் (பொ) தனலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகமது குதுரத்துல்லா (பொது), செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை) சேகர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் பெண்களுக்கான செயற்கை நகை தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி: வரும் ஏப்.21ம் தேதி தொடங்குகிறது!

ஈரோட்டில் பெண்களுக்கான செயற்கை நகை தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி: வரும் ஏப்.21ம் தேதி தொடங்குகிறது!

இதுதொடர்பாக கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- 
ஈரோடு அடுத்த சித்தோடு வாசவி கல்லூரி அருகே அரசினர் பொறியியல் கல்லூரி சாலையில், கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்களுக்கான செயற்கை நகை தயாரிப்பு குறித்து இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியானது, வருகிற ஏப்ரல் மாதம் 21ம் தேதி முதல் தொடங்கி மே மாதம் 7ம் தேதி வரை 14 நாட்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியின் போது சீருடை உணவு இலவசமாக அளிக்கப்படும்.

இப்பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் இருப்போர், அவர்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு, 0424-2400338, 87783 23213, 72006 50604 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோபி அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது

கோபி அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி பெருமுகை ஊராட்சி எரங்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணதாஸ். இவர் கோவையில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி ஹேமப்பிரியா (வயது 44). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோபி கரட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹேமப்பிரியா தவணை தொகையை திருப்பி செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால், நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கடந்த 2ம் தேதி அன்று ஹேமப்பிரியாவின் வீட்டுக்கு சென்று அவரிடம் தவணை தொகையை திருப்பி செலுத்துமாறு கேட்டுள்ளனர். அதற்கு, அவர் தவணை தொகையை செலுத்த கால அவகாசம் கேட்டுள்ளார். அதனை அவர்கள் மறுத்துள்ளனர்.

மேலும், நிதி நிறுவன ஊழியர்கள் ஹேமப்பிரியாவின் வீட்டின் சுவரில், 'இந்த வீடு அடமானத்தில் உள்ளது' என எழுதியுள்ளனர். இதில் மனம் உடைந்த ஹேமப்பிரியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், ஹேமப்பிரியாவை அவதூறாக பேசி தற்கொலைக்கு தூண்டியது நிதி நிறுவன ஊழியர்களான கோபி புதுப்பாளையம் கண்ணகி வீதி நாயக்கன்காட்டை சேர்ந்த சதீஷ் (40), பிச்சாண்டபாளையம் வாட்டர் டேங்க் வீதியை சேர்ந்த பழனிசாமி என்பவருடைய மகன் மெய்கீர்த்தி (28), பொம்மநாயக்கன்பாளையம் தன்னு தெருவை சேர்ந்த பழனிசாமி என்பவருடைய மகன் வெங்கடேஷ் (30), பாரியூர் நல்லாதான் கோவில் வீதியை சேர்ந்த சக்திவேல் (32) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து, அறிந்ததும் 4 பேரும் தலைமறைவானார்கள். அதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், 4 பேரும் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடியில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் கோபியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.