வெள்ளி, 18 ஏப்ரல், 2025

ஈரோட்டில் மாயமான ஆப்பிரிக்கன் கிளியை தேடி அலைந்த தொழில் அதிபர்!

ஈரோட்டில் மாயமான ஆப்பிரிக்கன் கிளியை தேடி அலைந்த தொழில் அதிபர்!

ஈரோட்டை சேர்ந்தவர் சதீஸ். தொழில் அதிபர். இவர் ஆப்பிரிக்கன் கிரே பேரட் என்ற சாம்பல் நிற கிளியை வளர்த்து வந்தார். இந்த கிளி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானது. அந்த கிளியை அவர் தேடியும் கிடைக்காததால் தவித்து போன அவர், கிளியை கண்டுபிடித்து கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று போஸ்டர் ஒட்டினார்.

இந்தநிலையில், அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கோவில் மரத்தில் தான் வளர்த்து வந்த கிளி இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். அந்த கிளி உரிமையாளரை கண்டதும் தோளில் வந்து அமர்ந்த கிளியை அவர் மீட்டு கொஞ்சினார். தற்போது, அவரிடம் கிளி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தாளவாடியில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்!

தாளவாடியில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைக்கிராமத்துக்கு உட்பட்ட பாரதிபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் மின்பழுது ஏற்பட்டது. இந்த பழுதை நீக்குவதற்காக விவசாயிடம் இருந்து மின் கம்பியாளர் மணிகண்டன் ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளார்.
பின்னர், ரூ.1,000 லஞ்சமாக பெற்றுக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர் மீது மின்சார வாரிய அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், வீடியோ காட்சியின் உண்மை தன்மை ஆராயப்பட்டதில், மணிகண்டன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கான உத்தரவை தாளவாடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயராகவன் பிறப்பித்துள்ளார்.

வியாழன், 17 ஏப்ரல், 2025

அறச்சலூர் ஓடாநிலையில் உள்ள மணிமண்டபத்தில் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா: ஈரோடு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

அறச்சலூர் ஓடாநிலையில் உள்ள மணிமண்டபத்தில் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா: ஈரோடு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி, அறச்சலூர் ஓடாநிலை மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 17) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஈரோடு மாவட்டம் அறச்சலூர், ஓடாநிலையில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலைக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆடி 18 அன்று விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரின் பிறந்த நாளான ஏப்ரல் 17ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழா கொண்டாப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று (ஏப்ரல் 17) சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அறச்சலூர் பேரூராட்சி, ஓடாநிலையில் அமைந்துள்ள அவரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ப.ரவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சிவசங்கர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் இரண்டாவது நாளாக ஈரோடு ஆட்சியர் கள ஆய்வு!

கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் இரண்டாவது நாளாக ஈரோடு ஆட்சியர் கள ஆய்வு!

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் இரண்டாவது நாளாக கள் ஆய்வில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 17) ஈடுபட்டார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், விளாங்கோம்பை மற்றும் கம்பனூர் பழங்குடியினர் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (ஏப்ரல் 16) ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அனைத்துத் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.


அதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று (ஏப்ரல் 17), கோபிசெட்டிபாளையம் வட்டம், நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டு, தினசரி வரப்பெறும் பாலின் கொள்ளளவு, சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஈவுத் தொகை ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் நகராட்சி, புதுசாமி கோயில் வீதி, ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்க தயாரிக்கப்பட்ட உணவினை சுவைத்து பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, கோபிசெட்டிபாளையம் வட்டம், கரட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் (சத்துணவு), திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பிரியா, ஜிம்னாஸ்டிக் பயிற்றுநர் தனபாக்கியம் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.