சனி, 19 ஏப்ரல், 2025

ஈரோட்டில் நீட் தேர்வினால் உயிரிந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுக அஞ்சலி!

ஈரோட்டில் நீட் தேர்வினால் உயிரிந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுக அஞ்சலி!

ஈரோட்டில் நீட் தேர்வினால் உயிரிந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய அதிமுகவினர், திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் அதிமுக மாணவரணி சார்பில், நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் கூறி, ஆட்சிக்கு வந்த திமுகவால் இறந்த, 22 மாணவ, மாணவியருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

மாவட்ட மாணவரணி செயலாளர் ரத்தன் பிரித்வி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு, முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் எம்எல்ஏ, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நீட் தேர்வால் இறந்த 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, நீட் ரத்து செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் பேசுகையில், சினிமாவில் இருந்து வந்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் தன்னிடம் உள்ளது என பொய்யாக கூறி ஆட்சிக்கு வந்தனர்.

இன்று வரை அந்த ரகசியத்தையும் கூறவில்லை. நீட் தேர்வையும் ரத்து செய்யவில்லை. மக்களிடம் பொய் கூறுவதுபோல, உச்சநீதிமன்றத்திலும் நீட் தேர்வு ரத்துக்காக வழக்கு தொடுத்தனர். ஆனால் உச்சநீதிமன்றம், கடுமையான கண்டித்ததும், வழக்கை வாபஸ் பெற்று கொண்டனர்.

இவர்களது பேச்சை நம்பிய மாணவ, மாணவியர் மருத்துவ படிப்பு கிடைக்காமல், 22 பேர் தற்கொலை செய்துள்ளனர். இனிமேலும், அதுபோன்ற தற்கொலை நிகழாமல் இருப்பதற்காகவும், இறந்த மாணவ, மாணவியருக்கு அஞ்சலி செலுத்தவும் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கிறோம் என்றார்.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் உத்தரவுப்படி, மாணவரணி சார்பில் நீட் தேர்வால் இறந்த, 22 மாணவ, மாணவியருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மெழுகுவர்த்தை ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினோம்.

நீட் தேர்வு என்பதை, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ரத்து செய்வோம், என்றார்கள். உச்சநதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்ச்சித்ததும், வழக்கை வாபஸ் பெற்றார்கள். அதன்பின், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதுவரை, அதற்கான நல்ல தீர்வை காண இயலவில்லை. 1 கோடி உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று‌ திமுக இளைஞரணி சார்பில் முயற்சி நடந்தும், இன்று வரை வெற்றி காணவில்லை.

எல்லோரது கனவும் நீட் தேர்வு ரத்தும், மாணவர்களுக்கு உள்ள கஷ்டங்களாக தெரிவதால், அதை ரத்து செய்ய வலியுறுத்துகிறோம். ஆனால், திமுக நீட் தேர்வை ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வோம் எனக்கூறி, 4 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியை நடத்திவிட்டு, அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை.

ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வுக்காக, 412 இடங்களில் மையங்கள் அமைத்து பயிற்சி வழங்கினோம். அப்பயிற்சி கூட இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று நிலைமை மாறி, நீட் தேர்வு பயிற்சிக்கு பெருந்தொகையை மாணவர்கள் செலவிட வேண்டி உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பள்ளி கல்வித்துறை – மருத்துவ கல்வித்துறை மூலம் இணைந்து வழங்கி அதன் மூலம் மாணவர்கள் எதிர்காலம் சிறப்பானது. 720 மதிப்பெண்ணுக்கு, 510 மதிப்பெண் பெறும் தனியார் பள்ளி மாணவனுக்கு மருத்துவ கல்வி கிடைக்கும்.

ஆனால், அரசு பள்ளியில் படித்து, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், 150 முதல், 200 மதிப்பெண் பெற்றாலே மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த ஆட்சியில் வாய்ப்புகளை சரியான முறையில் எடுத்து சென்று வழங்கினோம். தற்போது, நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக்கூறி, 4 ஆண்டு காலம் கடந்து விட்டது. 

இன்று வரை அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இந்த அரசு என்ன செய்யப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தில் 2,062 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது: ஆட்சியர் தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தில் 2,062 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது: ஆட்சியர் தகவல்!

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில், தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் "கலைஞர் கைவினைத் திட்டம்" என்ற திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் நேரலையில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டார்.

பின்னர், அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் நடைபெற்ற விழாவில் "கலைஞர் கைவினைத் திட்டம்" என்ற திட்டத்தினை துவக்கி வைத்து, 8,951 பயனாளிகளுக்கு ரூ.170 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.34 கோடி மானியத்தொகையினை வழங்கியுள்ளார்.

இத்திட்டத்தில் பயனாளிகள் அவர்களுக்கான கலைத் தொழிலில் ஐந்தாண்டு அனுபவமுள்ள 35 வயது நிரம்பிய எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். ரூ.50 ஆயிரம் அதிகபட்சமாகக் கொண்ட 25 சதவீத மானியத்தோடு ரூ.3 லட்ச ரூபாய் கடனுதவியாகப் பெற இயலும். 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும்.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி வரை 2,062 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 1,239 விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு 388 பயனாளிகளுக்கு ரூ.8.90 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.1.76 கோடி மானியத்தொகைக்கான கடன் ஒப்புதல் ஆணைகள் பெறப்பட்டுள்ளது.

மேலும் 25 வகையான தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைத்திறன் கலைஞர்கள், தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி பயன் பெறலாம். மேலும், இத்திட்டத்தில் இணைந்து பயன் பெற msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 'பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சென்னிமலை ரோடு, ஈரோடு 638 001' என்ற அலுவலகத்தை அணுகிப் பயனடையலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், கைவினைக் கலைஞர்கள், பயனாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு: மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆய்வு!

ஈரோட்டில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு: மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆய்வு!

ஈரோட்டில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு: மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆய்வு!

ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், வீரப்பன்சத்திரம், சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடுத்த மாதம் (மே மாதம்) இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.

விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள். உணவு பதப்படுத்துபவர்கள். ஏற்றுமதியாளர்களுக்கு இடையே நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள் மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் இக்கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
மேலும், இக்கண்காட்சியில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் திருச்சி ஆகிய 10 மாவட்டங்கள் பங்கேற்க உள்ளன. இக்கண்காட்சியில் அரசு துறைகளின் சார்பில் 70 அரங்குகளும் தனியார் நிறுவனங்கள் சார்பில் (உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உட்பட) 130 அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன.

நாள் ஒன்றுக்கு 5000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் அடுத்த மாதம் இரண்டு நாட்கள் இக்கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இக்கண்காட்சியில் விவசாயிகளுக்கு தேவைப்படும் நவீனரக மற்றும் பாரம்பரிய விதைகள், பழச்செடிகள், குழித்தட்டு நாற்றுகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள், உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் அங்கக இடுபொருட்கள், நவீன வேளாண் இயந்திரங்கள் நுண்ணீர் பாசன உபகரணங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மேலும் இ-வாடகை. உழவன் செயலி, வேளாண் அடுக்ககத்தில் விவசாயிகளுக்கான பதிவு போன்ற சேவைகளும் வழங்கப்படவுள்ளன. இந்த நிலையில், சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன் நேற்று (ஏப்ரல் 19) ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் (பொ) தனலட்சுமி, வேளாண்மைத்துறை இணை தமிழ்ச்செல்வி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இயக்குநர் மரகதமணி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஈரோடு: சித்தோட்டில் போதை மாத்திரை விற்பனை செய்த பாட்டி, பேரன் கைது!

ஈரோடு: சித்தோட்டில் போதை மாத்திரை விற்பனை செய்த பாட்டி, பேரன் கைது!

சித்தோட்டில் போதை மாத்திரை விற்பனை செய்து வந்த பாட்டி மற்றும் பேரனை போலீசார் நேற்று கைது செய்தனர். 
ஈரோடு மாவட்டம் சித்தோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்து வந்தது. இதுகுறித்து சித்தோடு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சித்தோடு ஓடைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த காமராஜ் மகன் சந்தோஷ் குமார் (வயது 20) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து போதை மாத்திரைகள் வெளி மாநிலங்களில் இருந்து மொத்தமாக வாங்கி, அதே பகுதியைச் சேர்ந்த அவரது பாட்டியான ஆறுமுகம் மனைவி திலகா (வயது 65) என்பவரிடம் கொடுத்து சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பாட்டி, பேரன் இருவரையும் கைது செய்த, போலீசார் அவர்களிடம் இருந்து 95 போதை மாத்திரைகள், ஊசி மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை அருகே வீடு புகுந்து பணம், செல்போன், கைக்கடிகாரம் திருடிய 6 பேர் கைது!

பெருந்துறை அருகே வீடு புகுந்து பணம், செல்போன், கைக்கடிகாரம் திருடிய 6 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே உள்ள முள்ளம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் ஈரோடு நீதிமன்றத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த 2ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் வீட்டின் மாடி கதவு திறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராஜேந்திரன் வீட்டிற்கு வந்து பார்த்தார்.

அப்போது வீட்டின் பீரோவின் அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ.26 ஆயிரம், 3 கைக்கடிகாரங்கள், செல்போனை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து அவர் காஞ்சிக்கோவில் போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.

விசாரணையில், சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த செல்வா (24), சக்திவேல் (29), காஞ்சீபுரம் புஷ்பா நகரை சேர்ந்த ரமேஷ் (24), காவனூரை சேர்ந்த குமார் (24), திருவள்ளூர் பெத்தூரை சேர்ந்த சிரஞ்சீவி (37), 15 வயது சிறுவன் ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இருந்த 6 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஈரோட்டில் வடமாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜவுளி வியாபாரி கைது!

ஈரோட்டில் வடமாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜவுளி வியாபாரி கைது!

ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). தனியார் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களது மகன் மணிகண்டன் பூபதி (வயது 47) ஜவுளி வியாபாரி.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுப்பிரமணியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர், அந்த வாலிபர் திடீரென தான் வைத்திருந்த பிளேடால் சுப்பிரமணியின் கழுத்தை அறுத்தார்.

இதனை கண்ட ஜெயலட்சுமி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது, மணிகண்ட பூபதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடித்து கொடுத்து சூரம்பட்டி போலீசில் ஒப்படைத்தார்.

இதில், படுகாயமடைந்த வடமாநில வாலிபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பிளேடால் அறுத்ததில் காயம் அடைந்த சுப்பிரமணி சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தது, மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சோம ஓரான் என்பவருடைய மகன் ராபி ஓரான் (28) என்பது தெரியவந்தது.

இதனிடையே, ராபி ஓரான் இறந்ததையடுத்து, போலீசார் இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை தாக்கிய சுப்பிரமணியின் மகனான மணிகண்ட பூபதியை கைது செய்தனர். மேலும், சில நபர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சத்தியமங்கலம் அருகே கர்நாடக அரசு பேருந்தை வழிமறித்து ரகளை: 4 பேர் கைது!

சத்தியமங்கலம் அருகே கர்நாடக அரசு பேருந்தை வழிமறித்து ரகளை: 4 பேர் கைது!

கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூரு நோக்கி கர்நாடக அரசு பேருந்தை ஒன்று நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி நல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அந்த வழியாக 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கர்நாடக அரசு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டனர். பின்னர், கல்லை எடுத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைக்க முயன்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டதாக புஞ்சைபுளியம்பட்டி ஜெ.ஜெ. நகரை சேர்ந்த சஞ்சய் (வயது 25), பண்ணாரி (வயது 26), சத்தியமங்கலம் கெஞ்சனூரை சேர்ந்த அப்புசாமி (வயது 30), புஞ்சைபுளியம்பட்டி நேருநகரை சேர்ந்த ரோகித் (வயது 20) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.