வெள்ளி, 9 மே, 2025

கொடுமுடியில் முடிவுற்ற 2 புதிய திட்டப் பணிகளை திறந்து வைத்த அமைச்சர்!

கொடுமுடியில் முடிவுற்ற 2 புதிய திட்டப் பணிகளை திறந்து வைத்த அமைச்சர்!

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 1,229 நியாய விலைக்கடைகள் உள்ளது. 899 முழுநேர நியாய விலைக்கடைகள் மற்றும் 330 பகுதி நேர நியாய விலைக்கடைகள் மூலம் 7.64 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், கொடுமுடி வட்டம், கந்தசாமிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட், நடத்தும் முழு நேர நியாய விலைக்கடையான கந்தசாமிபாளையம் நியாய விலைக்கடை 834 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வந்தது.

இக்கடையிலிருந்து சுமார் 204 குடும்ப அட்டைகளை பிரித்து களிப்பாளையம் பகுதியில் பகுதி நேர நியாய விலைக்கடை செயல்பட்டு வந்தது. தற்போது இக்கடைக்கு ஊர் பொதுமக்கள் நிதியுதவியுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கொடுமுடி வட்டம் களிப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பகுதி நேர நியாய விலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று (மே.9) நடைபெற்றது.

இதில், வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி நியாய விலைக் கடையினை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இக்கடையானது பிரதிவாரம் புதன் மற்றும் சனிக்கிழமை செயல்பட உள்ளது.

தொடர்ந்து, இச்சிப்பாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இச்சிப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா, கொடுமுடி வட்டாட்சியர் முருகாயி, கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் அலுவலக மேலாளர் சுமார் 50 லட்சம் மோசடி

சேலம் தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் அலுவலக மேலாளர் சுமார் 50 லட்சம் மோசடி

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் அலுவலக மேலாளர் சுமார் 50 லட்சம் மோசடி 

சேலம் அரிசி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் இவர் சொர்ணபுரி பகுதியில் நான்கு சக்கர வாகனத்திற்கு வங்கியின் மூலமாக கடன் பெற்று தரும் நிதி நிறுவனத்தை 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது அலுவலகத்தில் எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த கார்த்திக் என்பவரை அவர் பணி சிறப்பாக செய்ததன் காரணத்தினால் அனைத்து பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்திருக்கிறார் இதை பயன்படுத்திக் கொண்ட கார்த்திக் அவரது வங்கி கணக்கில் இருந்து சுமார் 46 லட்சத்திற்கு மேலாக சோமசுந்தரம் என்ற நபருக்கு வங்கி பரிவர்த்தனை நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் யார் என்று விசாரித்த பொழுது அவர் அலுவலகத்தில் பணிபுரிந்த கார்த்தியின் சித்தப்பா என்பதும் தெரிய வந்தது இவர் கடந்த 2022 ஆண்டு இறந்துவிட்டார்.  அவர் இறந்த பின்பு 2024 ஆண்டு முதல் 2025 வரை அவரது வங்கி கணக்கில் இறந்து போன சோமசுந்தரம் என்பவருக்கு வங்கி பரிவர்த்தனை செய்தது lகண்டுபிடிக்கபபட்டது. 
இந்நிலையில் கார்த்திக் இடம் விசாரித்த பொழுது அவர் பிரபுமணி இவர் ஏற்கனவே டிவிஎஸ் கிரெடிட் நிறுவனத்தில் கடன் பெற்றிருந்ததும் அந்த கடனை அடைத்தது போல போலியான ஆவணங்களை கொடுத்து கடன் முடிந்தது போல வேறு வங்கியில் இருவரும் சேர்ந்து ரூபாய் 25 லட்சம்வாங்கிக்கொண்டு இருவரும் பிரித்துக் கொண்டனர்.
தற்போது மேற்படி தொகை சதீஷ்குமாரின் நிதி நிறுவனத்தின் பெயரில் வாங்கியதால் கடன் கொடுத்த நிதி நிறுவனம் இவரை கேட்டு வருகின்றது. இதைப் பற்றி கார்த்திக்கிடம் கேட்டால் இன்று வருகிறேன் என்றும் நாளை தருகிறேன் என்றும் அலுவலகத்திற்கும் வராமல் அவரது செல்போனையும் அனைத்து வைத்துவிட்டார். சதீஷ்குமார் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் அவரது அலுவலக பணியாளர்களை வைத்து கார்த்திக் இடம் விசாரித்த பொழுது ஓரிரு மாதங்கள் வாய்தா கேட்டதாகவும் மீண்டும் கேட்டபோது அவரால் தர முடியாமல் போனதாலும் கார்த்திக் செய்த தவறுகளை பயன்படுத்தி அவரது வங்கியில் மற்ற கடன் தாரர்களுக்கு கடன் வாங்கி தருவது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிதி நிறுவனம் முற்றிலும் தொடங்கியதாகவும் தெரிகிறது. மேலும் இவரது நிதி நிறுவனம் முற்றிலும் முடங்கி விட்டதால் இவர்கள் மோசடி செய்த பணத்தினை வங்கியில் இருந்து இவரையே கட்ட சொல்லி தொந்தரவு செய்து வருகிறார்கள். இதனால் சதீஷ்குமார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

புதன், 7 மே, 2025

பெருந்துறை அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்!

பெருந்துறை அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்!

கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஓலப்பாளையம் பிரிவு அருகே இன்று (மே.8) அதிகாலை 2.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது .
இந்த நிலையில், பேருந்தின் குறுக்கே 4 சக்கர வாகனம் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக பேருந்தை ஓட்டுநர் திருப்பிய போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த 13 பயணிகள் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதைத் தொடர்ந்து, உடனடியாக அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவல் இருந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.98 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில் 2வது இடத்தைப் பிடித்து ஈரோடு மாவட்டம் சாதனை!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.98 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில் 2வது இடத்தைப் பிடித்து ஈரோடு மாவட்டம் சாதனை!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஈரோடு மாவட்டம் 97.98 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 2வது இடத்தை பெற்று சாதனை படைத்தது.
தமிழகத்தில் இன்று (மே 8) வியாழக்கிழமை 12ம் வகுப்பு (பிளஸ் 2) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் என பள்ளிகள் உள்பட மெட்ரிக், தனியார் என மொத்தம் 222 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 10,403 மாணவர்கள், 11,876 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 279 பேர் எழுதினர்.

இதில், 10,113 மாணவர்கள், 11,716 மாணவிகள் என மொத்தம் 21,829 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.98 சதவீதமாகும். தேர்ச்சி சதவீதத்தில் ஈரோடு மாவட்டம் தமிழக அளவில் 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. 

கடந்த 2021-22ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.72 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 13ம் இடம் ஈரோடு மாவட்டம் பெற்றது. தொடர்ந்து, கடந்த 2022 -23ம் கல்வியாண்டில் 96.98 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 8ம் இடமும், 2023-24ம் கல்வியாண்டில் 6 இடங்கள் முன்னேறி ஈரோடு மாவட்டம் 2ம் இடம் பெற்றது.

மேலும், கடந்த 2013 2014, 2015 2016 ஆண்டுகளில் மாநில அளவில் முதலிடமும், 2017 2018, 2018 2019, 2020 ஆண்டுகளில் மாநில அளவில் இரண்டாம் இடமும் பெற்று பாராட்டுகளை அள்ளிய ஈரோடு மாவட்டம் நடப்பு 2024-25 கல்வியாண்டில் 97.98 சதவீதத்துடன் மீண்டும் இரண்டாம் இடம் பிடித்து சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோட்டில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: 4 வாலிபர்கள் கைது!

ஈரோட்டில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: 4 வாலிபர்கள் கைது!

ஈரோட்டில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியை 4 வாலிபர்கள் கூட்டு பாலியல் பாலத்காரம் செய்து அடித்து துன்புறுத்தினர். இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.  

அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் கிருஷ்ணன் (வயது 21), சென்னிமலை சாலை மணல்மேட்டை சேர்ந்த வடிவேல் மகன் சந்தோஷ் (வயது 25), ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (வயது 25), மரப்பாலத்தை சேர்ந்த ரவி மகன் குகன் (வயது 23) என நான்கு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
பவானி அருகே திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு!

பவானி அருகே திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க வந்த வாலிபர் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆர்.எஸ் அருகே கொளத்துப்பாளையம் காலனியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்டோர் பவானி தளவாய்பேட்டையில் செல்லும் பவானி ஆற்றில் தீர்த்தம் எடுப்பதற்காக நேற்று மாலை வந்தனர்.
அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் (வயது 35) என்பவரும் வந்திருந்தார். அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தபோது தர்மலிங்கம் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது ஆற்றில் இருந்த சுழலில் சிக்கிக்கொண்டார். நீச்சல் தெரியாததால் கண்இமைக்கும் நேரத்தில் தண்ணீரில் மூழ்கினார்.

உடன் வந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினார்கள். இரவு 7.30 மணி அளவில் தர்மலிங்கத்தின் உடல் மீட்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தர்மலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே விறகு சேகரிக்க சென்ற பெண் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு!

சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே விறகு சேகரிக்க சென்ற பெண் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரை அருகே உள்ள குன்றி குஜ்ஜம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கெஞ்சன் மனைவி நாகி (வயது 44). இவர் நேற்று கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றுள்ளார்.

அவருடன் சில பெண்களும் விறகு சேகரிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு புதருக்குள் மறைந்திருந்த காட்டு யானை திடீரென வெளியே வந்தது. அந்த யானை அங்கு விறகு சேகரித்துக்கொண்டிருந்த நாகியை தாக்கியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்டதும் அங்கு விறகு பொறுக்கி கொண்டிருந்த மற்ற பெண்கள் தப்பி ஓடினர். பின்னர், அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடம்பூர் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.