செவ்வாய், 29 ஏப்ரல், 2025

தேசிய அளவிலான ஏரோபிக்ஸ் போட்டி: ஈரோடு, நாமக்கல் மாவட்ட வீரர், வீராங்கனைகள் சாதனை!

தேசிய அளவிலான ஏரோபிக்ஸ் போட்டி: ஈரோடு, நாமக்கல் மாவட்ட வீரர், வீராங்கனைகள் சாதனை!


சாதனை படைத்துவிட்டு ஈரோடு திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய அளவிலான ஏரோபிக்ஸ் போட்டி கோவா மாநிலம் மட்கோன் பகுதியில் கடந்த 25-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் 15 மாநிலங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் தமிழகத்தின் சார்பில் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை வென்றனர். 

அதன்படி 14 வயதுக்குட்பட்ட ஏரோ குழு போட்டியில் யோகவர்ஷினி, ஸ்ரீயா, தாரணி, இனியா, யத்விக், ஐஸ்வர்யா, பிரஜித் ஸ்ரீமன், ஜேஷ்னா, கனிஷ்கா, ஹர்சிதா ஆகியோர் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தனர். 

11 வயதுக்குட்பட்ட டிரியோ போட்டியில் யோகவர்ஷினி, ஐஸ்வர்யா, ஜெஷினா ஆகியோரும், 17 வயதுக்குபட்ட பிரிவில் தாரணி, கனிஷ்கா, ஹர்சிதா ஆகியோரும் 2-வது இடத்தை பிடித்தனர். தனிநபர் ஏரோபிக்ஸ் போட்டியில் 11 வயதுக்குட்பட்ட பிரிவில் இனியாவும், 9 வயதுக்குட்பட்ட பிரிவில் யாத்விக்கும் 2-வது இடத்தை பிடித்தனர்.

தேசிய அளவில் சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் மூசாவுக்கும் ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில், செலபிரடெக்ஸ் ஈவன்ட்ஸ் முதன்மை செயல் அதிகாரி அப்துல் முனாசிர் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார்.

திங்கள், 28 ஏப்ரல், 2025

ஈரோடு | மே 1ம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை!

ஈரோடு | மே 1ம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை!

ஈரோடு மாவட்டத்தில் எதிர்வரும் 1ம் தேதி மே தினத்தை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.1, எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 மதுபான விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மேற்கண்ட தினத்தில் மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினத்தில் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மே 1ம் தேதி முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.1, எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 மதுபான உரிமதலங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்!

ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்!

ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று, குறைகளைக் கேட்டறிந்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி, புல எல்லை தொடர்பாக மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 308 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், உதவி ஆணையர் (கலால்) தியாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நூர்ஜகான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, துணை ஆட்சியர் (பயிற்சி) கே.சிவபிரகாசம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு: சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பின்னிங் ஆலையை மூட வலியுறுத்தி, மில்லின் அருகே வசித்து வருபவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி!

ஈரோடு: சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பின்னிங் ஆலையை மூட வலியுறுத்தி, மில்லின் அருகே வசித்து வருபவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி!

சென்னிமலை அருகே சட்ட விரோதமாக செயல்படும் ஸ்பின்னிங் ஆலையை மூட வலியுறுத்தி, மில்லின் அருகே வசித்து வருபவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டம் அம்மாபாளையம், கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன், இவரது மனைவி ராஜம்மாள் இவர்களது மகன் சீனிவாசன்.  இவர்கள் அனைவரும் நெசவு கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே தனியார் நபர் பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் ஸ்பின்னிங் மில்லை இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் செயல்பட துவங்கியது.

இங்கிருந்து வெளியேறும் பஞ்சு கழிவுகளால்,அருகில் வசிக்கும் இந்த குடும்பத்தாருக்கு மூச்சு திணறல், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனை போன்றவர்கள் ஏற்பட்டதால் இந்த ஆலையை மூட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு, இந்த ஸ்பின்னி மில் தொடர்பாக ஆய்வு நடத்தவேண்டுமென அறிவுறுத்தி இருந்தனர். 

பின்னர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஸ்பின்னிங் மில்லில் ஆய்வு மேற்கொண்டு கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று பாதிப்பு உள்ளது என்று தகவலை மாவட்ட நிர்வாகத்தில் வழங்கினர். 

இதனையெடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி அன்று ஸ்பின்னிங மில்லை மூட வேண்டும் என உத்தரவிட்டார்.  

இதனை பொருட்படுத்தாத ஸ்பின்னிங் மில் ஆலை உரிமையாளர் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் இரவு பகல் பார்க்காமல் 24 மணி நேரம் ஆலையை செயல்படுத்தி வருகிறார். 

இதனால் மீண்டும் தங்களுக்கு உடல் உபாதை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரான ராமநாதன்அவரது மனைவி ராஜமாள், மகன் சீனிவாசன் ஆகியோர் விஷம் அருந்தி தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்வதாக கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் முன்னிலையில், அவர்கள் தடுக்கப்பட்டு முறைப்படி ஆட்சியரிடம், இது சம்பந்தமாக தெரிவித்து, அந்த ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் காமராசர் பேச்சுவார்த்தை நடத்தியதால், ராமநாதன் குடும்பத்தினர் திரும்பச் சென்றனர், இந்தச் சம்பவம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.