ஞாயிறு, 22 ஜனவரி, 2023

மக்களின் மனநிலையை பொறுத்துதான் வெற்றி, தோல்வி அமையும் என முன்னாள் அமைச்சர் கே எ செங்கோட்டையன் பேட்டி ...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக எடப்பாடியார் அணி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணியின் தேர்தல் பணிமனை கால்கோல் விழா GH ரவுண்டானா துளசி கபே பின்புறம் முன்னாள் அமைச்சர், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியை பொருத்த வரையிலும் எப்போதும் அண்ணா திமுகவின் கோட்டையாக இருந்திருக்கிறது. எங்களைப் பொருத்த வரையிலும் இந்த தேர்தலில் அமைதியான முறையில் பிரசாரம் செய்தும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரித்தும் நாங்கள் வெற்றி பெறுவோம். மற்றவர்கள் கூறுவதைப் போல ஆளுங்கட்சியினர் இந்த தேர்தலில் எளிதாக வெற்றி பெற்று விட முடியாது. எங்களது கூட்டணி கட்சியினருடன் கலந்து பேசி யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார். அதிமுகவை பொருத்த வரையிலும் முதன்முதலாக 1972 ஆம் ஆண்டு திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு எப்படி வெற்றி பெற்றோமோ அதேபோன்ற ஒரு வெற்றியை ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாங்கள் பெறுவோம்.
தற்போதைய சூழ்நிலையில் மக்கள் மனம் மாறி இருக்கிறார்கள் . ஆளுங்கட்சி மீதான வெறுப்பு அதிகரித்து இருக்கிறது. நாங்கள் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் எங்களது ஆதரவு உங்களுக்கு தான் என்று மக்கள் ஆர்வத்தோடு கூறுகிறார்கள். ஆகவே வெற்றியை இலக்காகக் கொண்டு தான் அதிமுக இந்த தேர்தலில் பணியாற்றும். அதிமுகவை பொறுத்த வரையிலும் இந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு அதனை பரிசீலனை செய்து பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இரட்டை இலை சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோமா?, யார் வேட்பாளர், பாஜக எங்களுக்கு ஆதரவு அளிக்குமா? என்ற கேள்விகளுக்கு பதில், "பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்பதாகத்தான் இருக்கும். தேர்தல் களத்தில் எப்படி போட்டிகள் இருக்கும் என்பதை பொறுத்து தான் எதையும் கூற முடியும். தேர்தல் பிரசாரம் ஏன் இன்னும் தூங்கவில்லை என்று கேட்கிறீர்கள். அதற்கான கால அவகாசம் இருக்கிறது. இப்போது எங்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறோம். தொகுதி முழுவதும் காங்கிரசுக்கு ஆதரவாக அனுதாப அலை வீசுவதாக கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தல் களம் என்பது வேறு. இங்கு மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை பொறுத்துதான் வெற்றி, தோல்வி அமையும். இந்த தேர்தலை அமைதியான முறையில் எதிர்கொண்டு நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: