வீரப்பன் கூட்டாளி மீசைக்கார மாதையன் (வயது 73) உயிரிழந்தார்...
வீரப்பன் கூட்டாளிகளில் முக்கியமானவர், இவருடைய குடும்பத்துக்கும், வீரப்பன் குடும்பத்துக்கும் பங்காளி உறவு. மீசை மாதையன் குடும்பமே வீரப்பனுக்கு விசுவாசமாக இருந்துள்ளது. இவரது தம்பி சாமிநாதன், முனியன், சுண்டா வெள்ளையன், மகன் மாதேஷ் ஆகியோர் வீரப்பன் சந்தனமரம் வியாபாரம் செய்த நேரத்தில் அவருடைய குழுவிலிருந்துள்ளனர்.
பிறகு, போலீஸ் தேடுதலுக்குப் பயந்து காட்டுக்குள்ளேயே தலைமறைவாக இருந்தனர். இதில், சாமிநாதன் மட்டும் 1991-இல் DCF ஸ்ரீநிவாஸ் அவர்களிடம் சரணடைந்து விடுகிறார்.
1993-இல், முனியன், சுண்டா வெள்ளையன் இருவரும் போலீசாரிடம் சரணடைந்த பின் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.
1998 மீசைக்கார மாதையனின் மகன் மாதேஷ் சத்தியமங்கலம் காட்டில் உள்ள புளியங்கோம்பை என்ற ஊரில் தமிழ்நாடு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் மோகன் நவாஷால் சுட்டுக்கொல்லப்படுகிறார்.
1993- இல் வீரப்பன் குழுவிலிருந்து செங்கப்பாடிக்கு தப்பி வந்த மீசை மாதையன் கர்நாடக போலீசில் சரணடைகிறார். அவர்மீது நான்கு தடா வழக்குகள் பதியப்படுகிறது. விசாரணை முடிவில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
மேல் முறையீட்டு மனு விசாரணைக்குப் பின்னர், உச்ச நீதிமன்றம், மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய நால்வரின் ஆயுள் தண்டனையைத் தூக்கு தண்டனையாக மாற்றுகிறது.
இதை எதிர்த்து ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பப்பட்டது. அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மனுவைத் தள்ளுபடி செய்கிறார். நால்வருக்கும் தூக்கில்போட நாள் குறிக்கப்பட்டது.
குடியரசுத்தலைவர் மனுவை முறையான காலத்தில் பரிசீலனை செய்து முடிக்கவில்லை என்ற சமூக ஆர்வலர்களின் கடுமையான போராட்டத்தோடு உச்ச நீதி மன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
விசாரணைக்குப் பின்னர், குடியரசுத்தலைவர், கருணை மனுவை ஒன்பது ஆண்டுக்காலம் ஆய்வுக்கு உட்படுத்தாமல் வைத்திருந்த காரணத்தினால், இந்த நால்வரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தலைமை நீதியரசர் சதாசிவம், ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் தலைமையிலான முதல் அமர்வு ஒரு சிறப்பான தீர்ப்பை வழங்கினர்.
ஜனவரி 2014 இல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டாலும், கர்நாடக மாநில அரசும் சிறைத்துறையும் இந்த நால்வரையும் விடுதலை செய்யாமலே சிறையில் வைத்திருந்தனர்.
2018, மே மாதம், சைமன் என்பவரும், 2022, இல் பிலவேந்திரனும் சிறைக்குள்ளேயே உயிரிழந்தனர். 2023-பிப்ரவரியில் சிறுநீரகம் பழுதான ஞானபிரகாசம், பரேலில் வெளியே வந்தார்.
31 ஆண்டுகளாக மைசூர் சிறையிலிருந்த, மீசை மாதையன் கடந்த 11, ஆம் தேதி அதிகாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு, நினைவிழந்த நிலைக்குச் சென்றார்.
முதல் கட்டமாக மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு, பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மீசை மாதையன் இன்று மாலை மூன்று மணிக்கு நினைவு திரும்பாமலே உயிரிழந்தார்.
வீரப்பன் கூட்டாளிகள் என்ற பெயரில் சிறையிலிருந்த கடைசி நபர் இந்த மீசைக்கார மாதையன்.
0 coment rios: