இந்தியாவில் முதல் முறையாக 'Water Budget'.. கேரளா அரசின் விநோத முயற்சி, ஆனா ரொம்ப முக்கியம்..!
இந்தியாவில் மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. மத்திய அரசு ரயில்வே பட்ஜெட்-ஐ பொது பட்ஜெட் உடன் இணைந்துள்ள வேளையில் தமிழ்நாடு அரசு விவசாய துறைக்கு தனி பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்கிறது. இந்த நிலையில் கேரளா அரசு புதிதாக Water Budget என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
God's Own Country என அழைக்கப்படும் கேரளாவில் ஏராளமான ஆறுகள், ஓடைகள், உப்பங்கழிகள் மற்றும் சிறப்பான மழைப்பொழிவு ஆகியவை அம்மாநிலத்தின் பசுமைக்கு முக்கிய பங்களிக்கின்றன. ஆனாலும் கேரளாவில் இன்னும் பல பகுதிகளில் கோடைகாலம் வந்துவிட்டால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.
தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் முன்பே கேரள அரசு தண்ணீர் பட்ஜெட் உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கேரள அரசு Water Budget என்ற ஒரு விஷயத்தை கையில் எடுத்துள்ளது, இதன் மூலம் இம்மாநிலத்தில் இருக்கும் 15 தொகுதி பஞ்சாயத்துகளில் உள்ள 94 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய முதல் கட்ட நீர் பட்ஜெட்டின் விவரங்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டு உள்ளார்.
கேரள மாநிலத்தில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால், நீர் வளத்தை முறையாகப் பயன்படுத்தவும், வீணாவதைத் தடுக்கவும் தண்ணீர் பட்ஜெட் உதவிகரமாக இருக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரள அரசின் இப்புதிய முயற்தியை நீர் வல்லுநர்கள் வரவேற்று உள்ளனர். இது மட்டும் அல்லாமல் விலைமதிப்பற்ற நீர் வளத்தின் தேவை மற்றும் விநியோகத்தை அறிந்து, அதற்கேற்ப பங்கீடு செய்ய இந்த Water Budget உதவும் என்று கூறுகின்றனர். இது தண்ணீர் பற்றாக்குறையின் பிரச்சினை அல்ல, சரியாக நிர்வாகம் செய்யாதது தான் பிரச்சனை என்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற லிம்னாலஜிஸ்ட் மற்றும் SCMS Water Institute இயக்குநரான டாக்டர் சன்னி ஜார்ஜ் கூறியுள்ளார்.
இந்த Water Budget-ன் முதல் பணியாக கேரள அரசு 15 தொகுதி பஞ்சாயத்துகளில் உள்ள 94 கிராம பஞ்சாயத்துகளில், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ள மழைப்பொழிவு, சதுப்பு நிலங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகள் உட்பட அனைத்து நீர் ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, மனிதர்கள் மற்றும் விலங்குகள், விவசாயம் மற்றும் தொழில்களின் தேவையையும் கணக்கிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் தேவையை உணர்ந்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுவது தான் இந்த வாட்டர் பட்ஜெட்-ன் முக்கிய பணியாகும். இதன் மூலம் தண்ணீர் முறையாக பயன்படுத்துவதை தாண்டி யாரும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படால் இருக்க முடியும். இது பிற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியும்.
0 coment rios: