ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் கிட்டுசாமி (வயது 52). போர்வெல் லாரி உரிமையாளரான இவர், சித்தோடு கோணவாய்க்கால் தேசிய நெடுஞ்சாலை பாலத்துக்கு அடியில் லாரியை நிறுத்தி வைத்து விட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு போர்போடும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, திருப்பூர் மாவட்டம் காங்கயத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இவரிடம் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளார்.
கடந்த 10 நாட்களாக வேலை செய்து வந்த நிலையில், கடந்த 22ம் தேதி மாலை பாலத்துக்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான லாரியை ரமேஷ் திருடிச் சென்று விட்டார். லாரி உரிமையாளர் கிட்டுசாமிக்கு ரமேஷின் பெயர் மட்டுமே தெரிந்த நிலையில் பிற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து கிட்டுசாமி சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் லாரியை தேடி வந்தனர். விசாரணையில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துக்காடியூர் அருகே போர்வெல் லாரி இருப்பது ஜிபிஆர்எஸ் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் லாரியை மீட்டு சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும், லாரியை கடத்திச் சென்ற ரமேசை போலீசார் தேடி வருகின்றனர். புகார் அளித்த 12 மணி நேரத்தில் லாரியை போலீசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: