திங்கள், 6 நவம்பர், 2023

தமாகா யாருடன் கூட்டணி என்பதை ஜனவரியில் முடிவு செய்வோம்; ஜி.கே.வாசன் பேட்டி

தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் ஈரோடு வில்லரசம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு இலவச கையேடுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: 
 நீட் தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டு 1500 மாணவர்களுக்கு ரூ.5,000 மதிப்புள்ள புத்தகங்கள் தமாகா இளைஞர் அணி சார்பில் வழங்கப்பட்டது. அவர்களில் நீட் தேர்வு எழுதிய 16 மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அதேபோல இந்த ஆண்டிலும் 1,500 மாணவர்களுக்கு இலவச கையேடுகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மாணவர்கள் நீட் தேர்வை  எதிர்கொள்ளும் அளவிற்கு தயாராகி  நல்ல முறையில் எழுதி தேர்ச்சி பெற்று வருகிறார்கள். அந்த மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நீட் தேர்வு விலக்கு கோரி கையெழுத்து இயக்கத்தை திமுக ஆரம்பித்துள்ளது. இது மாணவர்கள் மத்தியிலே குழப்பத்தையும்,  பெற்றோர் மத்தியில் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. எனவே தயவு செய்து கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நீட் தேர்வை காரணமாக வைத்து வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று திமுகவை வலியுறுத்துகிறேன்.  பண்டிகை காலங்களில் விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும். பருப்பு,  எண்ணெய், அரிசி விலை அதிவேகமாக உயர்ந்து வருகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது அத்தியாவசியமாகும்.
 மின் கட்டண உயர்வால் தொழில்கள் முடங்கியுள்ளன. குறிப்பாக கோவை, திருப்பூர், பல்லடம், ஈரோடு போன்ற பகுதிகளில் விசைத்தறிகள் முடங்கி உள்ளன. கழிவு பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். பருத்தி மீதான சிறப்பு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்.  
வரிஏய்ப்பில்  ஈடுபடுபவர்கள், அரசுக்கு முறையாக வரி செலுத்தாதவர்கள் போன்றவர்கள் மீது தான் அமலாக்கப் பிரிவு போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் சோதனை நடத்துகின்றன. இந்த சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சோதனைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் தாங்கள் நிரபராதிகள்  என நிரூபித்தாலே அவர்கள் வழக்கில் இருந்து எளிதில் வெளியே வந்து விட முடியும். 
ஆளுநரும் அரசும் ஒத்த கருத்துடன் சுமுகமாக இயங்கினால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை. இதைத் தாண்டி ஆளுநரை அரசியல் நோக்கோடு, காழ்புணர்ச்சியோடு மாநில அரசு பார்க்கத் தேவையில்லை. 
கூட்டணியை பொறுத்தவரை தமிழ் மாநில காங்கிரஸ் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறது.  
தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக  போன்ற கட்சிகள் 
தனிப்பட்ட முறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை போல தமாகாவும் தனிப்பட்ட முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

தமாகாவை பொருத்தவரை தற்போது மக்கள் தொடர்பை அதிகப்படுத்தக் கூடிய சமயமாக தற்போதைய நிலையை கருதுகிறோம். அதன் அடிப்படையில் தமாகா தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இன்னும் மூன்று மாதங்கள் இடைவிடாமல் செய்வோம். தேர்தல் கூட்டணி குறித்து அந்தந்த கட்சிகளின் தலைவர்கள்  மக்களின் எண்ணங்களை கருத்தை பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் கூட்டணியை அமைப்பார்கள். 
"தை பிறந்தால்" அதாவது ஜனவரி மாதத்தில் நிச்சயம் எல்லா கட்சிகளுக்கும் வழி பிறக்கும் என்று நம்புகிறேன் 
அதுவரை நாங்கள் அதிமுகவின், பாஜகவின்  நலம் விரும்பியாக இருப்போம்.
பாமக, தேமுதிகவுடன் நட்பு கட்சியாக இருக்கிறோம். தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்.
 இந்தியா கூட்டணியை பொருத்தவரை சந்தர்ப்பவாத கூட்டணி மட்டுமல்ல. முரண்பாட்டின் மொத்த வடிவமாக இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து வரும் செய்திகளே இதற்கு சாட்சி. இவ்வாறு ஜி கே வாசன் கூறினார்.
பேட்டியின் போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி. சந்திரசேகர், ரமேஷ், முகமது ரஃபிக் உள்பட பலர் இருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: