புதன், 20 டிசம்பர், 2023

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: ஈரோட்டில் 2 நாட்களில் 5,202 மனுக்கள்

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓடாநிலை சமுதாய நலக்கூடத்தில், நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி புதன்கிழமை (இன்று) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், இம்முகாமில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:-  

பொதுமக்கள் அரசின் சேவைகளை முழுமையாக பெற்று பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 18ம் தேதி "மக்களுடன் முதல்வர்" திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மற்றும் ஈரோடு மாநகராட்சியினை ஒட்டி அமைந்துள்ள கிராம பஞ்சாயத்துகளில் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இம்முகாமானது வருகின்ற ஜனவரி 6ம் தேதி வரை சுமார் 87 இடங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 18ம் தேதி முதல் 20ம் தேதி (இன்று) வரை (அதாவது 3 நாட்கள்) சுமார் 21 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த 2 நாட்களில் மட்டும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 5,202 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, முகாமில் மனு வழங்கிய ஒரு நபருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் பெயர் மாற்றம் பெறுவதற்கான ஆணையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அறச்சலூர் பேரூராட்சி தலைவர் விஜயகுமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மணி, செயல் அலுவலர் அன்பு செல்வி, மொடக்குறிச்சி வட்டாட்சியர் அன்பு செழியன் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை உடனிருந்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: