சனி, 9 டிசம்பர், 2023

மழைநீர் பாதிப்பிற்கு 4 ஆயிரம் கோடி செலவு செய்ததை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்; ஏ.பி.முருகானந்தம்

ஈரோடு மாவட்டம் சோலார் அருகே உள்ள பச்சப்பாளியில் ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை தமிழக பாஜக பொதுச் செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கடந்த புதன்கிழமை  வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதில் காங்கிரஸ் எம்பியுடன் தொடர்புடைய வணிகக் குழுவின் இடங்களில் கட்டுக்கட்டாக 200 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றி வருகின்றனர். அவற்றை எண்ணுவதற்கு அழைக்கப்பட்ட இயந்திரங்கள் கூட பழுதடைந்து விட்டன.  ஒரு காங்கிரஸ் எம்பி 200 கோடி ரூபாய் பணத்துடன் பிடிப்பட்டால் மற்ற காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரிடமும் எவ்வளவு பணம் இருக்கும்.  இந்த ஊழல்களில் சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு மறைமுக தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இந்தியா கூட்டணியின் தலைவர்கள் அதாவது திமிர் பிடித்த கூட்டணி ஊழல் மற்றும் கொள்ளையில் ஈடுபடுவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் தங்கள் வேலையை செய்யும் போது ஊழல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விசாரணை நிறுவனங்களை குற்றம் சாட்ட தொடங்குகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் கருப்பு பணத்தால் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பி கொண்டு இருக்கிறார்கள்.

இந்த பணம் அனைத்தும் காந்தி குடும்பத்தின் கஜானாவுக்கு செல்கிறது. இந்த பணம் அனைத்தும் பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்.  இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கார்கே சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோர் மௌனம் காப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் தலைவரின் உறவினர் வீட்டில் இருந்து 42 கோடி ரொக்கம், உத்திரபிரதேச சட்டசபை தேர்தலின் போது நடந்த ஐடி சோதனையில் பியூஸ் ஜெயின் வீட்டில் 200 கோடி ரொக்கம், சத்யந்தர் ஜெயின் மறைவிடங்களில் இருந்து 133 தங்க நாணயங்கள் மற்றும் 2.82 கோடி ரொக்கம் ஆகியற்றவை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் அமலாக்கத்துறை சோதனையில் அதிகாரிகளின் வீடுகளில் இருந்து 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டது. கான்பூரில் வருமான வரி சோதனைகள் 500, 1000 மதிப்புள்ள 95 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. இப்படி அரசு அதிகாரிகளும் காங்கிரஸ் கட்சியினரும் ஊழல்வாதிகளாக திகழ்ந்து வருகின்றனர்.  தமிழகத்தில் சென்னையில் மழை நீர் பாதிப்பை சரிசெய்ய நான்காயிரம் கோடி ரூபாயில் ஊழல் நடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மழை நின்றும் வெள்ள பாதிப்புகளை சரி செய்ய திமுகவினர் யாரும் முன் வரவில்லை.  திமுக கட்சிக்காரர்களே கரைவேட்டி கட்டுவதற்கு பயப்படுகின்றனர். சென்னை முழுவதும் மக்கள் கொந்தளிப்பில் உள்ளதால் கரைவேட்டி கட்டாமல் திமுகவினர் சாதாரண வெள்ளை வேட்டி உடுத்தி தங்களது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். மழைநீர் பாதிப்பிற்கு நான்காயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் அவரது மகன் சாய் லட்சுமி காந்த் பாரதி இருவரும் பத்திரிக்கையாளர்களை தகாத வார்த்தையில் பேசியது கண்டிக்கத்தக்கது. மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐயாயிரம் மற்றும் இறந்தவருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  இந்தப் பணம் முழுவதும் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையாது.  

அதிலும் திமுக கட்சிக்காரர்கள் கமிஷன் பார்த்து விடுவார்கள்.  அமைச்சர் துரைமுருகன் மற்றும் மேயர் பிரியா ஆகிய இருவரும் மழைநீர் பாதிப்புகள் குறித்து முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்கள். முன்னுக்கு பின் முரணாக பேசுவதை நிறுத்திவிட்டு மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும்,  பாதுகாப்பும் வழங்க வேண்டும். அண்ணாமலை திமுகவை சேர்ந்த 11 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டியுள்ளார்.
இந்தியா கூட்டணியில் இருப்பவர்களின் இதன்மூலம் போலி முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது. 4000 கோடிக்கு மழைநீர் வடிகால் பணி செய்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்கள் வெகுண்டெழுந்து மக்கள் பிரதிநிதிகளை கேள்வி எழுப்புகின்றனர். 

முதல்முறையாக திமுகவினர் கரைவேட்டி இல்லாமல் மழைநீர் பாதிக்கப்பட்ட இடத்தில் செல்கின்றனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி தனது எக்ஸ் வலைதளத்தில் பத்திரிகையாளரை பற்றி பேசியதை கண்டிக்கிறோம். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். மழைநீரால் பாதிக்கப்பட்ட இடத்தில் முதல்நிலை கட்சியாக பாஜக நிற்கிறது.கொடுத்த பணத்தை திருடுகின்றனர். 99 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஒரு விழுக்காடு மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். வெள்ள நிவாரணம் பயனாளிகளுக்கு சேரும் போது எவ்வளவு கமிஷன் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள் என்றார். 

அரசை குறைகூறாமல் ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டும் என கமல்ஹாசன் கூறியிருப்பதற்கு கமல்ஹாசன் இருப்பது மக்கள் நீதி மய்யம் இல்லை என்றும் மக்கள் மீதி மய்யம்.அவரின் கட்சியில் அவர் மட்டும் தான் உள்ளார் என்றும் அவரின் கப்பல் ஓட்டையாகி கரை ஒதுங்கி பல நாட்கள் ஆகிவிட்டது என்றார்.  திமுகவினர், இந்த முறை மழை வராது என்று நினைத்தார்கள், ஆனால் மழை அவர்களுக்கு எமானகிவிட்டது. பாஜக வேறு பரிமாற்றத்தில் சென்று கொண்டிருக்கிறது. யாத்திரையில் பெண்கள் மாணவிகள் நடந்து வந்துகொண்டிருகின்றனர். 

அமலாக்கத்துறைக்கும் அரசிற்கும் சம்பந்தம் இல்லை, ஊழல் செய்தவர்கள் சிக்குவார்கள்.  மூன்று மாநில வெற்றி உற்சாகத்தை கொடுத்துள்ளது. தெலுங்கானாவில் வாக்கு சதவீதம் இரட்டிபாகியுள்ளது. பாஜகவின் அடுத்த டார்கெட் தமிழகம் தான் என்றார். நிகழ்ச்சியின் போது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, ஈரோடு தலைவர் வேதானந்தம் உள்ளிட்ட பணம் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: