ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ரங்கம்பாளையம், டாக்டர்.ஆர்.ஏ.என்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 160க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்கள் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இம்முகாமில் 3 திறன் பயிற்சி அளிப்பவர்களும், 28 மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர். முகாமில் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், 10 மாற்றுத்திறனாளிகள், 1 திருநங்கை உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
முகாமில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையத்தின், இலவச பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற 2 நபர்களுக்கு கேடயங்களை அமைச்சர் முத்துசாமி வழங்கி பாராட்டினார். மேலும், ஈரோடு மாநகராட்சி கருங்கல்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பவானிசாகர் தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களுக்கு ஐ.எஸ்.ஒ தரச்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி பேசியதாவது, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பான திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கோவையில் துவக்கி வைக்க உள்ளார். தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினையும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டுமெனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள் பழனிசாமி, சசிகுமார், கோவை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஜோதிமணி, உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ராதிகா, தாளாளர் டாக்டர்.ஆர்ஏஎன்எம் கல்லூரியின் தாளாளர் பாலுச்சாமி, முதல்வர் பழனியப்பன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் நிறுவன முதன்மை தணிக்கை குழு ஆய்வு அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: