திங்கள், 11 டிசம்பர், 2023

ஈரோட்டில் நடைபெற்ற கந்தூரி காடு விழாவில் இஸ்லாமியர்கள் கூட்டுப் பிரார்த்தனை

ஈரோடு நகரில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னர் பரவிய காலரா தொற்றால் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். அந்த காலகட்டத்தில் பெரிய பள்ளிவாசலில் இமாமாக இருந்த பிலால் என்பவர், எல்லோரும் ஒருநாள் ஊரை விட்டு காலி செய்து எல்லையில் கூடாரம் அமைத்து தங்குங்கள். அங்கேயே சமைத்து சாப்பிட்டு, அனைத்தையும் ஏழை மக்களுக்கு தானம் அளித்துவிட்டு இறைவனை தொழுது கூட்டு பிரார்த்தனை நடத்துங்கள் எனக் கூறியுள்ளார்.

இதன்படி, அனைவரும் ஒரு நாள் வீடுகளை காலி செய்து விட்டு ஈரோடு நகரில் இருந்து 12 கிலோ மீட்டர் தள்ளியுள்ள லக்காபுரம் காவிரி ஆற்றங்கரை அருகே, காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் தங்கி, கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். இதனால் நோய் கட்டுக்குள் வந்ததாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை கந்தூரி காடு விழா என இஸ்லாமியர்கள் அழைக்கின்றனர். இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒரு திங்கள்கிழமையன்று அனைவரும், இப்பகுதியில் ஒன்று கூடி, கூடாரம் அமைத்து கந்தூரி விழா நடத்தி வருகின்றனர்.

அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற கந்தூரி விழாவில் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, கொடுமுடி, கரூர், பள்ளப்பட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு , கொக்கராயன் பேட்டை பகுதிகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள், லக்காபுரம் அருகே குடில்களை அமைத்தனர். ஈரோடு பிராமண பெரிய அக்ரஹாரம் பள்ளிவாசலின் இமாம் அகமது அமானி தலைமையில், இயற்கைப் பேரிடரில் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.

இந்நிகழ்வில், பிராமண பெரிய அக்ரஹரத்தைச் சேர்ந்த எஸ் ஜியாவுதீன், லக்காபுரம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் இமாம் முஹம்மது இஸ்மாயில் தாவூதி, லக்காபுரம் சுன்னத் ஜமாத் நிர்வாகிகளான அபுதாஹிர், உசேன் அலி, இஸ்மாயில் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களான ம.முகமது அர்சத், கே.என் பாஷா மற்றும் திரளான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சுற்று வட்டார பொதுமக்கள் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட குடில்களை அமைத்து அசைவ உணவு வகைகளை சமைத்து நண்பர்கள், உற்றார், உறவினர்களுக்கு வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பழம், ரொட்டி உள்ளிட்ட உணவுப்பொருட்களை அனைவருக்கும் விநியோகித்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: