ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பி.மேட்டுப்பாளையம் அருகே உள்ள பூமாண்டகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பூரணி (வயது 29). இவர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த போது கவுந்தப்பாடி அடுத்த சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காதலித்து உள்ளார். வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்த நிலையில் பூரணியின் வீட்டாரை பார்க்க விடாமல் மதன்குமார் வீட்டார் தொடர்ந்து தடுத்து வந்ததாகவும் சொத்து, பணம் உள்ளிட்டவைகளை தந்தால் மட்டுமே உங்களது மகளை பார்க்க முடியும் என பூரணி வீட்டாரிடம் கூறி விட்டனர். இந்நிலையில் பூரணி கர்ப்பமானார். அப்போதும் அவரைப் பார்க்கவிடாமல் மதன்குமார் வீட்டார் தடுத்து விட்டனர். பூர்ணிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி உடல் நிலை குறைவால் பூரணி இறந்து விட்டதாக பெண் வீட்டாருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பூரணி பெற்றோர் மகளை பார்க்க சென்றபோதும் மதன்குமார் குடும்பத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தி பார்க்க விடாமல் செய்துவிட்டனர். இதனையடுத்து பூரணி வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் கோபி கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் பூரணியின் உடல் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரதே பரிசோதனையில் பூரணி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
அதன் பிறகு கடந்த மாதம் 15, 16ம் தேதிகளில் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான மதன்குமார் குடும்பத்தினர் அதன் பிறகு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர். ஆனால் இந்த புகார் குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இன்று ஈரோடு எஸ்பி அலுவலகத்திற்கு பூரணி பெற்றோர் மற்றும் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து திடீரென முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், கிட்டத்தட்ட மதன்குமார் குடும்பத்தினர் தலைமறைவாகி இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. போலீசார் அவர்களை பிடிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எனது மகள் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமறைவாக உள்ளவர்களை தனிப்படை அமைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனை தொடர்ந்து உரிய விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதியளித்தன் பேரில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
0 coment rios: