வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சென்னைக்கு அருகே 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள நிலையில் இந்த புயலின் காரணமாக இன்று இரவு வரை பலத்த சூறாவளி காற்றோடு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று தொடங்கிய மழையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது மின்சார ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதால் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது மேலும் பல இடங்களில் 4அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் சாலைப்போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
புயலின் காரணமாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து கீழே விழுந்து உள்ளது. மின் கம்பங்களும் பேனர்களும் காற்றினால் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனிடைய புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தென்மண்டல தலைவர் பால சந்திரன் கூறுகையில், மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கே வட கிழக்கு 110 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு வருகிறது. இது தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலு பெறக்கூடும்.
பின்னர் வட தமிழகம் தெற்கு ஆந்திராவை நோக்கி நாளை முற்பகல் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்க கூடும். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதியில் இன்று இரவு வரை காற்றோடு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
0 coment rios: