ஈரோடு வேளாளர் கல்வி நிறுவனங்களின் முன்னாள் செயலாளர் மற்றும் தாளாளர் துரைசாமியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை (இன்று) நடந்தது. விழாவில், வேளாளர் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள துரைசாமி சிலையை, முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடந்த விழாவில், நூற்றாண்டு மலரை வெளியிட்டு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது, பெண்களின் வளர்ச்சியே, நாட்டின் வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வையோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு, வேளாளர் கல்வி நிறுவனத்தை துரைசாமி தொடங்கி வைத்தார். 1970-ம் ஆண்டு 280 மாணவியருடன், 16 ஆசிரியர்களுடன் தொடங்கிய வேளாளர் கல்வி நிறுவனத்தில் இன்று 25 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. காமராஜர் வழியில் தேசிய இயக்கத்திற்கு வலு சேர்த்த துரைசாமியின், கல்விப் பணிக்கு, உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த விழா நடக்கிறது. மக்கள் விரும்பும் நல்ல மாற்றம் அமைய இது போன்ற விழாக்கள் அடிப்படியாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த பள்ளி, கல்லூரி மாணவியருக்கு பரிசுகளை வழங்கி, முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, யாராலும் பறிக்க முடியாத செல்வம் கல்விச் செல்வம். சாதி, சமய வேறுபாடுகளைப் போக்க பெண் கல்வி உதவும். அத்தகைய கல்விச் செல்வத்தை லட்சக்கணக்கான மாணவ, மாணவியருக்கு வேளாளர் கல்வி நிறுவனம் வழங்கியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த பெண்கள், உயர்கல்வி பயில கோவை, சேலம், திருச்சி போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டி இருந்த நிலையில், அவர்கள் இங்கேயே உயர்கல்வி படிக்க வேளாளர் கல்வி நிறுவனம் காரணமாக அமைந்தது.பெண்கள் நலனுக்காகவும், உரிமைகளைக் காக்கவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார்.
திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம், மானிய விலையில் இருசக்கர வாகனம் என பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை 52 சதவீதமாக உயர்ந்து, தமிழகம் முதலிடம் பெற்றது. பல்வேறு துறைகளுக்கு மத்திய அரசின் விருதுகள் கிடைத்தது. இளைஞர்கள், மாணவர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. தமிழகம் போதை மாநிலமாக மாறி வருகிறது. மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது. அதற்கு அடிமையானால் வாழ்க்கையே முடிந்து விடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.உழைப்பு உயர்வைத் தரும். ஒழுக்கம் தன்னம்பிகையைத் தரும். உங்கள் பெற்றோரின் கனவை நனவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, விஜயபாஸ்கர், அன்பழகன், ராமலிங்கம், கருப்பணன், ராமசாமி, வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயக்குமார், செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர், கவுரவத் தலைவர் சுவாமிநாதன், பொருளாளர் அருண், தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் யுவராஜா, கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள் முத்துசாமி, பாலசுப்பிரமணி, வேளாளர் பொறியியல் கல்லூரி மேலாளர் பெரியசாமி, தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர்,அக்னி ஸ்டில்ஸ் நிர்வாக இயக்குனர் சின்னசாமி,இந்தியன் பப்ளிக் பள்ளி தாளாளர் சிவகுமார்,எஸ் கே எம் நிறுவனங்களின் தலைவர் மயிலானந்தம்,சத்திய மசாலா நிறுவனங்களின் தலைவர் துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமி,சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்.சுதாகர், ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் தாளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 coment rios: