ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை (இன்று) நடந்தது. கூட்டத்துக்கு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:- சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பசுவப்பட்டி, எக்கட்டாம்பாளையம், எல்லைகிராமம், கொடுமணல், குப்பிச்சிபாளையம், முகாசிபிடாரியூர், முருங்கத்தொழுவு, ஒட்டப்பாறை, புதுப்பாளையம் மற்றும் புஞ்சைப்பாலத்தொழுவு ஆகிய 10 கிராம ஊராட்சிகள் மற்றும் சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் விநியோகம், வடிகால் வசதி, தடையில்லா மும்முனை மின்சார வசதி, சமுதாயக் கூடம், மாணவ,மாணவியர்களுக்கு அரசு கலைக்கல்லூரி, மயான வசதி, இலவச வீட்டுமனை பட்டா, தெருவிளக்கு வசதி, நியாய விலைக் கடை, சாலை வசதி, பொதுக் கோரிக்கைகள், சிப்காட் தொழிற்பேட்டை கழிவுகள் அகற்றுதல் தொடர்பான பணிகள் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் தொடர்பான அறிவிப்புகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, இக்கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகள் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சரிசெய்ய கூடிய கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூடுதல் நிதியை பெற்று வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தடையில்லா மின்சாரம் வழங்குதல், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துத்துறைகளின் சார்பில் தெரிவிக்கப்பட்ட மக்கள் நல திட்டங்கள் குறித்த கருத்துகளை உடனடியாக செயல்படுத்தும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும். மேலும் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள் எவ்வித தங்கு தடையுமின்றி மக்களை சென்றடையும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே, அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மணிஷ், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழுத்தலைவர் பத்மநாபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ் (பொது), செல்வராஜ் (வளர்ச்சி), சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வம், சென்னிமலை பேரூராட்சித் தலைவர் ஸ்ரீதேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: