ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் கடந்த 2023ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குற்ற தடுப்பு, போக்குவரத்து சீரமைப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, போதை பொருள், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு, பொதுமக்கள் குறை தீர்க்கும் நடவடிக்கைகள், காவல் துறை-பொதுமக்கள் நல்லுறவு பேணுதல், பல்வேறு துறைகளுடன் இணைந்து பணியாற்றியதில், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதி நிலை நாட்டப்பட்டது.
மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல் நிலையங்களில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. குற்ற குணத்தார் மற்றும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கைகள், காவல் நிலையம், உட்கோட்ட துணை கண்காணிப்பாளர்கள் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட காவல் ஆலுவலகத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
கொலை குற்ற நடவடிக்கை:- 2023ம் ஆண்டு பதிவான 34 கொலை வழக்குகளில் 10 வழக்குகள் குடும்ப தகராறு காரணமாக நிகழ்ந்துள்ளன. பதிவான 34 வழக்குகளில் 31 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 63 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பதிவான 2 ஆதாய கொலை வழக்குகளில் ஒரு வழக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
2023 ஆண்டில் தாக்கலான 62 கொடுங்குற்ற வழக்குகளில் 54 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 138 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 9 வாகனங்கள் மற்றும் 345 சவரன் நகைகள் உட்பட ரூ.5.03 கோடி மதிப்புள்ள 86 சதவீத களவு சொத்துகள் மீட்கப்பட்டது. மேலும், இதர 386 குற்ற வழக்குகளில் 282 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 58 வாகனங்கள், 134 சவரன் நகைகள் உட்பட ரூ.99.53 லட்சம் மதிப்பிலான 54 சதவீத களவு சொத்துகள் மீட்கப்பட்டு அவை அனைத்தும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
போதை பொருள் நடவடிக்கை:- சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 6419 நபர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 244 லாட்டரி வழக்குகளில் 311 நபர்களும், 196 கஞ்சா வழக்குகளில் 282 நபர்களும் கைது செய்யப்பட்டனர். ரூ.25.71 லட்சம் மதிப்புள்ள 187 கிலோ கஞ்சா, ரூ.1.51 லட்சம் மதிப்புள்ள 3992 போதை மாத்திரைகள் மற்றும் ரூ.3.69 லட்சம் மதிப்புள்ள 240 கிலோ கஞ்சா சாக்லெட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தீவிர தொடர் நடவடிக்கையாக 50 கஞ்சா வழக்கு குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தீவிர கஞ்சா தடுப்பு நடவடிக்கையின் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கையாண்டதற்காக 503 வழக்குகள் பதியப்பட்டு, அதில் 525 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 11,611 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கில் சம்மந்தப்பட்ட 10 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சூதாட்ட வழக்குகளின் மீது நடவடிக்கை:- பல்வேறு காவல் நிலையங்களில் 164 சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 830 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.66 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சட்டவிரோதமாக மது விற்பனை மீது நடவடிக்கை:- அரசு மதுபானங்கள், வெளிமாநில மதுபானங்கள், கள்ளசாராயம் பதுக்கல், கடத்தல், விற்பனை செய்தவர்கள் மீது 4219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4433 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 43,731 மதுபாட்டில்கள், 93 லிட்டர் சாராயம் மற்றும் 422 லிட்டர் சாராய ஊறல், 143 லிட்டர் கள், 14488 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் 3535 லிட்டர் மதுபானம் உரிய முறையில் அழிக்கப்பட்டுள்ளது. மேற்படி மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 140 இருசக்கர மற்றும் 11 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டு அவற்றுள் 48 வாகனங்கள் சட்டவிதிகளுக்கு உட்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டு ரூ.8.92 லட்சம் அரசுக்கு செலுத்தப்பட்டது.
கனிம வள குற்றங்கள் மீது நடவடிக்கை:- கனிம வளம் மற்றும் மணல் திருட்டு தொடர்பாக 23 வழக்குகள் பதியப்பட்டு 33 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 38 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை:- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் கிராமங்களில் காவல்துறையினர் மூலம் 1394 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் விளைவாக காவல்துறைக்கு புகார் கொடுக்க முன்வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் 51 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. 106 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாண்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் சம்மந்தப்பட்ட 3 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சாலை வீதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை:- ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டன. குறிப்பாக சாலை விதி மீறல்கள் தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 1,83,989 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.6.53 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 9435 ஒட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அதில் 9040 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களின் மீது 9541 அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் சாலை விபத்துகள் வெகுவாக குறைக்கபட்டுள்ளது. விபத்து மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக இவ்வாண்டு மட்டும் நிறுவப்பட்ட 1562 கண்காணிப்பு கேமராக்கள் உட்பட மாவட்டம் முழுவதும், மொத்தம் 13,184 கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளது.
குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை:- 2023-ம் ஆண்டில் 30 குண்டர் தடுப்புசட்டம் மற்றும் 3 கள்ள சாராய குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் மொத்தம் 33 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 456 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது சிறப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட கோட்டாச்சியர் மூலம் நன்னடத்தைக்கான பிணைபத்திரம் பெறப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 47 குற்றவாளிகளை கண்காணிக்கும் பொருட்டு சரித்திர பதிவேடுகள் தொடங்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சைபர் வழக்குகள் மீது நடவடிக்கை:- இணையதள மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட 2484 மனுக்களில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இணையவழி மூலமாக மோசடி செய்து ஏமாற்றப்பட்ட ரூ.65.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாண்டு காணாமல் போன ரூ.76.72 லட்சம் மதிப்புள்ள 422 அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மாவட்டத்தில் அறிக்கையான பல்வேறு வழக்குகளில் உரிய நேரத்தில் அலைபேசி பயன்பாடு குறித்த தகவல்களை பெற்று, புலன் விசாரணை அதிகாரிகளுக்கு அனுப்பி வழக்குகளை கண்டுபிடிக்கவும், எதிரிகளை கைது செய்யவும் உறுதுணையாக இருந்துள்ளனர்.
பொதுமக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை:- 2023 -ம் ஆண்டில் 3725 பொதுமக்கள் குறை தீர்ப்பு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. அரசின் உத்திரவுக்கிணங்க பிரதி வாரம் புதன் கிழமை தோரும் சிறப்பு குறைதீர்பு முகாம்கள் நடத்தப்பட்டு உரிய அலுவலர்கள் மூலம் நிரந்தர தீர்வு கணப்பட்டு வருவது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:- 2023ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்கள் தலைவர்களின் நினைவு மற்றும் பிறந்த நாள் விழாக்கள் தொடர்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தாண்டுகள், பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா, பாரியூர் அம்மன் குண்டம் திருவிழா, அந்தியூர் குருநாதசாமி திருவிழா மற்றும் கால்நடை சந்தை, ஈரோடு பெரியமாரியம்மன் தேர் மற்றும் குண்டம் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, ஆடிபெருக்கு, பொங்கல் விழாக்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், முக்கியபிரமுகர்களின் வருகைகள் போன்றவை அவற்றுள் குறிப்பிடதக்கவை ஆகும்.
சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் மீது நடவடிக்கை:- இவ்வாண்டில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளான, கீழ்பவானி பாசன திட்ட கால்வாயில் காங்கிரீட் தளம் அமைத்தல், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி நடத்தப்பட்ட போராட்டங்கள், சென்னிமலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என்ற சர்ச்சையை தொடர்ந்து, இந்து, கிருஸ்தவ அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்களிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும், சிறுவலூர் காவல் நிலைய சரகத்தில் கோழி திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியது மற்றும் பின் விளைவுகள் தொடர்பாகவும், உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள், வழக்குகள் பதிவு செய்தல், குற்றவாளிகளை கைது செய்தல், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பேச்சுவார்த்தி நடத்தி தீர்வு காணல் போன்ற உறுதியான நடவடிக்கைகள் காரணமாக நிகழவிருந்த சாதி மோதல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தடுக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில், காவல் துறையினர் தொடர்ந்து குற்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதோடு, சட்ட ஒழுங்கை நன்முறையில் பராமரிக்கவும், மக்கள் அமைதி மற்றும் இணக்கமாக வாழ உறுதிபூண்டு சீரிய முறையில் பணியாற்ற உதவும் வகையில், பொதுமக்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இத்தகவல் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 coment rios: