ஈரோடு மாவட்டம் காசிபாளையம் பேருந்து பணிமனை கிளையில் ஈரோட்டைச் சேர்ந்த செந்தில்குமார் ஓட்டுநராகவும், வடிவேல் நடத்துநராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், ஈரோட்டில் இருந்து சேலம், சேலத்தில் இருந்து கோவை, கோவையில் இருந்து சேலம் கோவையிலிருந்து ஈரோடு ஆகிய வழி தடங்களில் பேருந்தை இயக்கி வருகின்றனர்.
இந் நிலையில், நேற்று இரவு பணியை முடித்துவிட்டு, வீடு திரும்புவதற்காக இருந்த நிலையில், கிளை மேலாளர் மீண்டும் நீங்கள் ஈரோட்டில் இருந்து சென்னிமலைக்கு பேருந்து இயக்க வேண்டும் என வலுக்கட்டாயமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஓட்டுநர் செந்தில்குமார் மற்றும் நடத்துனர் வடிவேல் ஆகிய இருவருக்கும் தங்களது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, எங்களால் முடியாது என்று கூறியுள்ளனர்.
இதற்கு உடனடியாக கிளை மேலாளர் நடத்துநர் மற்றும் ஓட்டுநரை அவதூறாக திட்டி பேசி, நீங்கள் தற்பொழுது பேருந்து ஓட்டவில்லை என்றால் நாளை முதல் நீங்கள் உள்ளூர் (டவுன்) பேருந்து ஓட்ட வேண்டும் என வலுக்கட்டாயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து கிளை மேலாளரைக் கண்டித்து ஓட்டுநர் செந்தில்குமார் மற்றும் நடத்துநர் வடிவேல் ஆகிய இருவரும், காசிபாளையம் பணிமனையில் தாங்கள் இயக்கும் பேருந்தை நிறுத்தி விட்டு, பணிமனை வளாகத்திற்குள் நள்ளிரவில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட இருவரிடம் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து இருவரும் போராட்டத்தைக் கைவிட்டனர்.
0 coment rios: