ஈரோடு மாவட்டம் அந்தியூர் பெரிய ஏரியில் சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், ரூ.50 லட்சம் படகு இல்லம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (இன்று) நடைபெற்றது. இவ்விழாவிற்கு, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டி, பணியை துவக்கி வைத்தார்.
விழாவில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, அந்தியூர் பெரிய ஏரியில், சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், ரூ.50 லட்சம் படகு இல்லம் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லத்தில் நடைபாதை, புல்தரை, பளிங்கை கல் இருக்கைகள், தடுப்பு சுவர் அமைத்தல், சிற்றுண்டியகம், பயணச்சீட்டு வழங்கும் இடம், மதிக்கும் படகு நிறுத்தம் மற்றும் படகு நிறுத்தம் செல்ல வழித்தட படிக்கட்டுகள் ஆகியவை அமைய உள்ளது. மேலும், இப்பணிகளை விரைவாக முடித்து, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவில், மாவட்ட ஊராட்சித் தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், அந்தியூர் பேரூர் திமுக செயலாளர் காளிதாஸ், பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிச்சாமி, செயல் அலுவலர் நாகேஷ், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: