ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே அவ்வப்போது வனத்தை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாடி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியை ஒட்டியுள்ள விளாமுண்டி கிராமத்தைச் சேர்ந்த நஞ்சன், துளசியம்மாள் என்ற வயது முதிர்ந்த தம்பதிகள் இருவர் வால்மொட்டை என்ற இடத்தில் சுண்டைக்காய் பறித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது வனத்தின் புதர் மறைவில் இருந்த காட்டு யானை திடீரென ஓடிவந்து வயது முதிர்ந்த தம்பதிகள் இருவரையும் தாக்கியது. இதில் முதியவர் நஞ்சன் மற்றும் துளசியம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த நிலையில், நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாளவாடி மலைப்பகுதியில் மத்திய கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சர் முருகன் மலைவாழ் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு, பவானிசாகர் அருகே உள்ள புங்கார் காலனி கிராமத்திற்கு சென்று யானை தாக்கி இறந்த நஞ்சன், துளசியம்மாள் ஆகியோரது மகன் பழனிச்சாமியை நேரில் சந்தித்து யானை தாக்கி உயிரிழந்தது குறித்து கேட்டறிந்ததோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய இணை அமைச்சர் முருகன் பண்ணாரி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்வின் போது, பாஜக ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
0 coment rios: