ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்யும் வகையில் குருப்பநாயக்கன்பாளையம், ஆண்டிகுளம் மற்றும் மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சிகளை இணைப்பதற்காக பவானி நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு, குருப்பநாயக்கன்பாளையம் மற்றும் ஆண்டிகுளம் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், நகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இதனிடையே, கடந்த 26ம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும், பவானி நகராட்சியுடன் இணைய எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். இந்த நிலையில், குருப்பநாயக்கன்பாளையம், ஆண்டிக்குளம் ஆகிய இரு ஊராட்சிகளைச் சேர்ந்த இரண்டாயிரத்தும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து அந்தியூர் பிரிவில் இருந்து பவானி நகராட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்றதோடு, அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன், காரணமாக பாதுகாப்பு கருதி அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டது.
தொடர்ந்து, நகராட்சி மேலாளர் உதயகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், இக்கோரிக்கையினை வலியுறுத்தி அமைச்சர் மற்றும் அதிகாரிகளைச் சந்திப்பது மற்றும் தொடர் போராட்டம் நடத்துவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால், பவானியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
0 coment rios: