திங்கள், 1 ஜனவரி, 2024

ஈரோடு செய்திகள் | Latest Erode News: பெருந்துறையில் பிப்.4ல் நடைபெறும் கொமதேக மாநில மாநாட்டிற்கு கால்கோள் விழா

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில மாநாடு அடுத்த மாதம் 4ம் தேதி நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கு பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன் முன்னிலையில் நடந்தது.

பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கொங்கு மண்டலத்தின் தேவைகள், விவசாயிகளின் கோரிக்கைகள், பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத பிரச்சனைகள் ஆகியவைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி, கொங்கு மண்டலத்தில் இருந்து 12 ஆயிரம் பேர் உலக சாதனை நிகழ்த்துவதற்காக வள்ளி கும்மி ஆட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் அப்படி வழங்குவது மூலம் தென்னை விவசாயம் காக்கப்படும்.

இந்த மாநாட்டின் ஒற்றை கொள்கை என்னவென்றால் கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியை உறுதி செய்வது தான் இந்த மாநாட்டின் நோக்கமாகும். வள்ளி கும்மியாட்டம் மூலம் கொங்கு மண்டலத்தின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காப்பாற்ற முடியும். பெண்கள் மத்தியில் உள்ள தயக்கத்தை போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாக அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.‌ கள்ளுக்கு அனுமதி வேண்டும் என்பது மாநாட்டில் வலுவாக இருக்கும். தமிழக அரசும் - ஆளுநரும் இணக்கமாக இருந்தால் ஆட்சி வலுவாக இருக்கும்.

கொஞ்சம் காலமாக பிசிஆர் வழக்குகள் கொஞ்சம் அடங்கி இருந்தது. மீண்டும் அதிகமாகி உள்ளது உண்மைதான். பிசிஆர் சட்டத்தின் மூலம் போடப்படும் பொய் வழக்குகளை விடுவது கிடையாது. எல்லா விஷயங்களையும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறேன். தவறு யார் செய்தாலும் அதை விடக்கூடாது. கொங்கு மண்டலத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட ஏராளமானவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் தவறாக வழக்கு பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.

இது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறேன். துணைவேந்தர் மீதான பிசிஆர் வழக்கில் நீதிமன்றம் மூலம் சரியான தீர்ப்பு வரும். மேலும், நிரபராதிகளை மிரட்டி குற்றவாளிகளாக மாற்றுவதற்கு முயற்சிக்கக் கூடாது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. தொடங்கிய பின்னர் ஊடங்களுக்கு முறையாக அறிவிப்பு வரும். தமிழக அரசு ஆளுநருடனான இணக்கமான சூழல் வரவேற்கத்தக்கது. தொடர்ந்து இணக்கமான சூழல் நிகழ்ந்தால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு ஏற்படாமல் இருக்கும், என்றார்.


இவ்விழாவில், நாமக்கல் மக்களவை உறுப்பினர் சின்ராஜ், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொன்னுவேல், துணைப் பொதுச் செயலாளர் சக்தி கோச் நடராஜ், மாநில பொருளாளர் பாலு, மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் துரைராஜா, மாவட்டச் செயலாளர்கள் சிவராஜ், (ஈரோடு மேற்கு), சாமிநாதன் (ஈரோடு தெற்கு), ஈஸ்வரமூர்த்தி, கோவிந்தராஜன், பிரபாகர், முத்துசாமி, மாவட்ட கவுன்சிலர் சிவகாமி தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: