திங்கள், 1 ஜனவரி, 2024

ஈரோடு செய்திகள்| Latest Erode News & Live Updates: பொதுமக்களிடையே ஆன்மீகம் அதிகரித்தால் நாடு நன்றாக இருக்கும்; முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல்

இந்து முன்னணி சார்பில் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிருந்து பழனி மலை கோவில் வரை வேல் யாத்திரை கொண்டு செல்லும் வகையில் வேல் வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதினங்கள், திரைப்பட நடிகர் ரஞ்சித் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், கொடி மரம் முன்பு முருகனின் வேலுக்குச் சிறப்பு பூஜைகள் செய்து திருவாசகம் பாடி வழிபாடு செய்தனர். இதையடுத்து சென்னிமலை கோவிலிருந்து வேல் யாத்திரை மூலம் பழனிமலை கோவிலுக்கு யாத்திரை சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியதாவது:- ஆன்மீகம் அதிகமானால் குற்றம் களையும். வீடுகளில் அமைதி ஏற்படும். தமிழகத்தில் உள்ள சைவ வைணவ கோவில்களின் பழங்கால சொத்துகள் மூலம் ரூ.28 கோடி வருமானம் வருகிறது. இதில் ஒரு கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை திருப்பி கோவிலுக்கு வழங்க வேண்டும். 12 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை. 22 ஆயிரத்து 600 ஏக்கர் காலி இடத்தில் கடந்த 8 மாதத்தில் மட்டும் வாடகை பாக்கி ரூ.151 கோடி உள்ளது. பழமையான தொன்மையான 5 ஆயிரம் கோவில்களை புதுப்பிப்பதாக திருப்பணி செய்ததாக கூறுகின்றனர். இதில் கமிஷன் அடிக்கிறார்கள்.

திருப்பணி என்ற பெயரில் பழமையான கல்வெட்டுகள் அழிந்து விட்டது. பழனியில் 16-ம் நூற்றாண்டிற்கு முன்பான கல்வெட்டுகளை அழிந்து விட்டது. திருப்பணி என்ற பெயரில் தொன்மையை அழித்துக்கொண்டு வருகின்றனர். திருப்பணியை இந்து சமய அறநிலையத்துறை செய்ய தகுதி இல்லை. கோவில் புதுப்பிக்கும் பணியை மாநில ஆர்க்காலஜி துறை தான் செய்யவேண்டும். கோவில்களில் அனைத்தையும் செய்பவர்கள் அர்ச்சகர்கள். இவர்களை காப்பாற்றவில்லை என்றால் கோவில்கள் காலியாகிவிடும். இன்னும் 15 வருடத்தில் 26 ஆயிரம் கோலில்களில் அர்ச்சகர்கள் இருக்க மாட்டார்கள். அர்ச்சகர்களை காப்பாற்ற சம்பளம் கொடுக்க வேண்டும். வசதி இல்லாத 1500 ஆண்டுகளுக்கு முன்பான 10 ஆயிரத்து 652 தொன்மையான கோவில்கள் அனைத்தும் கேட்பாரற்று இருக்கிறது.

பொதுமக்களிடையே ஆன்மீகம் அதிகரித்தால் நாடு நன்றாக இருக்கும். இல்லையென்றால் சீரழியும். சைவ வைணவர்களின் ஒன்றுமை உடைந்து நொறுக்கி உள்ளது. 2012-ம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில் இருந்து 2 ஆயிர்து 622 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் 2012-ம் ஆண்டு முன்பு ஏன் இந்தளவு சிலைகள் மீட்க முடியவில்லை. அமெரிக்க போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசுடன் பேசி மீதமுள்ள சிலைகளை மீட்க வேண்டும்.உச்சக்கட்ட நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்த வேண்டிய துறையாக உள்ளது. ஆர்வம் குறைவான அதிகாரிகளை உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்டதால் 2020 ல் இருந்து பல முக்கிய வேலைகளை செய்யவில்லை.கடந்த மாதம் கோவில்களில் இருந்து ரூ.28.49 கோடி எடுத்துள்ளனர். விளம்பரத்திற்கு நான் அடிமை கிடையாது. வெளிநாட்டில் இருந்து சாமி சிலைகள் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, திரைப்பட நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வாக்காளரும் அரசியல்வாதி தான். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும். நாட்டை காப்பாற்ற ஒரு விஜய் அல்ல ஓராயிரம் விஜய் வந்தாலும் சந்தோசம் தான். நடிகர் விஜயகாந்த் காலமானத்திற்கு நடிகர் வடிவேலு ஒரு இரங்கல் அறிக்கை விட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு இளைஞரும் அரசியலுக்கு வர வேண்டும். நல்லவர்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் திருடர்கள் சேர் போட்டு அமர்ந்து விடுவார்கள் என்றார்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: