ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தினை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்றுஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அவர் தெரிவித்ததாவது, ஈரோடு சோலார் பகுதியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் வாயிலாக கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
மேலும், இந்த பேருந்து நிலையத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனக்களுக்கான பார்க்கிங் வசதிகள், ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து டவுன் பஸ் வசதி அமைத்தல் மற்றும் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக வளாகங்கள் அமைத்தல் என பல்வேறு அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விரைவில் பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு பேருந்து நிலையம், ஈரோடு மாநகராட்சி, கனிராவுத்தர் குளம் பகுதியில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் அமைக்க பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 2 பேருந்து நிலையங்களும் செயல்பாட்டிற்கு வரும் வேலையில் ஈரோடு மாநகர பகுதிகள் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைவதுடன், மாநகராட்சி பகுதிகள் விரிவடைவதுடன் முழுமையான வளர்ச்சியையும் அடையும் எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர பொறியாளர் விஜயகுமார், வட்டாட்சியர்கள் ஜெயக்குமார் (ஈரோடு), இளஞ்செழியன் (மொடக்குறிச்சி), உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: