திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பு என்கின்ற சிவ சுப்பிரமணியம் (வயது 26). பிரபல ரவுடியான இவர் மீது திருநெல்வேலியில் கொலை, கொள்ளை, கஞ்சா, போலீசாரை தாக்கியது என 15 க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே குள்ளம்பாளையம் கிராமத்தில் தங்கியிருப்பதாக, திருநெல்வேலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி காவல் உதவி ஆய்வாளர் ஆன்டோ பிரதீப் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு சிவசுப்பு தங்கி இருந்த பண்ணை வீட்டை முற்றுகையிட்டனர். அப்பொழுது தனது கூட்டாளிகளுடன் தங்கியிருந்த சிவசுப்பு போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றார். உடனே தற்காப்பிற்காக உதவி ஆய்வாளர் ஆன்டோ பிரதிப் வீட்டு சுவற்றில் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கி குண்டு அங்கிருந்த சுவற்றை துளைத்தது.
இதனையடுத்து, சிவசுப்பு மற்றும் அவனது கூட்டாளிகள் உட்பட ஐந்து நபர்களும் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனிடைய பண்ணை வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த லட்சுமணன் என்ற கஞ்சா வியாபாரி அங்கிருந்து மீட்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட லட்சுமணன் என்ற கஞ்சா வியாபாரி மொத்த விற்பனையில் ஈடுபட்டதாகவும் அவர் போலீசாரிடம் தங்களை காட்டிக் கொடுத்ததாகவும், சிவசுப்பு குழுவினர் லட்சுமணனை இந்தப் பண்ணை வீட்டில் அடைத்து வைத்து அடித்து உதைத்தாகவும், கண்களில் மிளகாய் பொடியை தூவி, தங்களைக் கட்டியும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் லட்சுமணனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பெருந்துறை போலீசார் சிவசுப்பு மற்றும் அவனது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பெருந்துறை அருகே போலீசிடம் இருந்து தப்பிய ரவுடிகள் திருநெல்வேலி அருகே பிடிபட்டனர். கைது செய்யப்பட்ட சிவசுப்பு, முத்து மணிகண்டன் ஆகியோருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 coment rios: