ஈரோட்டில் பெண்கள் மட்டுமே கொண்டாடும் காணும் பொங்கல். சினிமா பாடல்களை இசைக்க விட்டு குத்தாட்டம் போட்டு கலக்கினர் கோலாட்டம், குத்தாட்டம் என ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உற்சாகம்.
பொங்கல் பண்டிகையின் 3வது நாளான இன்று (புதன்கிழமை) காணும் பொங்கல் விழா ஈரோடு மாவட்டம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சூரிய பொங்கல், மாட்டுப்பொங்கல் என்று பொங்கல் வைத்து கொண்டாடிய மக்கள் நண்பர்கள், உற்றார் உறவினர்களை சந்திக்கும் வகையில் இன்று, ஈரோடு மாவட்டத்தின் நீர்நிலைப் பகுதிகளான கொடிவேரி அணை, பவானிசாகர் அணை, காளிங்கராயன் அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் குவிந்து வரும் மக்கள் காணும்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோட்டில் காணும் பொங்கலையொட்டி, வ.உ.சி.பூங்காவில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் ஆண்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
பூங்காவின் நுழைவு வாயில் பகுதியிலேயே ஆண்கள், 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் உள்ளே செல்ல போலீசார் தடை விதித்தனர். எனவே பூங்காவில் பெண்கள் மற்றும் சிறுவர் -சிறுமிகள் மட்டுமே இருந்தனர். பிற்பகல் முதல் பூங்காவில் ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்தனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பூங்காவில் குவிந்தனர். ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் தமிழர் பண்டிகையை கொண்டாடும் உற்சாகத்தில் பெண்கள் இருந்தனர். கரும்பு, நொறுக்கு தீனிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை கொண்டு வந்து தங்கள் தோழிகள், உறவு பெண்களுடன் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து ஒலிப்பெருக்கிகள் வைத்து சினிமா பாடல்களை இசைக்க விட்டு குத்தாட்டம் போட்டு கலக்கினர். கோலாட்டம், குத்தாட்டம் என்று பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
இல்லத்தரசிகள் பலரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியதை பார்த்து, அவர்களின் மகள்களே ஆச்சரியப்பட்டு கட்டிப்பிடித்து வாழ்த்தினார்கள். பூங்காவில் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் அனைத்து பகுதிகளிலும் தற்போது எதிரொலித்து வருகிறது.
ஊஞ்சலாடுதல், பந்து போட்டு பிடித்தல், கண்கட்டி விளையாட்டு, கபடி, விரட்டிப்பிடித்தல் என்று பெண்கள் குதூகலத்துடன் விளையாடினார்கள்.
பூங்காவுக்குள் வந்ததும் தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்து உட்கார்ந்து கொண்டு தங்களுக்கு தெரிந்தவர்கள், தோழிகளுக்காக பெண்கள் காத்து இருந்தனர்.
ஒவ்வொருவராக வந்ததும் அவர்கள் உற்சாகத்தில் ஓடிச்சென்று கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஒரு ஆண்டுக்கு முன்பு காணும் பொங்கல் விழாவில் பார்த்து பழகிய தோழிகளை அடையாளம் கண்டு மகிழ்ச்சியுடன் நலம் விசாரித்தனர்.
0 coment rios: