ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், குழுத் தலைவரும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். இணைத் தலைவரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பராயன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாச்சலம் (அந்தியூர்) மற்றும் சரஸ்வதி (மொடக்குறிச்சி) ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டங்களின் கீழ், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி அவாஸ்யோஜனா, தீனதயாள் அந்தோதயா யோஜனா, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ரெயில்வே, நெடுஞ்சாலை, சுகம்யா பாரத் அபியான் உள்ளிட்ட பல்வேறு திட்ட செயலாக்கங்கள் குறித்து, கண்காணிப்புக் குழுவின் தலைவர் கணேசமூர்த்தி எம்.பி., துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், மேலும், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, மாவட்ட வன அலுவலர் (ஈரோடு) வெங்கடேஷ் பிரபு, மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ் (பொது), ஜெகதீசன் (வளர்ச்சி), மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: