இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில், வருகிற 15ம் தேதி திண்டல் அருகே அமைந்துள்ள வேளாளர் கல்வியியல் கல்லூரி நிறுவன வளாகத்தில் காலை 9 மணி முதல் மாபெரும் கல்விக் கடன் வழங்கும் விழா நடைபெற உள்ளது. விழாவில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியாளர்களும் மற்றும் தனியார் வங்கியாளர்களும், அரசு அதிகாரிகளும், கல்லூரி நிர்வாகிகளும் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்று தகுதியானவர்களுக்கு கல்விக்கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்விக்கடனுக்கு தற்போது கல்லூரியில் படித்து வரும் ஈரோடு மாவட்ட இளங்கலை மற்றும் முதுகலை சார்ந்த முதலாமாண்டு முதல் இறுதியாண்டு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இம்மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டு வெளி மாவட்டத்தில்/ மாநிலத்தில் பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல், நர்சிங், பார்மஸி, கலை மற்றும் அறிவியல், கல்வியியல் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in அல்லது www.jansamarth.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, விண்ணப்பத்தின் நகலுடன் முகாமில் பங்கேற்கலாம்.
முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மூலம் பரிசீலிக்கப்பட்டு, உரிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கடன் ஆணை வழங்கப்படும். முகாமில் பங்கேற்கும் மாணவர்கள், உரிய ஆவணங்கள், விண்ணப்ப நகல், மாணவர் மற்றும் பெற்றோரின் 2 புகைப்படம், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று, பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட கல்விக் கட்டண விவரம் மற்றும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று, முதல் பட்டதாரி என்றால் அதற்கான சான்று ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
மேற்கண்ட சான்றிதழ்கள் இல்லாதவர்களும் கல்வி கடன் நடக்கும் முகாமில் கலந்துகொண்டு புதிதாக விண்ணப்பித்து கல்விக் கடனை பெற்றுக்கொள்ளலாம். மேலும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட கல்லூரி சேர்க்கைக்கான ஆணையை கொண்டு வர வேண்டும். ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்விக் கடன் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: