திங்கள், 19 பிப்ரவரி, 2024

தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் அறிக்கை

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க ஈரோடு மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற பின், திங்கட்கிழமை (பிப்.19) இன்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில், மகளிர் மேம்பாடு உள்ளிட்ட சில அம்சங்கள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதே நேரத்தில் தமிழக முதல்வர் தேர்தல் காலத்தில் அறிவித்த 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு நீண்ட காலமாக அகவிலைப்படி வழங்காதது குறித்தும், இந்த முறையும் நிதிநிலை அறிக்கையில் எந்தவிதமான அறிவிப்பும் தெரிவிக்காதது ஓய்வூதியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

நிதியமைச்சர் வள்ளுவர் வாக்கு என்றுமே பொய்க்காது என ஆரம்பித்து தமிழக முதல்வருடைய தகப்பனார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கருணை இருக்கிறது. ஆனால் நிதி இல்லை என்று அன்றைய நாளில் 8 அகவிலைப்படியினை அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் அளிக்கவில்லை. சென்னை பூந்தமல்லி அருகில் 150 ஏக்கர் பரப்பளவை ஒதுக்கி 500 கோடி செலவில் தொழில் நுட்ப வசதிகளோடு கூடிய "கனவுத் தொழிற்சாலை" அமைக்க திறனுள்ளதாக அறிவிக்கின்ற இந்த அரசு ஆண்டாண்டு காலமாக ஓய்வூதியர்களுக்கு வழங்கவேண்டிய உரிமையான நிதியினை வழங்காதது மிகப் பெரிய தவறு.

"அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" என தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்று நிதிநிலை அறிக்கையின் போது பறைசாற்றிய நிதியமைச்சர் இதே போன்று பேசிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போல மழுப்பலான நிதி நிலை அறிக்கையையே சமர்ப்பித்துள்ளார். இறுதியாக வளமான தமிழக அரசு என்று ஆரம்பித்து இறுதியில் 94,060 கோடி பற்றாக்குறை பட்ஜெட் என அறிவித்துள்ளது அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர் மற்றும் மருத்துவக் காப்பீடு தொடர்பாக இதுநாள் வரை அவர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகை எந்தக் கடலில் சேர்கிறது என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது. 

சட்டமன்ற விவாதங்களின் போதோ அல்லது 110 விதியின் படியோ தமிழக முதல்வர் ஓய்வூதியர்கள் நிலுவைக் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா.? பார்ப்போம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: