வியாழன், 29 பிப்ரவரி, 2024

சத்தியமங்கலம் அருகே பலகார சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது புகார்

சத்தியமங்கலம் அருகே பலகார சீட்டு நடத்தி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுத்து பணம் திரும்ப பெற்றுத் தர வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் வசித்து வரும் அன்னக்கொடி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த மனுவின் விபரம் வருமாறு:- நாங்கள் வசிக்கும் ஊருக்கு திருமணமாகி வந்தவர் ராதிகா. அவரது கணவர் பெயர் ஆனந்தகுமார். இவரது தாயார் ஊர் புன்செய்புளியம்பட்டி அருகில் உள்ள எரங்காட்டுப்பாளையம் ஆகும். எரங்காட்டுப்பாளையத்தில் உள்ள பெண்கள் மத்தியில் ஸ்ரீ செல்வகணபதி மார்க்கெட்டிங் ஏஜென்சி என்ற பெயரில் வாரா வாரம் சேமிப்பு சீட்டுகளை நடத்தினார்.

ஒரு வருடத்திற்கு வாரம் ரூ.100 முதல் ரூ.500- வரை பெற்று பொங்கல் பண்டிகையின் போது பலகாரம், பாத்திரங்கள், புடவை, வாஷிங்மெஷின், மேஜை, நாற்காலி, கட்டில் ஆகியவை வாங்கிக் கொடுக்கப்படும் என்றும், சேமித்த பணத்திற்கு மேல் கூடுதலாக கொடுப்போம் என்றும் சொன்னார்கள். இந்த ஏஜென்சியின் உரிமையாளர் புன்செய்புளியம்பட்டி காந்தி நகரை சேர்ந்த மாகாளி மகன் விஜயகுமார் எனக் கூறப்படுகிறது.

இவரிடம் நான் 2018 -ம் ஆண்டு வாரம் ரூ.100- வீதம் செலுத்தும் சீட்டு ஒன்று போட்டு வாரா வாரம் பணம் கொடுத்து வந்தேன். இந்த ஆண்டின் முடிவில் நான் கட்டிய தொகையும், வட்டியுமாக கொடுத்துவிட்டார். அதன்பின் 2019 -ல் வாரம் ரூ.200- ம், 2020-ம் வருடம் வாரம் 300- ம் செலுத்தினேன். இந்த இரண்டு வருடங்களுக்கு கட்டிய தொகையை திரும்ப கொடுத்துவிட்டார். அதன்பின் 2021-ஆம் ஆண்டு வாரம் ரூ.500- வீதம் செலுத்தினேன். ஆண்டின் முடிவில் முந்தைய ஆண்டுகளைப் போல பணம் தரவில்லை. கால அவகாசம் கேட்டார்.

வரவு வைத்த அட்டையை திரும்ப வாங்கிக் கொண்டு 2022-ஆம் ஆண்டுக்கு புதிய அட்டை கொடுத்து அடுத்த சீட்டும் துவங்கினார். அதற்கும் ஆறு வாரங்கள் தொடர்ந்து பணம் கொடுத்தேன். இவ்வாறு நானும் ராதிகா என்பவரும் சீட்டு போட்டு வந்ததை பார்த்து எங்கள் ஊரைச் சேர்ந்த மேலும் சில பெண்களும் சீட்டு போட்டனர். அவர்களுக்கும் 2019, 2020 ஆம் ஆண்டுகளில் செலுத்திய தொகையை திரும்பக் கொடுத்து விட்டார். இவர்களுக்கும் 2021-ஆம் ஆண்டு செலுத்திய தொகையை எதுவும் தரவில்லை. தொகையை திரும்ப கேட்டோம். அவர் எங்களுக்கு பணம் கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

தற்போது இரண்டு ஆண்டுகள் முடிந்தும் எங்களுக்கு பணம் தரவில்லை ஏமாற்றி விட்டார். தற்போது அவர் தனது செல்போன் நம்பரை மாற்றி விட்டார் எனத் தெரிவித்துள்ளார். எங்களைப் போலவே இவரால் ஏமாற்றப்பட்டவர்களில் திருப்பூர் மாவட்டம் அவினாசி நல்லிக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த 8 பேர் உள்ளனர். அதுகுறித்த புளியம்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. எனவே, மேற்படி விஜயகுமார் என்பவரால் ஏமாற்றப்பட்டுள்ள நானும் என் போன்ற 15 பேரும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களாவோம்.

இப்புகாரின் மீது நடவடிக்கை எடுத்து மோசடி செய்து ஏமாற்றிய புன்செய் புளியம்பட்டி, காந்திநகர், புதுக்காலனியைச் சேர்ந்த மாகாளி மகன் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கவும், நாங்கள் செலுத்திய தொகை திரும்பப் பெற்றுக் கொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: