வியாழன், 8 பிப்ரவரி, 2024

அரசின் நலத்திட்டங்களை மக்களிடையே பரப்புரை செய்வதில் அரசின் தூதர்களாக சுய உதவிக்குழு பெண்கள் செயல்பட வேண்டும்: அமைச்சர் உதயநிதி

அரசின் நலத்திட்டங்களை மக்களிடையே பரப்புரை செய்வதில் அரசின் தூதர்களாக சுய உதவிக்குழு பெண்கள் செயல்பட வேண்டும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
ஈரோடு மாவட்டம் சோலார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரூ.129.92 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.6.16 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு ரூ.171.07 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில், அமைச்சர் உதயநிதி பேசுகையில், ஈரோடு வந்தாலே என் தாய் வீட்டிற்கு வந்தது போன்ற உணர்வை எனக்கு தருகிறது. பகுத்தறிவு பகலவன் பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு மாவட்டம், திராவிட இயக்கத்தின் தொட்டிலாகும். பெண்கள் பொருளாதார சுதந்திரம் மற்றும் தற்சார்பு பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் 1989ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் சுய உதவிக்குழு இயக்கம் துவங்கப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் செயல்படுவது அவர்களின் திட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

இந்த ஆட்சியில், 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 12,25,083 சுய உதவிக் குழுக்களுக்கு 69,554 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கி சாதனை புரிந்துள்ளோம். 2023-2024ம் நிதியாண்டிற்கு வங்கி கடன் இணைப்பு வழங்குவதற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி சாதனை படைத்துள்ளது. மீதமுள்ள இலக்கையும் அடைந்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு சுய உதவிக்குழு மகளிரே காரணம். திமுக அரசு அமைந்த பிறகு முதலமைச்சர் முதலில் கையெழுத்திட்ட திட்டம் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சலுகை என்ற உன்னதமான திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் ஒரு பெண் ஒரு மாதத்திற்கு ரூ.900 வரை சேமிக்க முடிகிறது. அதேபோல் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்" இன்று குடும்பத் தலைவிகளான பெண்களுக்கிடையில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினரான நீங்கள் அனைவரும் அரசின் தூதுவர்களாக செயல்பட வேண்டும். கிராமப்புற சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை நகரப் பகுதிகளில் விற்பனை செய்திட ஏதுவாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வணிக வளாகங்கள் அமைக்க ஆணையிட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி. அந்த வணிக வளாகங்களுக்கு 'பூமாலை வணிக வளாகம்' எனப் பெயரிட்டு மகிழ்ந்தார். நாளடைவில் பராமரிப்பின்றி பயனற்று போன அந்த வளாகங்களைப் புதுப்பித்து, மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்.

கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் "புதுமைப் பெண் திட்டம்" இன்று பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை எப்போதும் விற்பனை செய்திட ஏதுவாக சென்னை. நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள "மதி அனுபவ அங்காடி" திறந்து வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களை இணைய தளத்தில் விற்பனை செய்திடும் வகையில் "மதி சந்தை விற்பனை இணைய தளம்", சிறுதானியங்களை விற்பனை செய்திட ஏதுவாக "மதி சிறுதானிய உணவகம்" போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

சுய உதவிக்குழு மகளிருக்கான உங்களுக்கு வழங்கப்படும் வங்கி கடன் தொகையை நமது அரசு கடன் தொகையாக பார்க்காமல் உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான நம்பிக்கை தொகையாகத் தான் பார்க்கிறது. அதனை நீங்கள் நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சரின் ஆணைங்கிணங்க இன்று தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 37,305 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 3,00,563 மகளிருக்கு 2,504 கோடி ரூபாய் அளவிலான வங்கிக் கடன் இணைப்புகள் வழங்குவதுடன், மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாகனங்களில் ஏற்றிச் சென்று விற்பனை செய்திடும் வகையில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டிலான 100 மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்களையும் மற்றும் நலத் திட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளது.

இதன் தொடக்க நிகழ்வாக இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் 2,337 குழுக்களைச் சேர்ந்த 20,518 மகளிர் பயன்பெறும் வகையில், சுய உதவிக் குழுக்களுக்கு 100.34 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளும் மற்றும் 6 மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கப்படுகிறது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை. கால்நடை பராமரிப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை. நெடுஞ்சாலைத்துறை. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.129.92 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 46 புதிய திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.6.16 கோடி மதிப்பீட்டில் 32 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். மேலும் பல்வேறு துறைகளின் 9948 பயனாளிகளுக்கு ரூ.70.56 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளேன். இந்நிகழ்வைத் தொடந்து, அனைத்து மாவட்டங்களிலும், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள், மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.


விழாவில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, அரசு முதன்மைச் செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முனைவர் செந்தில்குமார், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் இயக்குநர் ஸ்ரேயா சிங், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார். ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி 1வது மண்டல தலைவர் பி.கே பழனிச்சாமி, திமுக நெசவாளர் அணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், திமுகவின் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கே இ பிரகாஷ், திமுகவின் கொள்கை பரப்புச் துணைச் செயலாளர் வி.சி சந்திரகுமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திருவாசகம், திமுக தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இளையகோபால் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: