சனி, 10 பிப்ரவரி, 2024

பர்கூரில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க கூடாது: அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியை தமிழக அரசு தந்தை பெரியார் வனவிலங்குகள் சரணாலயமாக அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளது. இதற்கு அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பொது மக்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் பர்கூர் காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சி சார்பில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு, பவானி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி தலைமை தாங்கினார். அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் பாபு, வனத்துறையினர் மற்றும் பழங்குடியினர் சங்கத்தின் மாநில தலைவர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில், தந்தை பெரியார் வன விலங்கு சரணாலயம் அறிவிப்பை நிறுத்தி வைத்து, 'வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006' வழங்கியுள்ள உரிமைகளை மக்களுக்கு வழங்க வேண்டும். அதே போல் வனவிலங்கு சரணாலயத்தில் கால்நடைகள் மேய்ப்பதை தடை செய்கின்ற கோர்ட் உத்தரவை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, பேச்சுவார்த்தை முடிவில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூறும் போது, 'பர்கூர் வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) அந்தியூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என்றனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: