ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள திகினாரை கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள மானாவாரி நிலத்தில் பசுமாடுகள் மேய்ந்து கொண்டு இருந்தபோது திடீரென வெடிச்சத்தம் கேட்டது. உடனே அப்பகுதி விவசாயிகள் அருகே சென்று பார்த்தபோது அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசு மாடுகளில் இரண்டு பசு மாடுகளின் தாடை கிழிந்து ரத்தம் வடிந்த நிலையில் இரண்டு மாடுகளும் கத்தியது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த கால்நடை மருத்துவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த மாடுகளுக்கு சிகிச்சை அளித்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த 2 மாடுகளும் உயிரிழந்தன. இதுகுறித்த புகாரின் தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காட்டுப்பன்றியை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த போது அது வெடித்ததில் மாடுகள் உயிரிழந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை வைத்த தாளவாடியை அடுத்த சூசைபுரத்தை சேர்ந்த தொழிலாளர்களான லூர்து ராஜ் என்கிற தன்னா (வயது 45), திகினாரையை சேர்ந்த ரங்கசாமி (வயது 37) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் ஜீர்கள்ளி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் அவர்களிடம் விசாரிக்கின்றனர்.
0 coment rios: